மேலும்

தமிழர்கள் மீதான சித்திரவதை – குற்றச்சாட்டை நிராகரிக்கிறார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

kapila Waidyaratneதமிழ்ப் போராளி சந்தேகநபர்கள் மீது சித்திரவதைகள் மற்றும் பாலியல் வல்லுறவுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, இது ஐரோப்பாவில் அரசியல் தஞ்சம் கோருவதற்காக கூறப்பட்ட குற்றச்சாட்டு என்று தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் தற்போதைய ஆட்சிக்காலத்தில், கைது செய்யப்பட்ட 50 இற்கும் அதிகமானோர் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், பாலியல் ரீதியான வதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அண்மையில் ஏபி செய்தி நிறுவனம் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டிருந்தது.

ஐ.நா அமைதிப்படை பாதுகாப்பு அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் பங்கேற்க கனடாவின் வன்கூவர் நகருக்கு வந்திருந்த, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவிடம், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஏபி செய்தி நிறுவனம் கேள்வி எழுப்பியிருந்தது.

அதற்கு அவர் “இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. ஆதாரமற்றவை.

பாலியல் மீறல்கள் மற்றும் சித்திரவதைகள் விடயத்தில், சிறிலங்கா அரசாங்கம் சகிப்புத்தன்மையற்ற  கொள்கையை கடைப்பிடிக்கிறது.

சிறிலங்கா அரசாங்கம் எல்லாக் குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரித்துள்ளது. மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் முடிவடைந்து, அவை மூடப்பட்டு விட்டன.

சிலவேளைகளில் நட்புக்கரங்களால் கூட இவை நிகழ்கின்றன. அவர்கள் கூறுவதன் அடிப்படையில் மாத்திரம், குற்றச்சாட்டுகளை கருத்தில் கொள்ளக் கூடாது. ஏனையவர்களின் கருத்துக்களையும் அறிய வேண்டும்.இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருந்தால், சிறிலங்கா அரசாங்கம் சுதந்திரமான விசாரணையை வரவேற்கும்.

இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சிறிலங்காவுக்கான உதவிகள் குறைக்கப்பட வேண்டும் என்று கோருவது, நியாயமற்றது.

இது ஒரு பகுதி மக்களுடன் தொடர்புடைய விடயம் அல்ல. இது எல்லோருக்குமானது. நிதி உதவிகள் ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவுக்கு உரியதல்ல.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *