மேலும்

கடற்படை மருத்துவமனையில் சுகபோகம் – கொமடோர் தசநாயக்கவை வெலிக்கடைக்கு மாற்ற உத்தரவு

commander D K P Dassanayakeசிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி.தசநாயக்கவை, கடற்படை மருத்துவமனையில் இருந்து, வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றுமாறு, கொழும்பு கோட்டே, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பில் தமிழ் இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட கொமடோர் டி.கே.பி.தசநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக, வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவர் வெலிசறை கடற்படை மருத்துவமனையில் இருந்து வருகிறார்.

எனினும், ஒரு விளக்கமறியல் கைதிக்குரிய வழக்கமான நடைமுறைகளுக்கு மாறாக, கடற்படை மருத்துவமனையில் சிறப்பு வசதிகளுடன் அவர் தங்கியிருப்பதாக செய்யப்பட்ட முறைப்பாடுகளை நீதிமன்றம் கவனத்தில் கொண்டிருந்தது.

கொமடோர் டி.கே.பி.தசநாயக்கவுக்கு, கடற்படை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் அளவுக்கு தீவிரமான உடல்நலப் பிரச்சினை இல்லை என்று மருத்துவ அதிகாரி சான்றளித்துள்ளார்.

இதையடுத்து, நேற்று கோட்டே நீதிவான் லங்கா ஜெயரத்ன , கொமடோர் டி.கே.பி.தசநாயக்கவை கடற்படை மருத்துவமனையில் இருந்து, வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 12ஆம் நாள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாளில் இருந்து அவர், தொடர்ச்சியாக சிறைச்சாலை மருத்துவமனை மற்றும் கடற்படை மருத்துவமனையிலேயே இருந்து வந்துள்ளார்.

கொமடோர் டி.கே.பி.தசநாயக்கவை எதிர்வரும் 29ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கவும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *