மேலும்

இரண்டு காவல்துறையினருக்கும் விளக்கமறியல் – இன்று இறுதிச்சடங்கு நடப்பதால் பாதுகாப்பு அதிகரிப்பு

police-fire-jaffna-deadமணல்காடு பகுதியில் மணல் ஏற்றிச் சென்றதாக கூறப்படும் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சிறிலங்கா காவல்துறையினரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டில், துன்னாலையைச் சேர்ந்த யோகராசா தினேஸ் என்ற 24 வயதுடைய இளைஞன் கொல்லப்பட்டதையடுத்து, அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் என்ற குற்றச்சாட்டில், பருத்தித்துறை காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் சிவராசா சஞ்சீவன், காவலர் மொகமட் முபாரக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் நேற்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் நிறுத்தப்பட்ட போது, ஜூலை 24ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இதையடுத்து, இவர்கள் இருவரும் அனுராதபுர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அதேவேளை, உயிரிழந்த இளைஞனின் இறுதிச் சடங்னு இன்று துன்னாலையில் இடம்பெறவுள்ளது.

நேற்று துன்னாலை பகுதியில் ரயர்கள் எரிக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்று இறுதிச்சடங்கு நடைபெறவுள்ள நிலையில், அங்கு பதற்றம் ஏற்படலாம் எனக் கருதி, வடமராட்சியில் அதிகளவு காவல்துறையினரும், சிறப்பு அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *