மேலும்

சட்டங்களை மதத் தலைவர்களே தீர்மானித்தால் நாடாளுமன்றத்தில் நாங்கள் எதற்கு? – சுமந்திரன்

sumanthiranஅரசியலமைப்புச் சட்ட வரைவை மக்கள் முன் வைத்து, அவர்களின் கருத்தை அறியும் பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ‘மக்களுக்கு ஆரம்பத்தில் அளித்த வாக்குறுதியை சிறிலங்கா அரசாங்கம் காப்பாற்ற வேண்டும். பல்வேறு தடைகளைத் தாண்டி வந்துள்ள அரசியலமைப்பு சீர்திருத்தப் பணியை முடிக்க வேண்டும்.

அரசியலமைப்புச் சட்ட வரைவை மக்கள் முன் வைத்து, அவர்களின் கருத்தை அறியும் பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.

நன்கு அறியப்படுத்தி, ஆலோசனை வழங்கினால் பெரும்பான்மையான மக்கள், சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். சிறிலங்கா அரசாங்கம் அதனை தைரியமாகச் செய்ய வேண்டும்.

மதத் தலைவர்கள் நாட்டின் சட்டங்களைத் தீர்மானிப்பார்களாக இருந்தால், நாங்கள் ஏன் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்க வேண்டும்?

நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவை. எல்லா சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அர்த்தபூர்வமான அரசியலமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான பொன்னான வாய்ப்பை அரசாங்கம் இழந்து விடக்கூடாது.

உப குழுக்கள் பல மாதங்களாக அமர்ந்து, தமது அறிக்கைகளை நிறைவு செய்திருக்கின்றன. வழிநடத்தல் குழுவும், 60 கூட்டங்களை நடத்தியிருக்கிறது. இந்தக் கட்டத்தில், இந்த விடயம் தோல்வியடைய அனுமதிக்கப்படக் கூடாது.

புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கு இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். அந்த ஆணையை மதிக்க வேண்டும்.

புவுதிய அரசியலமைப்புக்காகவே, கூட்டு அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டது.ஜேவிபியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்க்கட்சியில் இருந்தாலும், இதற்காகவே அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கின” என்றும் அவரை் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *