மேலும்

சிவராம் கொலையுடன் தொடர்பில்லை – முதல்வரின் குற்றச்சாட்டை மறுக்கிறார் சிவநேசன்

sivanesanஊடகவியலாளர் சிவராம் கொலையுடன் தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இது தொடர்பாக தம்மை யாரும் விசாரணை செய்யவில்லை என்றும்,  வடக்கு மாகாண சபை உறுப்பினர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு நேற்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வடக்கு மாகாண சபையில் வெற்றிடமாகியிருந்த இரண்டு அமைச்சுப் பதவிகளை நிரப்புவதற்காக, தனக்கு ஆதரவளித்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்களிடமிருந்து சுயவிவரக் கோவையை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியிருந்தார்.

சுயவிவரக் கோவை அனுப்பிய உறுப்பினர்களில் ஒருவரான, புளொட் அமைப்பைச் சேர்ந்த, சிவநேசனுக்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதில் ஊடகவியலாளர் சிவராம் கொலையில் உங்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதால் – கருதப்படுவதால் அமைச்சுப் பதவியை வழங்க முடியாமல் இருக்கின்றது என்று முதலமைச்சர் காரணம் கூறியிருந்தார்.

இந்தக் கடிதத்தின் விபரங்கள், நேற்று யாழ். நாளிதழ் ஒன்றில் வெளியானதை அடுத்து, முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர், சிவநேசன், வடக்கு மாகாண முதலமைச்சருக்கு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர், “இன்றைய  ‘உதயன்’ நாளிதழில் தலைப்புச் செய்தி தொடர்பாக தங்களின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன் எனதும், எனது கட்சியினதும் மன உளைச்சலைகளையும் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

தாங்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த சில விடயங்கள் பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக வரும்வகையில் வெளியே கிடைக்கச் செய்தமை, முதலமைச்சருக்கும் மாகாணசபை உறுப்பினருக்கும் இடையில் இருக்கக்கூடிய தனிப்பட்ட கருத்துப் பரிமாற்றங்களை பெறுமதியற்றதாக்கியுள்ளது. மாகாணசபை உறுப்பினர்களிடம் பெறப்பட்ட சுயவிவரக் கோவைகளும் அதற்கான பதில்களும் பகிரங்கமாக்கப்படுவதில் மாகாணசபை தலைமையின் ஆளுமை விவாதத்திற்கு உரியதாகிறது.

எனக்கு தாங்கள் தந்த பதில் கடித்தின் பிரகாரம், சிவராம் (தராக்கி) வழக்கு விடயத்தில் முழுமையான விபரங்களை தாங்கள் பெற்றிருக்கவில்லை என்பது புரிந்து கொள்ளப்படுகின்ற அதேவேளை, இது தொடர்பான தங்களின் என்மீதான சந்தேகமான நிலைப்பாடு எனக்கும், எனது குடும்பத்திற்கும், நான் சார்ந்த கட்சிக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்பதைத் தெரியப்படுத்துகின்றேன்.

நீங்கள் அறிந்த சிவராம் ஓர் பத்திரிகையாளர். ஆனால் எம்மைப் பொறுத்தவரையிலும் சிவராம் எமது கட்சியின் (புளொட்) முன்னாள் செயலாளர் என்பதுடன் இந்திய – இலங்கை ஒப்பந்த காலத்திற்கு முற்பட்ட ஓர் ஆயுதம் தாங்கிய எமது இயக்க போராளி. 2005ஆம் ஆண்டு கொல்லப்பட்ட அவரது கொலை வழக்கு நீண்டகாலமாக நீதிமன்றத்தில் நடைபெற்று முடிவுக்கு வந்தவொரு விடயம்.

சிவராம் வழக்கில் பொலிஸாரோ, புலனாய்வுப் பிரிவினரோ என்னை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்த வகையிலும் குற்றம் சாட்டவோ அல்லது விசாரணக்கு உட்படுத்தவோ இல்லை. அரசியல் ரீதியாகவோ அல்லது ஊடகங்கள் வாயிலாகவோ எவருமே என்னை இது தொடர்பில் எந்தச் சந்தர்ப்பத்திலும் குற்றம்சாட்டியதோ அல்லது குறிப்பிட்டதோ கிடையாது. இவ்விடயத்தில் நான் எந்த விதத்திலும் தொடர்புபட்டிருக்கவில்லை என்பது மிகத் தெளிவாக அனைவருக்குமே தெரிந்த விடயம்.

வடக்கு மாகாண சபையில் நான் உறுப்பினராக வந்த காலந்தொட்டே தங்கள் நோக்கங்களையும், திட்டங்களையும் முன்னிறுத்திச் செயற்படும் ஒருவனாகவே இருந்துள்ளேன். வட மாகாண சபையில் நான் முதலமைச்சர் சார்பான அணிக்குரியவனாகவே அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறேன்.

முல்லை மாவட்டத்தின் அபிவிருத்திக்காக பல சந்தர்ப்பங்களில் தொடர்ச்சியாக போராடிவரும் நான், அமைச்சர் சபையில் முல்லை மாவட்டத்தின் பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும் என்று தங்களிடம் பலமுறை கோரிக்கையினை முன்வைத்துள்ளேன். இது எனக்கு அமைச்சு பதவியை கோரியதாக அர்த்தப்படாது. நானோ எனது கட்சியோ எந்தக் காலத்திலும் அமைச்சுப் பதவிக்காக எவரிடமும் கோரிக்கை வைத்தது கிடையாது.

அதே நேரத்தில் பல இடங்களில் புதிய அமைச்சரவையின் நியமனங்கள் பற்றி மறைமுகமாக தாங்கள் தெரிவித்திருந்த கருத்துக்களின்படி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சி மற்றும் முல்லை மாவட்ட பிரதிநிதித்துவம் எனும் இரண்டு அடிப்படைகளில் இரண்டாவது சந்தர்ப்பத்தில் அமைச்சர் பதவி எமது கட்சிக்கு கிடைக்கலாம் என்ற கருத்து பரவலாக காணப்பட்டது. அதில் ஒரு நியாயம் இருப்பதாகவே நானும் கருதுகிறேன்.

எனது அரசியல் வளர்ச்சியை பொறுக்க முடியாதவர்களாகவும் முல்லை மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவி கிடைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாகவும் உள்ள என்மீதோ அல்லது என் கட்சிமீதோ அரசியல் குரோதம் கொண்ட சிலரால் தாங்கள் தவறாக முடிவுக்கு இட்டுச்செல்லப்பட்டுள்ளீர்கள் என்பதே எனது புரிதலாகவுள்ளது.

இந்த விடயம் சம்பந்தமான கலந்துரையாடலுக்கு எனக்கு எந்த ஒரு சந்தர்ப்பமும் வழங்காமல், என் கருத்துக்களையோ விளக்கங்களையோ பெறாமல் சந்தேகங்கள் நிறைந்த முடிவுக்கு வந்ததும் அவை பத்திரிகைகளில் வெளிவரும் சூழலை உருவாக்கியதும் மாபெரும் தவறு என்றே நான் கருதுகிறேன்.

முதலமைச்சராகிய உங்களை பதவியிலிருந்து விலக்க முயன்ற நேரத்தில் உங்களை விலத்த முடியாதவாறு எனது கட்சியும் நானும் உங்ளுக்கு உறுதுணையாக நின்றோம். இதனால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியே 12 வருடங்களுக்கு முன்பு நடைபெற்று நீதிமன்றத்தில் நிறைவுபெற்ற ஒரு சம்பவத்தை மீண்டும் கிண்டியெடுத்து உங்களையும், என்னையும், எனது கட்சியையும் களங்கப்படுத்தும் ஒரு சதிச்செயலே இதுவென நான் கருதுகிறேன்.

நீங்களும் தமிழ் மக்களும் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற காரணத்திற்காகவே நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன் ” என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *