மேலும்

சிறிலங்காவுக்காக போட்டி போடும் இந்தியாவும் சீனாவும்

india-chinaசிறிலங்காவில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில்,  பொருளாதார ஒத்துழைப்பின் ஊடாக சிறிலங்கா அரசாங்கத்துடன் உறவுகளைப் பலப்படுத்துவதற்கான வழிவகைகளை இந்தியா தேடிக்கொண்டிருக்கிறது.

உலகின் சுறுசுறுப்பாக இயங்கி வரும் கப்பல் வழிகளில் ஒன்றாக சிறிலங்காவின் இந்திய மாக்கடல் மீதான கேந்திர முக்கியத்துவம் அமைந்துள்ள நிலையில் இது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த சில வாரங்களின் முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை புதுடில்லியில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். அத்துடன் அண்மையில் சிறிலங்காவிற்கான தனது உத்தியோகபூர்வ பயணத்தின் போதும் நரேந்திர மோடி, ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தியாவின் தலைநகரில் இவ்விரு தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையில் எதிர்காலத்தில் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டது. இந்த உடன்படிக்கையின் படி இலங்கைத் தீவில் கட்டுமானத் திட்டங்களை மேற்கொள்வதற்கு இந்தியா முதலீடு செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

2014ல் இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்றதன் பின்னர் அண்மையில் இரண்டாவது தடவையாக சிறிலங்காவிற்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தமையானது இரு நாடுகளின் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதையே சுட்டிநிற்கிறது. சிறிலங்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு தற்போது முன்னேற்றமடைவதால் சிறிலங்கா மீதான சீனாவின் பிடி தளர்வடையும் என இந்தியா நம்புகிறது.

சீனா தனது முத்துமாலை மூலோபாயத்தின் ஒரு பகுதியாக அண்மைக்காலங்களில் சிறிலங்காவின் கட்டுமானத் திட்டங்களுக்காக அதிகளவில் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. சீனா தனது முத்துமாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக தென்னாசிய நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஸ், மியான்மார், சிறிலங்கா போன்ற பல நாடுகளில் துறைமுகங்கள் மற்றும் ஏனைய கட்டுமானங்களை அமுல்படுத்தி வருகிறது. இதனுடைய ‘ஒரு அணை ஒரு பாதை’ என்கின்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, சீனாவை மேற்குலகுடன் தொடர்புபடுத்துவதற்கான புதிய வர்த்தகப் பாதையை பல பில்லியன் டொலர் செலவில் அமைத்து வருகிறது. ranil-xi jinping

இலங்கைத் தீவில் சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதால், சிறிலங்காவுடன் தான் கொண்டிருக்கும் வர்த்தக மற்றும் கலாசார சார் தொடர்புகள் பாதிக்கப்படலாம் என இந்தியா கவலை கொள்கிறது. குறிப்பாக சிறிலங்காவில் வாழும் சிறுபான்மைத் தமிழ் மக்களில் ஒரு சாரார் கொலனித்துவ காலத்தில்  தமிழ் நாட்டிலிருந்து தோட்டத் தொழில் நிமித்தம் சிறிலங்காவிற்குச் சென்றிருந்தனர். இவ்வாறான வரலாற்று முக்கியத்துவம் மிக்க உறவானது சீனாவின் செல்வாக்கினால் பாதிக்கப்பட்டு விடும் என இந்தியா கவலையுறுகிறது.

சிறிலங்காவின் தற்போதைய அதிபரான மைத்திரிபால சிறிசேன பிராந்திய வல்லரசுகளுடன் சமநிலையான உறவைப் பேணுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சிறிலங்காவின் தற்போதைய பிரதமர் தொடர்புகளைப் பேணி வருகிறார்.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சிறிலங்கா, சீனாவிடமிருந்து பொருளாதார மற்றும் இராஜதந்திர சார் உதவிகளைப் பெற்றது. சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது பல்வேறு யுத்த மீறல்கள் இடம்பெற்றதால் அதனை எதிர்த்து சிறிலங்காவிற்கு எதிராக மேற்குலக நாடுகளால் தடை விதிக்கப்படும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் சீனாவுடன் சிறிலங்கா நெருக்கமான தொடர்பைப் பேணியது.

போரின் பின்னர் சீனாவே சிறிலங்காவின் மிகப்பாரிய முதலீட்டாளராக மாறியது. போரின் போது அழிவடைந்த கட்டுமானங்களைத் திருத்துவதற்காகவும் புதிய திட்டங்களை அமுல்படுத்துவதற்காகவும் பல நூறு மில்லியன் டொலர்களை சிறிலங்காவில் சீனா முதலிட்டது. சிறிலங்காவில் பல்வேறு மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதால் மேற்குலக நாடுகளின் உதவி சிறிலங்காவிற்கு மறுக்கப்பட்டது. இதனால் சீனா தனது சொந்தப் பொருளாதார நலன்களை அடைந்து கொள்வதற்கான திட்டங்களை அமுல்படுத்தியது. இதன் மூலம் பிராந்தியத்தின் மிக முக்கிய மையமாக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கின்ற நோக்கை கொழும்பு அடைவதற்கு துணை நின்றது.

சிறிலங்காவிற்கு சீனாவால் வழங்கப்பட்ட நிதி பல்வேறு கட்டுமானங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக வீதிகள், விமானநிலையங்கள், கப்பல் துறைமுகங்கள் போன்ற பல கட்டுமானங்களை நிர்மாணிப்பதற்கு உதவியுள்ளது. அத்துடன் அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி மற்றும் கொழும்புத் துறைமுகத் திட்டம் போன்ற பாரிய இரு திட்டங்களை அமுல்படுத்துவதற்கும் சீனா முதலீடு செய்துள்ளது. இவ்விரு திட்டங்களையும் அமுல்படுத்துவதில் பல தடைகள் ஏற்பட்டுள்ளன.

சிறிசேன அரசாங்கத்தால் முன்னர் இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் தொடர்வதற்கு சிறிசேன பின்னர் அனுமதித்தார். இதேபோன்று சீனாவிடமிருந்து பெற்ற கடனை மீளச் செலுத்துவதில் சிறிலங்கா பல இடர்களை எதிர்நோக்கியதால் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 சதவீதத்தை 99 ஆண்டு கால குத்தகையில் 1.12பில்லியன் டொலருக்கு வழங்குவதெனத் தீர்மானித்தது.

இத்துறைமுகத்திற்கு அருகிலுள்ள 15000 ஏக்கர் காணிகளை சீன கைத்தொழில் வலயம் ஒன்றை அமைப்பதற்கு வழங்குவதென சிறிலங்கா தீர்மானித்ததால் இதனை உள்ளுர் மக்கள் எதிர்த்துள்ளனர். இதனால் இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுக மற்றும் விமானநிலைய அபிவிருத்திக்காக சீனாவினால் இதுவரை 1.7 பில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.

ranil-modi (1)

இந்தப் பகுதியை அபிவிருத்தி செய்வதற்கு அடுத்த சில ஆண்டுகளில் சீனாவால் 5 பில்லியன் டொலர் முதலீடு செய்யப்படும். அத்துடன் இவை அனைத்தும் சரியாக நடந்தால் இத்திட்டத்தின் மூலம் 100,000 வேலை வாய்ப்புக்கள் உருவாகும் என சீனா தெரிவித்துள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தை எதிர்த்து உள்நாட்டில் எதிர்ப்பு உருவாகியதால் இதனை விரைவில் தீர்த்து வைக்குமாறு சிறிலங்கா அரசாங்கம் மீது சீனா அழுத்தம் கொடுத்துள்ளது.

சீனாவின் முதலீட்டை இழக்க சிறிலங்கா விரும்பவில்லை. பிரதமர் விக்கிரமசிங்க சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இந்த மாதம் நடைபெற்ற OBOR உச்சி மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். இவ்வாண்டும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுப்பதற்காகவே பிரதமர் விக்கிரமசிங்க இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டிருந்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் மேற்கொள்ளப்பட்ட அண்மைய சந்திப்பில் இந்தியாவுடனான உறவைப் பலப்படுத்த விரும்புவதாக அதிபர் சிறிசேன தெரிவித்திருந்தார். இந்நிலையில் இம்மாதம் சீனாவின் நீர்மூழ்கிக்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்பது தொடர்பில் சீனாவால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை சிறிலங்கா நிராகரித்தமை இதன் அயல்நாட்டிற்கு எச்சரிக்கை மணியை எழுப்பியிருக்கலாம்.

இலங்கைத் தீவு மீது இந்தியா கொண்டுள்ள முக்கியத்துவம் என்ன? இந்தியா, சிறிலங்காவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளி என்பதுடன் அபிவிருத்தி உதவியாக 2.5 பில்லியன் டொலர் நிதியை இந்தியா, சிறிலங்காவிற்கு வழங்கியுள்ளது. இந்தியாவின் 70 சதவீதமான சரக்குகள் கொழும்புத் துறைமுகத்தின் ஊடாகவே கையாளப்படுகின்றன.  இவ்விரு நாடுகளும் ஏற்கனவே நடைமுறையிலிருந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை பொருளாதார மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை என்கின்ற புதிய வர்த்தக உடன்படிக்கை மூலம் மேற்கொள்வதில் ஆர்வம் காண்பிக்கின்றன.

சிறிலங்காவில் சீனாவின் முதலீடுகள் அதிகரித்த நிலையில் இந்தியாவின் பொருளாதார உடன்படிக்கை குறிப்பாக இதன் புதிய பொருளாதார மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கைக்கு எதிராக சிறிலங்காவில் பல ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த உடன்படிக்கை மூலம் சிறிலங்காவில் இந்திய வர்த்தகம் ஆதிக்கம் பெற்றுவிடும் என இலங்கையர்கள் கருதினர்.

இதன் பின்னர் திருகோணமலையில் கொலனித்துவ கால எண்ணெய் தாங்கிகளை மீண்டும் அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை இந்தியா மேற்கொள்ள முன்வந்த போது அதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அதாவது சிறிலங்கா அரசாங்கம் நாட்டிற்குச் சொந்தமான வளங்களை பிற நாட்டிற்கு விற்பதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

இந்தியாவைப் பொறுத்தளவில், திருகோணமலைத் திட்டம் மற்றும் மின்னாலைத் திட்டங்கள், தொடருந்துப் புனரமைப்புத் திட்டங்கள், சிறப்பு பொருளாதார வலயத் திட்டங்கள் போன்றன மிகவும் மூலோபாய முக்கியத்துவத்தைக் கொண்டன. தென்னாசியாவில் சீனாவின் பூகோள அரசியல் இலக்குகளைக் கண்டறிவதே புதுடில்லியின் நோக்காகத் தெரிகிறது.

சிறிலங்காவில் பாரிய பொருளாதாரத் தடத்தை நிலைநாட்டுவதே சீனாவின் நோக்காகும். சிறிலங்காவை பிராந்திய வர்த்தக மையமாக மாற்றுவதற்குத் தேவையான உதவிகளை சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிடமிருந்தும் பெற்றுக்கொள்வதே கொழும்பின் நோக்காக உள்ளது.

ஆனால் சீனா மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளிடமிருந்தும் உதவிகளைப் பெறும் போது அவ்விரு நாடுகளின் போட்டி சார் நலன்களுக்கு இடையில் சமவலுவைப் பேணுவதிலும் உள்நாட்டில் பொருளாதார கொலனித்துவம் ஏற்பட்டுவிடும் என்கின்ற அச்சத்துடன் இலங்கையர்களால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்புணர்வுகளைக் கட்டுப்படுத்துவதிலும் அரசாங்கம் பெரும் இடரை நோக்க வேண்டியேற்படலாம்.

வழிமூலம்   – The Diplomat
ஆங்கிலத்தில் – Yigal Chazan
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>