மேலும்

கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி மறைந்தார்

appathurai-vinayagamoorthyதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி இன்று பிற்பகல் தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.

சிறுநீரக நோயினால் அவதிப்பட்டு வந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகல் காலமானார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  1933 டிசெம்பர் 19ஆம் நாள் பிறந்த அவருக்கு மரணமாகும் போது வயது 82 ஆகும்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த குமார் பொன்னம்பலம் 2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, கட்சியின் தலைமைப் பொறுப்பை அப்பாத்துரை விநாயகமூர்த்தி,  ஏற்றுக் கொண்டார்.

2000ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் சார்பில்  யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு அப்பாத்துரை விநாயகமூர்த்தி, முதல்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.

appathurai-vinayagamoorthy

2001ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.

2004ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட போதிலும் வெற்றி பெற முடியவில்லை.

2010 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் யாழ்.மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட அப்பாத்துரை விநாயகமூர்த்தி வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். அதேவேளை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒதுங்கி கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டார்.

2015 நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நெருக்கடிமிக்க தருணங்களில் நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் துணிச்சலுடன் குரல் கொடுத்து வந்த பிரபல சட்டத்தரணியான அப்பாத்துறை விநாயகமூர்த்தி, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஏராளமான தமிழர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இன்று பிற்பகல் காலமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களின் இறுதிச்சடங்கு நாளை மறுநாள் கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியப் பற்றுடன் தமிழ்மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்த அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களின் பிரிவினால் துயருற்றிருக்கும் அனைவருடனும், புதினப்பலகை குழுமமும் கவலையுடன் இணைந்து கொள்கிறது.

ஒரு கருத்து “கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி மறைந்தார்”

  1. மகேந்திரன் says:

    காலம் சென்ற மாமனிதர் திரு:அ.வினாயகமூர்த்தி அவர்கள் இனப்பற்றின்பால் தொண்டாற்றிய ஒரு சோரம்போகாத தமிழன். அன்னாரது இழப்பு மிகவும் வேதனையானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *