மேலும்

“மன்மோகன்சிங் மறைவு” – சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் போலி கீச்சக பதிவால் பரபரப்பு

ravi-fake twitterஇந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் காலமாகி விட்டதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரில் பதிவு செய்யப்பட்ட போலி கீச்சகப் பக்கத்தில் பதிவு இடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சராக கடந்த திங்கட்கிழமை பதவியேற்ற ரவி கருணாநாயக்க நேற்று தனது கடமைகளை வெளிவிவகார அமைச்சில் பொறுப்பேற்றிருந்தார்.

இந்த நிலையில் SriLankaMFA என்ற பெயரில் – சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அதிகாரபூர்வ கீச்சகப் பக்கம் என்ற குறிப்புடன், போலியான கணக்கு ஒன்றில் இருந்து முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மறைந்து விட்டதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரபூர்வ கீச்சகம் என்று நம்பி பல கீச்சகப் பதிவர்களும் இதனைப் பின் தொடர்ந்த நிலையில், போலி கணக்கில் வெளியிடப்பட்ட செய்தி சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

ravi-fake twitter

இதையடுத்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, தனது பெயரில் போலியாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கீச்சகப் பக்கம் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

இதுகுறித்து விசாரணைகளை நடத்தி காவல்துறையினர் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்று வெளிவிவகார அமைச்சரின் ஊடகச் செயலர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தியாவின் வெளியகப் புலனாய்வுப் பிரிவான றோவிடமும் இதுகுறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *