மேலும்

இந்தியாவுடன் அல்ல, இந்திய நிறுவனத்துடனேயே உடன்பாடு செய்வோம் – சிறிலங்கா பிரதமர்

ranilஇந்திய எண்ணெய் நிறுவனத்துடன் இணைந்து, சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வது குறித்த கொள்கை ரீதியான முடிவே எடுக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்கா பிரதம் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர்,

“2003இல் இருந்து திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டு தோறும் இந்தியாவிடம் இருந்து ஒரு இலட்சம் டொலர் கிடைத்து வருகிறது.

இந்த எண்ணெய் தாங்கிகளை கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வதே எமது திட்டம். இந்தியாவில் அடுத்த 50-60 ஆண்டுகளில் மிகப் பெரியளவிலான எண்ணெய் தேவை ஏற்படும். இந்த எண்ணெய் தாங்கி வசதிகளைப் பயன்படுத்தி இந்திய எண்ணெய்ச் சந்தையில் சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நுழைவதே எமது திட்டம்.

இதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய தேவை இல்லை. அதேவேளை இந்த திட்டம் இன்னமும் இறுதிப்படுத்தப்படவில்லை. கூட்டு முயற்சி தொடர்பான இணக்கப்பாடும் ஏற்படவில்லை.

சம்பந்தப்பட்ட பங்காளர்களுடன் பெற்றோலியத்துறை அமைச்சர் பேச்சுக்களை நடத்திய பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும். உடன்பாடு இறுதி செய்யப்பட்டதும் அது நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்தப்படும்.

நாங்கள் நாட்டின் தேசிய வளங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதாக கூட்டு எதிரணியினர் கூச்சலிடுகின்றனர். நாங்களும் கூட இந்த நாட்டின் குடிமக்கள் தான் என்பதை அவர்களுக்கு கூற விரும்புகிறேன்.

நாங்களும் இங்கு தான் பிறந்தோம், இங்கு தான் வாழ்கிறோம், இங்கு தான் இறக்கப் போகிறோம். இது எமக்கும் தாய் நாடு தான். வெளிநாட்டவர்களுக்கு எமது தேசிய சொத்துக்களை விற்க வேண்டிய தேவை கிடையாது.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் எமது தேசிய சொத்து. இந்த தேசிய சொத்துக்களை துருப்பிடிக்க வைப்பதா அல்லது அதனைப் பயன்படுத்தி எமது நாட்டை அபிவிருத்தி செய்வதா எமது கடமை?

நாங்கள் கடன் பொறியில் இருக்கிறோம்.  பயன்படுத்தப்படாத வளங்களைப் பயன்படுத்தி கடன்களை தீர்க்க வேண்டும்.

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் தொடர்பாக  நாம் உடன்பாடு செய்து கொள்ளப் போவது இந்திய அரசாங்கத்துடன் அல்ல. அதனை நாம் இந்திய அரசுக்கு குத்தகைக்கு விடப் போவதில்லை. அந்நாட்டின் நிறுவனத்திற்கே நாம் குத்தகைக்கு விடவுள்ளோம்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை மகிந்த ராஜபக்ச சீன நிறுவனமொன்றுக்கு வழங்கியிருந்தார். அதுபோன்றே நாம் இந்தியா ,சீனா என அனைத்து நாடுகளுடனும் உடன்பாடு செய்து அந்த நாடுகளின் முதலீடுகளை பெறவுள்ளோம்.

இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற அபிவிருத்தி அடைந்த நாடுகளில் கூட சீன, இந்திய நிறுவனங்கள் முதலீடுகள் செய்துள்ளன.  எனவே அதே‍ நடவடிக்கை நாம் ஆரம்பித்துள்ளோம்.

சிறிலங்காவும் அபிவிருத்தி அடைந்த நாடாக மாற வேண்டுமாயின், அதிகளவில் முதலீடுகள் கிடைக்க வேண்டும். அதற்கு பல்வேறு நாடுகளுடன் உடன்பாடுகள் செய்வது கட்டாயமாகும். இவ்வாறான உடன்பாடுகளின் ஊடாக நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது” என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு கருத்து “இந்தியாவுடன் அல்ல, இந்திய நிறுவனத்துடனேயே உடன்பாடு செய்வோம் – சிறிலங்கா பிரதமர்”

  1. Arinesaratnam Gowrikanthan says:

    திருகோணமலை எண்ணைக் கிணறுகளை இந்திய அரசுக்குக் கொடுக்கவில்லையாம். இந்தியாவின் தனியார் எண்ணைக்கொம்பனிகளுக்குத்தான் கொடுக்கப்போகிறாராம்.-இலங்கைப் பிரதமர் றனில் சொல்கிறார். இந்த எண்ணைக் கமபனிகள்தான் இந்தியாவை ஆட்டிப்படைக்கின்றன. குறிப்பாக தமிழ் நாட்டைப் பாலைவனமாக்கும் முயற்சியில் திட்டமிட்டே செயற்படுகின்றன. இவையெல்லாம் றணிலுகுத் தெரியாது போலும். இந்திய அரசு எதற்காக சிறிலங்கா அரசுடன் இவ்வளவு நெருக்கமான நட்பை பேணுகிறதென்ற உண்மை இப்போதுதான் புரிகிறது. தமிழீழ- தமிழ நாட்டு நட்பின் அவசியம் மேலும் புரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *