மேலும்

அம்பாந்தோட்டையில் பணயம் வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய கப்பல் கடற்படையினரால் விடுவிப்பு

japanese-vessel-1அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வேலைநிறுத்தம் செய்யும் தற்காலிகப் பணியாளர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த, ஜப்பானிய கப்பல், நேற்று மாலை சிறிலங்கா கடற்படையினரால் விடுவிக்கப்பட்டு, ஆழ்கடலுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சுமார் 500 வரையான தற்காலிகப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு  7000 கார்களுடன்  வந்த Hyperion Highway என்ற ஜப்பானிய கொள்கலன் கப்பலை கடந்த 7ஆம் நாள் முதல் பயணம் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தக் கப்பலை வெளியேற விடாமல் தடுக்கும் வகையில் பணியாளர்கள் பாரம் தூக்கிகளை கீழ் இறக்கி விட்டும், தடுப்புகளை அமைத்தும் இருந்தனர். இவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுக்கள் வெற்றியளிக்காத நிலையில், இந்த விவகாரம் தீவிரமடைந்தது.

இதையடுத்து நேற்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவின் தலைமையில் கடற்படையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

japanese-vessel-1japanese-vessel-2japanese-vessel-3

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் கடற்படையினரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். இதன்போது கடற்படையினர் தாக்குதல்களிலும் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவத்தை படம்பிடித்த ஊடகவியலாளர் ஒருவர், சிறிலங்கா கடற்படைத் தளபதியால், அச்சுறுத்தப்பட்டார். ஊடகவியலாளர் தாக்கப்பட்டதாகவும் சில செய்திகள் கூறுகின்றன.

பணியாளர்கள் அகற்றப்பட்டதையடுத்து, ஜப்பானிய கப்பல், துறைமுகத்தை விட்டு வெளியேறுவதற்கு கடற்படையினர் பாதுகாப்பு அளித்தனர். இந்தக் கப்பலுக்கு 12 கடல் மைல் தொலைவு வரை சென்று சிறிலங்கா கடற்படைக் கப்பல்கள் பாதுகாப்பு வழங்கின.

பணியாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை வெளிநாட்டுக் கப்பலைத் தடுத்து வைப்பது அனைத்துலக சட்டங்களின்படி, கடற்கொள்ளைக்கு ஒப்பானது என்றும், கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அந்தந்த நாட்டின் கடற்படையின் பொறுப்பு என்றும் சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *