மேலும்

ஊடகவியலாளரை அச்சுறுத்திய சிறிலங்கா கடற்படைத் தளபதி – விளக்கம் கோரினார் பாதுகாப்புச்செயலர்

navy-commanderஅம்பாந்தோட்டை துறைமுகத்தில் நேற்று ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தினார் என்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வேலை நிறுத்தம் செய்யும் பணியாளர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய கப்பலை விடுவிக்க நேற்று மாலை சிறிலங்கா கடற்படையினரால் அதிரடி மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கடற்படைப் படகு ஒன்றில் சாதாரண உடையில் வந்திறங்கிய சிறிலங்கா கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, பணியாளர்களைக் கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரை படம் பிடித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரைத் தள்ளி விட்டு அச்சுறுத்தினார்.

தாம் ஊடகவியலாளர் என்பதை அவர் வெளிப்படுத்திய போதும், அச்சுறுத்திய சிறிலங்கா கடற்படைத் தளபதி, அங்கிருந்த ஏனைய ஊடகவியலாளர்களையும் தகாத சொற்களால் திட்டினார்.

navy-commander

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்கா படைத் தளபதி ஒருவர், ஊடகவியலாளருக்கு எதிராக பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்த முதல் சம்பவமாக இது கருதப்படுகிறது.

அதேவேளை, ஊடகவியலாளரை கடற்படைத் தளபதி அச்சுறுத்தினார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சிறிலங்கா கடற்படையிடம் விளக்கம் கோரியுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்தார்.

“அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக எந்த விசாரணைகளும் இடம்பெறவில்லை.

எனினும், கடற்படையிடம் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் கோரியுள்ளேன். இந்த வாரம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவர்களிடம் கோரப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *