மேலும்

சட்டரீதியான கருத்தையே வெளியிட்டேன் – என்கிறார் மக்ஸ்வெல் பரணகம

maxwell_paranagama_commissionகொத்தணிக் குண்டுகள் தொடர்பான குற்றச்சாட்டுத் தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து, சட்டரீதியான நிலைப்பாடே என்று காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படையினர் போரில் கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தாலும் கூட, அது சட்டவிரோதமானது அல்ல என்றும், 2010ஆம் ஆண்டே, கொத்தணிக் குண்டுகளைத் தடை செய்யும் அனைத்துலக பிரகடனம் நடைமுறைக்கு வந்தது என்றும், மக்ஸ்வெல் பரணகம தெரிவித்திருந்தார்.

இவரது இந்தக் கருத்து அதிமேதாவித்தனத்தை வெளிப்படுத்தும் முயற்சி என்று கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கண்டனம் வெளியிட்டார்.

இதற்குப் பின்னர், தி ஹிந்து ஆங்கில நாளிதழிடம் கருத்து வெளி்யிட்டுள்ள மக்ஸ்வெல் பரணகம, தனது கருத்து சட்டரீதியான நிலைப்பாடு என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, முன்னதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நேற்று அளித்திருந்த செவ்வி ஒன்றில், மக்ஸ்வெல் பரணகம கூறியிருப்பதாவது,

“கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பாக நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற ஐ.நா மனித ஆணையாளரின் கோரிக்கை அடிப்படையற்றது.

எமது ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட இரண்டாவது ஆணைக்கு அமைய கொத்தணிக் குண்டு குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதுபற்றிய எல்லா சான்றுகளும் ஆய்வு செய்யப்பட்டன.

இதன் முடிவில் சிறிலங்கா இராணுவம், கொத்தணிக் குண்டுகளைப் போரில் பயன்படுத்தவில்லை என்ற முடிவுக்கு வந்தோம்.

2010ஆம் ஆண்டு ஓகஸ்ட் 1ஆம் நாள் தான் கொத்தணிக் குண்டுகளை பயன்படுத்துவதை தடை செய்யும் அனைத்துலக பிரகடனம் நடைமுறைக்கு வந்தது.

எனவே இந்த வகை குண்டுகளை சிறிலங்கா படையினர் போரில் பயன்படுத்தியிருந்தாலும் கூட, ஐ.நா தமனித உரிமைகள் பேரவை அதில் தவறு காண முடியாது.

கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை சிறிலங்கா இராணுவத்துக்கு ஏற்பட்டிருந்தாலும் கூட அது அனைத்துலக சட்ட மீறலாக அமையாது.

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர் தான், கொத்தணிக் குண்டுகளைத் தடை செய்யும் அனைத்துலக பிரகடனம் நடைமுறைக்கு வந்தது என்பது, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு தெரியவில்லை.

இது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் மூலம் சிறிலங்காவின் பெயரைக் கெடுக்கின்ற முயற்சி.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *