மேலும்

இந்தியாவின் நிதியுதவியுடனேயே பலாலி விமான நிலைய அபிவிருத்தி

Passenger_Terminal-Palaly_Airportபலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவே உதவி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் அத்துல ஜெயவிக்கிரம தெரிவித்தார்.

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக, சென்னையில் இருந்து இந்திய விமான நிலையங்கள் அதிகாரசபையின் ஐந்து பேர் கொண்ட தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு கடந்த 16, 17ஆம் நாள்களில் சிறிலங்கா வந்திருந்தது.

இந்தக் குழுவினருக்கு பலாலி விமான நிலையத்தின் தற்போதைய நிலை மற்றும் அங்குள்ள வசதிகள் தொடர்பாக சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகள் விளக்கமளித்திருந்தனர்.

பலாலி விமான நிலையத்தின் தற்போதைய நிலை தொடர்பாக இந்தியத் தொழில்நுட்பவியலாளர் குழுவுக்கு நாம் விளக்கமளித்திருந்தோம், அதன் பின்னர் அவர்கள் பலாலிக்குச் சென்று பார்வையிட்டிருந்தனர் என்று சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் அத்துல ஜெயவிக்கிரம தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம், பலாலி விமான நிலையத்தை, இந்தியா உள்ளிட்ட தெற்காசியப் பிராந்தியங்களுக்கான விமான சேவைகளை மேற்கொள்ளும் பிராந்திய விமான நிலையமாக மாற்றியமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் இது அனைத்துலக விமான நிலையமாக மாற்றியமைக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியக் குழுவினர் தமது ஆய்வின் பின்னர், மேலதிகமாக காணிகளைச் சுவீகரிக்காமல் விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்தக் அதிகாரிகள் குழு, பிராந்திய விமான நிலையமாக பலாலியை தரமுயர்த்துவதற்குத் தேவையான நிதி தொடர்பாக மதிப்பீடுகளை செய்யும்.

மதிப்பீடுகள் முடிவடைந்த பின்னர், அதுபற்றி இந்திய, சிறிலங்கா அரசாங்கங்களின் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அவை அனுப்பி வைக்கப்படும்.

இந்த திட்டத்துக்கு இந்திய அரசாங்கமே நிதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுகுறித்து இன்னமும் விரிவாக கலந்துரையாடப்படவில்லை என்றும் சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் அத்துல ஜெயவிக்கிரம தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *