மேலும்

கி.பி.அரவிந்தன் எனும் ஆளுமையின் 1ஆவது ஆண்டு நினைவாக… – நேர்காணல்: பகுதி 3

ki-pi-1st yearஈழ விடுதலைப் போராட்ட முன்னோடி,கவிஞர், எழுத்தாளர் கி.பி.அரவிந்தன் அவர்களுடன் 2014இல் மேற்கொள்ளப்பட்ட ஓர் உரையாடல்.  நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா.

கி.பி அரவிந்தன் இறுதியாக ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் இது என்ற அடிப்படையில் இது முக்கியத்துவம் பெறுகிறது. அவரது கவிதைகள் பிரென்ஞ் மொழியாக்கம் செய்யப்பட்டு நூலுருப் பெற்ற பின்னணியில் தொடங்கும் உரையாடல், ஆரம்பகாலப் போராட்டப் பங்களிப்பிலிருந்து, கலை இலக்கிய, சமூகச் செயற்பாடுகள், புலம்பெயர் வாழ்வியல், தாயக-தமிழக-புலம்பெயர் அரசியல், இளைய தலைமுறை எனப் பல்வேறு கருத்துகளை உள்ளடக்கி விரிந்து சென்றது என்ற வகையிலும் இதன் உள்ளடக்கம் பெறுமதியுடையதாகின்றது.

அவருடைய அனுபவங்களின் ஊடாக விடுதலைப் போராட்டத்தினது முக்கிய வரலாற்றுப் பக்கங்களையும், புலம்பெயர் வாழ்வியல் பற்றிய காத்திரமான பார்வையையும் பதிவாக்க முடியும் என்ற நம்பிக்கையில் மேற்கொள்ளப்பட்ட உரையாடல் இது. அவருடைய முதலாவது ஆண்டு நிறைவில், அவரது நினைவுகளுக்குச் சமர்ப்பணமாய் எழுத்து வடிவில் இந்நேர்காணலை வெளியிடுவது பொருத்தமும் பெறுமதியும் மிக்கதெனக் கருதுகின்றோம்.

**********

இளைஞர்களின் போராட்ட எழுச்சியின் குறியீடாகவும் விடுதலை அரசியலின் குறியீடாகவும் சிவகுமாரன் அவர்கள் இன்றுவரை விளங்குகிறார். அவர் தன்னைத் தியாகம் செய்து 40 ஆண்டுகள் கடந்திருக்கும் சூழலில அவர் பற்றிய உங்கள் நினைவுமீட்பும் பகிர்வும் பெறுமதி வாய்ந்ததாக இருக்கின்றது. அவருடைய வீரச்சாவிற்குப் பின்னர் உங்களுடைய அரசியல் பணிகள் என்று பார்க்கும் போது, குறிப்பாக தமிழ்நாட்டில் நீங்கள் செயற்பட்டிருக்கிறீர்கள்.ஈரோஸ் அமைப்பில் இணைந்து செயற்பட்டிருக்கிறீர்கள்.அந்தச் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமாகக் கூறமுடியுமா?

ki-pi-bookஇது ஒரு தன்வரலாறாகப் போய்விடும் என நான் நினைக்கிறேன். இவையெல்லாம் மிகவும் நீண்ட வரலாறு என்பதனால் இதனைச் சுருக்கமாகக் கூற விரும்புகிறேன். நான் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த பின்னர் கைதுசெய்யப்பட்டேன். 1977ம் ஆண்டுக் கலவரம் வருகிறது. இதன் போது அரசியல் கைதிகள் தடுப்பில் வைக்கப்பட்டமை தவறானது என்கின்ற ஒரு வழக்கு மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் ஜே.வி.பி உட்பட சிறையில் அடைக்கப்பட்ட பலரும் விடுதலை செய்யப்படுகின்றனர். இதில் நாங்களும் விடுதலையாகி வெளியில் வந்தோம்.எம்மீதான வழக்குகள் இருந்தன. ஆனால் நாங்கள் சிறையிலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புக் கிட்டியது. சிறையிலிருந்து வெளியேறிய பின்னர் ஈரோஸ் இயக்கத்துடனான தொடர்பு கிடைத்தது. 1978ல் நான் தமிழ்நாட்டிற்குச் சென்றேன்.

1978ம் ஆண்டுத் தொடக்கத்தில் நான் இலங்கையை விட்டுப் புறப்பட்டு மத்திய கிழக்கு நாட்டிற்குச் சென்று பி.எல்.ஓ (PLO) தலைமையுடனான சந்திப்பு நிகழ்கிறது. அவர்களுடன் மூன்று மாதம் தங்கியிருந்த பின்னர், மீண்டும் இலங்கைக்குத் திரும்பாமல் தமிழ்நாட்டிற்குச் சென்று அங்கே தங்கியிருந்தேன். ஏறத்தாழ 1978ம் ஆண்டிலிருந்து 1988ம் ஆண்டு வரையில் (இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னால் அங்கிருந்த பணியகங்கள் எல்லாம் மூடப்பட வேண்டும் எல்லோரும் அங்கிருந்து திரும்பிச் செல்ல வேண்டும் என இந்திய அரசாங்கம் சொல்லும் காலகட்டம் வரைக்கும்) அங்கு தங்கியிருந்தேன்.

அங்கிருந்து அரசியல் ரீதியான பல பணிகளை நான் மேற்கொண்டேன். தமிழ்நாட்டு மக்களுடனான உறவுகளை வளர்த்தல், தமிழ்நாட்டை ஒரு பின்தளமாகப் பயன்படுத்துதல், போன்ற விடயங்களிலும் தமிழ்நாடு எவ்வகையான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்பதை நாங்கள் அரசியற் தலைமைகளுக்கு மட்டுமல்லாது அதற்குக் கீழே பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் எனப் பல்வேறு தரப்பட்ட பொறுப்பிலே இருந்தவர்கள் மற்றும் கிராமத்து மக்கள், இளைஞர்கள் மத்தியில் கருத்துக்களைப் பரப்பும் பணியிலும் ஈடுபட்டோம். அடிமட்ட நிலையில் எமது போராட்டம் மற்றும் அதற்கான நியாயம் போன்றவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தோம்.

1978ம் ஆண்டு வரைக்கும் நான் இலங்கையில் இருந்தபோது அரசியல் ரீதியாகவும் கடுமையான ஒரு மனோநிலையும் கொண்டவனாகவும் இருந்தேன். தமிழ்நாட்டில் பணியாற்றத் தொடங்கிய பத்தாண்டு காலத்தில் தான் நான் ஒரு மாற்றத்தைக் கண்டேன். அதாவது எனது கவிதையில் குறிப்பிட்டது போன்று ‘அவர்களின் தோழணைவால் நான் கனிந்தேன்’ அந்தவகையில் நான் இன்றைக்கும் தமிழ்நாட்டிற்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். தமிழ்நாடு மீதான நம்பிக்கை உடையவனாகவும் தமிழ்நாட்டு மக்கள் மீதான அபரிமிதமான நேசம் கொண்டவனாகவும் நான் இருக்கின்றேன்.

இவையெல்லாம் ஒரு தன்வரலாறாகப் போய்விடும் என நீங்கள் அச்சப்பட்டாலும் கூட, இதற்கு ஊடாக நாங்கள் ஒரு காலத்தினுடைய வரலாற்றையும் போராட்ட செயற்பாட்டையும் பதிவு செய்ய வேண்டியது முக்கியம் என்கின்ற அடிப்படையில் அந்தக் கேள்வியைத் தங்களிடம் கேட்டிருந்தேன். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூன்று தசாப்தகால ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழர் அரசியலில் பெரும் ஒரு தலைமைத்துவ இடைவெளி தோன்றியுள்ளது, செயற்பாட்டுத் தேக்கம் நிலவுகின்றது என்பது பலரும் அறிந்த உண்மை. இந்த வகையில் ஆயுதப் போராட்டப் பாதையை முன்மொழிந்தவர்களில், ஆரம்ப காலகட்டங்களில் அதில் ஈடுபட்டவர் என்ற முறையில் ஆயுதப் போராட்டத்தின் வீழ்ச்சி என்பது ஆயுதப் போராட்ட வழிமுறை தொடர்பாக உங்களை வருந்த வைத்துள்ளதா?

நிச்சயமாக, அது பொதுவாகவே உலகத் தமிழர்களைப் பாதித்தது போலவே என்னையும் பாதித்தது. ஆனால் அதற்கு மேலால், இந்தப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் ஈடுபட்டவன் என்ற வகையில், மற்றவர்களுடைய வேதனையை விடவும் சற்றுக் கூடுதலான வேதனையை நான் அடைகிறேன். அதாவது கவலை, துன்பம் என்பதற்கு அப்பால் ஏன் நாங்கள் உயிர் வாழவேண்டும் என்ற கேள்வி என்னுள் குடைந்து கொண்டிருக்கிறது. அதாவது பத்தாண்டு காலம் ஊரில் பணியாற்றிய போதே செத்திருக்கலாமே, நாங்கள் எல்லாம் முன்னாடியே செத்திருக்கலாமே என்கின்ற மனோநிலையே எனக்கு அப்பொழுதெல்லாம் தோன்றியது. இதெல்லாம் அறிந்திருக்க வேண்டுமா? இதையெல்லாம் பார்த்திருக்க வேண்டுமா என்பதான மனோநிலை என்னிடம் மிகுந்திருந்தது. முள்ளிவாய்க்கால் என்பது ஒரு துன்பியல் பாடம் என்று சொல்லலாம். அது ஒரு துன்பியல் பாடலாகவே போயிற்று.

போராட்டம் எழுச்சியுறுவதும் வீழ்ச்சியுறுவதும் பின்னடைவைச் சந்திப்பதென்பதும் அது மிகவும் இயல்பான விடயமாகும். எல்லாம் வெற்றிகளாக அமைவதில்லை. முன்னடைவு வரும், பின்னடைவு வரும், சிறிதுகாலம் அது ஓய்வுநிலையில் இருக்கும், பின்னர் மீண்டும் எழுச்சி பெறும். ஆனால் எங்களுக்கு நடந்தது அவ்வகையானதல்ல. நாங்கள் வீழ்ச்சியடைந்து விட்டோம் என்றே எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் நாங்கள் வீழ்ச்சியடையவில்லை. நாங்கள் சிதறிவிட்டோம். உச்சி வரைக்கும் ஏறத்தெரிந்த எங்களுக்கு அதிலிருந்து இறங்குவதற்கு வழிதெரியாது உச்சியிலிருந்து தொப்பென்று விழுந்து விட்டோம். உண்மையாக நாங்கள் செங்குத்தாக விழுந்திருக்கிறோம். இது போன்று எங்கேயும் இடம்பெறவில்லை.

போருக்குப் பின்னால் ஒரு நிலைமை தோன்றும் போது அதிலிருந்து பின்வாங்குதல் தொடர்பாக வேறு போராட்டங்களில் முறைகள் உள்ளன. பாதுகாக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் உள்ளன. இங்கு சொல்வதற்கு எனக்குக் கடினமானதாக உள்ளது. ஏறத்தாழ இந்தப் போராட்டத்தின் இறுதியில், இந்தப் போராட்டம் முப்பதாண்டுகளாக வளர்த்த சிந்தனை, அறிவு, தந்திரோபாயம் என எங்களுடைய அனைத்து மூளைவலுவும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. எங்களுடைய மூளை எப்படியாகச் செயற்படும் என்கின்ற முறைமையைக் கூட நாங்கள் இன்றைக்கு எதிரியிடம் ஒப்படைத்திருக்கிறோம். இது மிக மிக சோகமான நிகழ்வு.  இது சாதாரண நிகழ்ச்சியாக முடிந்திருக்கின்றது என நாங்கள் நினைத்தாலும் கூட உண்மை அப்படியல்ல.  அவர்கள் எம்மிடமிருந்து பெற்றுக் கொண்டது மற்றும் எடுத்துக் கொண்டது என்பது வெறும் ஒரு போராட்டத்தை முறியடித்த வெற்றி மாத்திரம் அல்ல. இவையனைத்தையும் நாங்கள் மீண்டும் கட்டியெழுப்புவதென்பது இப்போதைக்கு சாத்தியமா அல்லது சாத்தியமற்றதா என்பதெல்லாம் வேறு விடயம். அதை நான் இங்கு பேசவரவில்லை. ஆனால் நடந்து முடிந்ததெல்லாம் இவ்வாறானதொரு துன்பியல் சம்பவமாகும்.

இந்தப் போராட்டம் வீழ்ச்சியடைந்தது என்பதற்கப்பால், அது சிதைக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருந்தீர்கள்.2009 இற்குப் பின்னான ஈழத்தமிழர் அரசியல் செயற்றிறன் கொண்டதாக அமைக்கப்படவில்லை என்பதும் வெளிப்படையான உண்மை. இந்த அடிப்படையில் 2009 இற்குப் பின்னரான தமிழர் அரசியலை எவ்வாறு நோக்குகிறீர்கள்? எப்படியான செயல்முன்னெடுப்புகள் அவசியமெனக் கருதுகிறீர்கள்?

ki-pi-book-norway (2)முன்வைக்கப்படுவதற்குப் பலரிடமும் பல யோசனைகள் உள்ளன. ஆனால் இது தொடர்பான திட்டங்களை முன்வைப்பதற்கு நான் தயாராக இல்லை. ஆனால் நான் நம்பிக்கையீனமாகக் கதைக்கிறேன் என நீங்கள் கருத வேண்டாம். நாங்கள் அடிப்படையிலேயே பல விடயங்களைக் கோட்டை விட்டுவிட்டோம் என்பதே உண்மை. நாங்கள் எங்களை மீள்பரிசீலனைக்கு உள்ளாக்கும் போது எந்தெந்த விடயங்களை உள்ளெடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியமானது.

முதலாவது இந்தத் தாயகம் பற்றியதான கோட்பாடு எங்களிடத்தில் உணர்வு ரீதியாக, அரசியல் ரீதியாக, மன ரீதியாக உருப்பெற்றிருக்கிறதா என்ற கேள்வியை நாங்கள் முதலாவதாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது பருத்தித்துறை முதல் பாணாந்துறை வரை அல்லது பொத்துவில் வரைக்குமான நீண்ட பகுதி அல்லது மன்னார் முதல் மட்டக்களப்பு வரையான நீண்ட நெடிய நிலப்பரப்புக்களில் வாழும் மக்களை ஒரு தேசியமாக, ஒரு தாயகத்திற்கான பண்பு கொண்டவர்களாக அமைக்கும் வகையில் எவ்வகையான திட்டங்களை, செயற்பாடுகளை மனப்போக்கைக் கொண்டிருந்தோம் என்பதை நாங்கள் எம்மிடம் முதலில் கேட்க வேண்டும். தாயகம் பற்றியதான அரசியல் அல்லது மனோநிலை மற்றும் உணர்வுநிலை என்பது இருந்தால் தான் சுயாட்சி பற்றியதான கருத்துரு தோன்ற முடியும். தோன்றி வளரமுடியும். இவை படிப்படியாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.அன்றைய அரசியல் தலைமைகள் இவற்றுக்கான விதைகளை விதைத்தாலும் அவர்கள் செய்தது தமிழருக்கான அரசியல் ஆகும். கொழும்பில் தாங்கள் செய்வதை அவர்கள் இங்கு வந்து வீராவேசமாகக் கதைத்துவிட்டுப் போகிறார்கள். இங்கு வந்து அவர்கள் தமது வாக்கு வங்கிகளுக்கு ஆதரவைப் பெற்றுக் கொள்வதிலேயே மிகக் கவனமாக இருந்தார்கள்.

தமது நாடாளுமன்ற ஆசனங்களைப் பெருக்கிக் கொள்வதிலும் கொள்வதிலும் அதற்கான பதவிகளை அனுபவித்துக் கொள்வதிலும் அவர்கள் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். ஆனால் மறுவளமாக தமது வடக்குக் கிழக்கு தமிழர் பிரதிநிதித்துவத்தைக் கோரி அதனை முன்னிலைப்படுத்தும் இத்தலைமைகள் வடக்கு கிழக்கு மக்களிடையேயான இணைப்பை அவர்களுடனான உறவை அவர்களுடனான பொருளாதார உறவாடலை அல்லது அவர்களுக்கிடையிலான சமூக ரீதியான உறவாடல் போன்றவற்றிற்காக என்ன பணி செய்தார்கள் அல்லது எந்தவகையான கட்டமைப்பை வைத்திருந்தார்கள் என்பதை நாங்கள் இன்று முக்கியமாகக் கேட்டுப் பார்க்க வேண்டும்.

அதைத் தொடர்ந்தும் வந்தவர்கள் அதனைச் செய்தார்களா அல்லது சிந்தனை செய்தார்களா என்பதை  நாம் பார்க்க வேண்டும். உதாரணமாக, நான் கூறுவது கசப்பாகக் கூட இருக்கலாம். அதாவது 2009 யுத்தம் முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாணத்து இளைஞனும் மட்டக்களப்புப் பெண்ணும் திருமணமாகியிருந்த நிலையில் அவர்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். பிரதேச ரீதியாக சாதி ரீதியாக செய்யப்பட்ட திருமணங்கள் இன்று உடைக்கப்பட்டுள்ளன. இவைகள் எல்லாம் வளராமல், வளர்த்தெடுக்கப்படாமல் மனரீதியாகக் கொண்டு செல்லப்படாமல் தாயகம், சுயாட்சி போன்றன தொடர்பாக நாங்கள் எவ்வாறு சிந்திக்க முடியும்?

இரண்டாவதாக தெளிந்ததொரு திட்டத்தை நாங்கள் எமக்குள் கொண்டிருக்கவில்லை. நாங்கள் குடாநாட்டுக்குள் மடங்கியிருந்த எண்ணத்தை மனப்போக்கை பொத்துவில் வரையான மக்களிடம் திணிக்கவும் அவர்களை அதுபோல் மாற்றவும் முயற்சித்தோமே தவிர, அவைகளை அனுசரித்தோமா? அவைகளை ஏற்றுக்கொண்டோமா? இவற்றைக் கேட்டுப் பார்த்து இவற்றுக்கான விடைகளைக் காணாத வரையில் அதாவது நான் நினைக்கிறேன் 2009 இற்குப் பின்னர் பத்தாண்டுகள் கடந்தாலும் இவை பற்றி நாங்கள் மூச்சுப்பெற முடியுமா என்பதெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை.

தாயக- புலம்பெயர் சமூகத்தில் தேசியம், தன்னாட்சி, அரசியல் உரிமை சார்ந்த விடயங்களில் மன ரீதியான விடுதலை என்பது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதை நீங்கள் விமர்சனக் கண்ணோட்டத்துடன் முன்வைத்தமை முக்கியமானதாக அமைகின்றது. ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகள் சார்ந்து தாயகம், தமிழகம், புலம்பெயர் நாடுகள் ஆகிய மூன்று தளங்களிலிருந்து எவ்வாறு முன்வைக்கப்பட வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

நாம் தமிழுக்காகப் போராடினோம்;, தமிழ்த் தேசத்திற்காகப் போராடினோம் என்பதற்காகவே வெளிநாடுகளில் எமக்கு அரசியல் அந்தஸ்து வழங்கப்பட்டு அரசியல் ரீதியாக நாங்கள் இங்கு ஏற்றுக்கொள்ளப்பட்டோம். பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள் சொன்ன காரணம் என்னவெனில் எங்களது மொழி தமிழ் என்பதாகும். எங்களுடைய மொழிக்காகவும் எங்களுடைய மொழி சார்ந்த தேசத்திற்காகவும் போராடினோம் என்பதாகும். நல்லது. இது ஒரு நல்ல விடயம். ஆனால் இந்த மொழிக்காகவும் மொழித் தேசத்திற்காகவும் போராடிய நாங்கள், புலம்பெயர்ந்து வந்ததன் பின்னர் இந்த மொழிக்கும் இந்த மொழித் தேசத்திற்காகவும் எவ்வகையான கட்டமைப்பை வெளிநாடுகளில் கொண்டிருந்தோம், எதைக் கொண்டிருக்கிறோம் என்பதை ஆராயவேண்டும்.

இங்கிருந்து நிதியைச் சேகரித்து அனுப்புவது மட்டும் போதுமானதா என்பது எனக்குத் தெரியவில்லை. இதற்கான எத்தகைய செயற்திட்டத்தை நாங்கள் வைத்திருக்கிறோம்? எதை நாங்கள் கொண்டிருக்கிறோம்? இங்கு வந்து வளர்கின்ற தலைமுறைக்கான என்ன திட்டத்தை நாங்கள் கொண்டிருக்கிறோம்? எதிர்கால முன்பாவனை கொண்டதான என்ன திட்டத்தை நாங்கள் இந்த சமூகமாகக் கொண்டிருக்கிறோம்? புலம்பெயர் சமூகம் உள்ளது. ஆனால் எத்தனை கதிரைகள் மூடிசூடிக்கொண்டிருக்கின்றன என்பது தெரியுமா? இத்தனை கதிரைகள் எமக்குத் தேவைதானா? விரல்விட்டு எண்ணினால் எட்டுக் கதிரைகளையும் கட்டிப்பிடித்துக் கொண்டு இருப்பவர்கள் தான் இருக்கிறார்கள். உதாரணமாக, நவிபிள்ளையைச் சந்திப்பதற்கு எமது தமிழ் சமூகத்திற்கு வாய்ப்பை அவர் வழங்கியிருந்தார். காலையில் ‘X’ என்ற அமைப்பு அவரைச் சந்தித்து விட்டு அமைதியாக வெளியேறிவிட்டார்கள். இதேபோன்று மத்தியானம் ‘Y’ என்ற அமைப்பு அவரைச் சந்தித்து  விட்டு அமைதியாக வெளியேறினார்கள். பின்னேரம் தேநீர் வேளையில் பிறிதொரு ‘Z ‘; என்ற அமைப்பு நவி பிள்ளையைச் சந்திக்கச் சென்றார்கள். இரவுச் சாப்பாட்டிற்கு ‘W’ என்ற அமைப்பு அவரைச் சந்திக்கிறது. இந்த நாலு பேரும் வெள்வேறு நேரங்களில் நவிபிள்ளையைச் சந்தித்துக் கதைத்துள்ளனர். இவர்கள் யாருக்காக எந்த முடிவை எடுத்தனர் என்பது இங்கு கேள்விக்குறியாகும். ஒரு வெளியுறவுக் கொள்கை தொடர்பாகக் கூட எமக்கிடையே இணக்கம் காணமுடியாத நாம், அதுபற்றியதான திட்டமிடலோ ஒழுங்கமைப்போ இணக்கமோ காணமுடியாதவர்களாக இங்கிருந்து கொண்டு அதை அமைப்போம், தமிழை உயர்த்திப் பிடிப்போம், தமிழ்த் தேசத்தைக் காப்போம் என யாருக்குப் பொய் சொல்லப் போறோம்? யாரை ஏமாற்றுகிறோம்? நாங்கள் எங்களையே ஏமாற்றிக் கொள்கிறோம். இவையெல்லாம் மீள்பரிசீலனைக்கு உள்ளாக்கப்படவில்லையானால், எமக்கு மீட்சி இல்லை. அதாவது 2009 வீழ்ச்சியை விட இன்றைக்கு நாங்கள் சிக்கியிருக்கும் நிலைமை தான் மிகவும் மோசமானது. ஏனெனில் நாங்கள் மிகப் பெரிய வலைக்குள் வீழ்ந்திருக்கிறோம். இந்த வலையை அறுத்து நாங்கள் எவ்வாறு மீளப்போகிறோம் என்பது தான் மிக முக்கியமான கேள்வி.

புலம்பெயர் வாழ்வியலில், தமிழரின் சமூக,பண்பாட்டு வாழ்வியல் தொடர்பாக நீங்கள் அக்கறை கொண்டவர். அதற்காகச் சிந்தித்தவர், பல்வேறு தளங்களில் செயற்பாடுகளை முன்னெடுத்தவர் என்ற வகையில், இளைய தலைமுறையினர் மத்தியில் இருமொழி, பண்பாட்டு வாழ்வியல் சூழலில் காணப்படும் சவால்கள் மற்றும் சாதகமான வாய்ப்புக்கள் பற்றி உங்கள் பார்வை?

ki-pi-annaஅதாவது பொதுவாகவே எமது சமூகமானது புலம்பெயர் வாழ்வியலில் ஏனைய சமூகங்களும் எதிர்கொள்ள நேர்கின்ற நெருக்கடியைத் தான் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை. ஆனால் நான் முதலில் கூறியது போன்று, எங்களிடத்தில் புலம்பெயர் சமூகம் பற்றியதாக அல்லது வளரும் தலைமுறை பற்றிய கண்ணோட்டமோ அல்லது ஒரு முன்னுணர்வுத் திட்டங்களோ அல்லது முன்னுணர்வு நிலைகளோ இல்லை. நாங்கள் சில விடயங்களைச் செய்தேயாக வேண்டும். அதாவது உதாரணத்திற்கு இன்று இரண்டாம் தலைமுறை வளர்கிறது. அதனுடைய மொழிப் பண்பாடு நிச்சயமாகக் குறைந்து கொண்டு செல்கிறது.  30 ஆண்டுகளுக்கு முன்னால் நாங்கள் ஊரிலிருந்த போது எங்களிடமிருந்த சொல்வளமும் மொழியாற்றலும் தற்போது 30 ஆண்டுகளின் பின்னர் சில சொற்கள் மறந்து போய்விட்டது. எந்த இடத்தில் இந்தச் சொல்லைப் பயன்படுத்துவது என்கின்ற தடுமாற்றம் எங்களுக்குள்ளும் ஏற்படத் தொடங்கி விட்டது.

இரண்டாவது தலைமுறை மற்றும் மூன்றாம் தலைமுறை இயல்பாக மொழிப் பாவனையில் குறைந்து கொண்டே செல்கிறது. ஆனால் இவர்கள் புலம்பெயர் சமூகத்திலுள்ள மொழிகளுக்கு ஊடாக எங்களுடைய பண்பாட்டை, எங்களுடைய மொழியின் சிறப்பை எங்களுடைய இலக்கியத்தின் செழுமையை உற்றுணர்வதற்கு வாய்ப்பு உண்டு. எமது சமூகம் பற்றி ஆய்வு செய்வதற்கு ஒரு இளைஞன் அல்லது ஒரு இளம்பெண் நினைத்தால் அவர்களை ஊக்குவிப்பதற்கும் அவர்களுக்கான நிதியை வழங்கவும் எங்களிடம் என்ன வகையான திட்டம் உள்ளது, வளம் உள்ளது, பொறிமுறை உள்ளது?  இந்தப் பிள்ளைகள் இது தொடர்பான ஆய்வுநிலைக்கு இறங்க விரும்பினால், யாரோ ஒரு பிள்ளை வந்து எம்மிடம் தமிழ் இலக்கியத்தைப் பற்றிக் கேட்டால் எம்மிடம் என்ன வகையான நூலகக் கட்டமைப்பைக் கொண்டிருக்கிறோம்? 30 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் எங்கேயாவது பெறுமதி மிக்க பொதுநூலகம் ஒன்றை அமைக்க எங்களால் முடிந்ததா? ஆவணக்காப்பகம் ஒன்றை நிறுவ எங்களால் முடிந்ததா?

இளைஞர்கள் ஆவணங்களைத் தேடி எங்கே செல்வார்கள்? அவர்களால் இது எப்படி முடியும்? மூத்த சமூகத்தினராகிய நாங்கள் அல்லவா இதனைச் செய்திருக்க வேண்டும்? எங்களுடைய இரண்டாம் தலைமுறைக்கு மொழி தெரியும். அதாவது எமது புலம்பெயர் வாழ் எமது தலைமுறைக்கு கிட்டத்தட்ட ஐந்து அல்லது ஆறு மொழிகள் தாராளமாகத் தெரியும்.  மொழி என்பது ஒரு அகப்பை போன்றது. அந்த மொழி எவ்வளவு தெரிந்திருந்தாலும், அந்த மொழியால் அள்ளுவதற்கு உங்கள் உள்ளுக்குள் விடயம் இருக்க வேண்டும். பானைக்குள் சோறிருந்தால் தான் அகப்பையால் அள்ளி நீங்கள் வெளியாலே வைக்கலாம். மொழி என்பது தனித்ததொரு சமூக அறிவோ அல்லது பண்பாட்டு அறிவோ அல்ல. மொழி பேசலாம். இது ஒரு ஊடகம். இங்கு ஊடுவதற்கு வழியிருக்கும். ஆனால் ஊடுவதை நீங்கள் இலக்கை நோக்கி நகர்த்த வேண்டுமாக இருந்தால் உங்களுடைய நிலையை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டுமானால், நீங்கள் உள்ளுக்குள் நிறைய விடயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் சமூகத்தின் நிலையால் நாங்கள் எமது அடுத்த தலைமுறையினருக்கு ஊட்டிய கல்விநிலை என்ன? அவர்கள் ஐரோப்பிய மொழிகளில் கல்வி ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கலாம். அது வேறு விடயம். இந்த தமிழ் சமூகம் தன்னுடைய இரண்டாவது மூன்றாவது தலைமுறையினருக்குக் கல்வி ஊட்டுவதற்கு என்ன வகையான முறைமையை, என்ன வகையான திட்டத்தை வைத்திருக்கிறது?

புலம்பெயர் சூழலில் இளம் தலைமுறையினர் மத்தியிலான மொழி பண்பாட்டு வாழ்வியலை மேம்படுத்துவதற்கான கட்டமைப்பு, அதற்குரிய வளங்கள் சமூக ரீதியில் ஒருங்கணைக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் நீங்கள் விமர்சனக் கண்ணோட்டத்துடன் முன்வைத்திருந்தீர்கள். பண்பாட்டு ரீதியிலான புரிதலை வளர்த்தெடுப்பதற்கு எவ்வாறான வாய்ப்புகள் உள்ளன?

kipiஎமது பண்பாடு பற்றிக் கூட எமக்குத் தெரியவில்லை. எது எமது தமிழ்ப் பண்பாடு என்பதை விளக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, பரத நாட்டியம் ஆடினால் அது எமது பண்பாடு, கலாசாரத்திலுள்ள கலை எனக் கூறுகிறோம். ஈழத்துக் கலையும் பரதநாட்டியம், தமிழ்நாட்டுக் கலையும் பரதநாட்டியம், இந்திய நாட்டுக் கலையும் பரதநாட்டியம் எனின், எது ஈழத்தின் கலை? எங்களவில் நாங்கள் சிலவற்றை முயற்சித்துள்ளோம். இப்போதைக்கு பொது அளவில் நானும் சார்ந்ததாக அண்மைக்காலமாக பொங்கல் என்பதைத் தமிழர்களின் அடையாள நாளாகவும் அதனை எமது பண்பாட்டின் அடையாளமாகவும்,தமிழர்களை இணைக்கும் நாளாகவும் இருக்கும் என்று நினைத்து கடந்த பத்து ஆண்டுகளாக நான் இருக்கும் பிரான்சில் அதனை முன்னெடுத்து வருகிறோம்.

கிட்டத்தட்ட சில இடங்களில் இது முன்னேறிக் கொண்டு வருகிறது. ஆனால் பல நாடுகளில் பொங்கல் என்கின்ற பண்பாட்டு அடையாள நாளைக் கூட பாட்டுக் கச்சேரிகளாகவும், ஒரு விளம்பர நிகழ்ச்சிகளாகவும் ஒரு கேளிக்கை நிகழ்ச்சியாகவும் மாற்ற விரும்புகிறார்கள். ஆனால் அண்மையில் நடந்த எமது பொங்கல் நிகழ்வுகளில் பண்பாட்டு உணவுகள், பண்பாட்டுப் பொருட்கள், எமது நூல்கள் பற்றியதான கண்காட்சி நிகழ்வுகள், எமது பண்பாட்டு உடைகள் போன்ற ஏராளமானவற்றைக் காட்சிகளாகவும் மேடைகளில் நிகழ்ச்சிகளாகவும் நடாத்தி வருகிறோம். நாங்கள் ஒருபோதும் பரதநாட்டியம் போன்ற எந்தவொரு கலைகளையும் தமிழ் அடையாளக் கலைகளாக ஏற்றுக்கொள்ளவில்லை. எமது பண்பாடு சார்ந்த மக்கள் கலைகளை மட்டுமே நாங்கள் ஏற்றுக்கொண்டோம். அதாவது ஈழத்துக் கூத்துக்களை மேடையேற்றினோம். இவ்வருடம் நாங்கள் வசந்தன் கூத்து, சிலம்பாட்டம் போன்றவற்றை மேடையேற்றியுள்ளோம். எமது பண்பாட்டை அறிமுகப்படுத்தக் கூடிய இவ்வகையான கலைகளை நாங்கள் மேடையேற்றியுள்ளோம்.

இவ்வருடம் பிரான்சில் நடைபெற்ற பொங்கல் விழாவானது பறை ஆட்டத்துடன் ஆரம்பமாகியது. இது மிகவும் முக்கியமானது. பறை என்பது எமது தோல் கருவிகளில் மிகவும் ஆதிகாலத்திலிருந்து பயன்படுத்தப்படும் கருவியாகும். அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் கூட இன்று அந்தக் கருவியைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். இந்த ஒரு விடயத்தையாவது நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.ஆனால் இன்னமும் பலவற்றைச் செய்யவேண்டும். தனித்து அல்லது சின்னச் சின்னக் குழுவாக இதனைச் செய்ய முடியாது. இதனை சமூகமாக, அறிவார்ந்த சமூகத்தவர்கள், படித்தவர்கள், அறிவாளிகள், சமூக நேயம் மிக்கவர்கள், சமூக அக்கறை கொண்ட பலரும் சேர்ந்து இவற்றை முன்னெடுத்தால் தான் இவை நிலைத்து நிற்க முடியும்.

(நிறைவு)

  • ஒலிவடிவ நேர்காணலை எழுத்துருவாக்கித் தந்த மொழிபெயர்ப்பாளரும் புதினப்பலகையின் செய்தியாளருமான நித்யபாரதிக்கு மனமார்ந்த நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *