கிளிநொச்சியில் வெள்ளரச மரத்துடன் மற்றொரு புத்தர் சிலை
கிளிநொச்சியில் புதிதாக புத்தர் சிலையுடன் கூடிய பௌத்த வழிபாட்டு இடம் ஒன்று சிறிலங்கா இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு நேற்றுமுன்தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரத்தில் உள்ள ஜெயசிறீ மகாபோதி வெள்ளரச மரத்தின் கிளையொன்று கிளிநொச்சி படைகளின் தலைமையகப் பகுதியில், கடந்த ஜனவரி மாதம், நாட்டப்பட்டது.
அந்த இடத்தில், புதிதாக சமாதி நிலைப் புத்தர் சிலையுடன் பௌத்த வழிபாட்டு இடம் ஒன்று சிறிலங்கா இராணுவத்தின் 11 ஆவது பொறியியல் படைப்பிரிவினரால் குறுகிய காலத்தில் கட்டப்பட்டுள்ளது.
இந்த சமாதிநிலை புத்தர் நிலையுடன் கூடிய பௌத்த வழிபாட்டு இடம், வெள்ளரச மரத்துக்கான சுற்றுச்சுவர் என்பனவற்றை சிறிலங்கா இராணுவத்தின் கிளிநொச்சிப் படைகளின் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர நேற்றுமுன்தினம் திறந்து வைத்தார்.
வடக்கில் சிறிலங்கா இராணுவத்தினரும், கடற்படையினரும் தொடர்ச்சியாக பௌத்த விகாரைகளையும், வழிபாட்டு இடங்களையும் அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.




