மேலும்

சிறிலங்கா : போர்க்குற்றவாளிகளின் கூடாரம் – அவுஸ்ரேலிய ஊடகம்

sarath-jegathமேற்குலகின் அதிகாரத்துவ நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள், தமது சொந்த பூகோள-அரசியல் நலன்களை அடைந்து கொள்வதற்காகவே இலங்கைத் தீவு தொடர்பாக பொய்ப் பரப்புரை செய்கின்றன என்பது வெட்கம்கெட்ட செயலாகும்.

இவ்வாறு அவுஸ்ரேலியாவைத் தளமாகக் கொண்ட Red Flag ஊடகத்தில் TREVOR GRANT எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

இராணுவ மனோநிலையுடன் கூடிய மிகக்கொடிய ஆட்சி தற்போதும் சிறிலங்காவில் தொடர்வதாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளதானது, இந்தியா மற்றும் அமெரிக்காவின் மறைமுக உதவியுடன் ஆட்சிக்கு வந்த சிறிலங்காவின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் தொடர்பான மக்களின் நம்பிக்கையை தகர்க்கச் செய்துள்ளது.

முள்ளிவாய்க்கால் கரையோரத்தில் 70,000 வரையான அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட உள்நாட்டுப் போரானது ஏழு ஆண்டுகளுக்கு முன்னர்  முடிவிற்கு வந்தாலும் கூட, தமிழ் மக்கள் மீதான சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்பு யுத்தம் இன்னமும் முடிவிற்கு வரவில்லை.

நீதி மற்றும் நல்லிணக்கம் போன்றன நாட்டில் நிலைநாட்டப்படும் என சிறிசேன வாக்குறுதி வழங்கிய போதிலும், இராணுவம் என்பது சிறிலங்கா அரசாங்கத்திற்கு இன்னமும் மிக முக்கிய ஒன்றாகக் காணப்படுகிறது.

குறிப்பாக 2009ன் ஆரம்பத்தில் சிறிலங்காவின் தரை, கடல் மற்றும் வான் படையினர் ஒன்றாக இணைக்கப்பட்டு தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டும் எஞ்சியவர்கள் பாடசாலைகள், வைத்தியசாலைகள், கோயில்கள் மற்றும் திறந்த வெளிகளில் இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களை அடைந்த போது சிறிலங்கா இராணுவத்தினர் எவ்வளவு முக்கியமாக விளங்கினார்களோ அதேயளவு முக்கியத்துவத்தையே உள்நாட்டுப் போர் முடிவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும் தற்போதும் இவர்கள் பெற்றுக்கொள்கின்றனர் என்பதே உண்மை.

சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த மீறல்களில் ஈடுபட்ட மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் மற்றும் போர்க் கால இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர்  நாட்டின் முதன்மைப் பதவிகளில்அமர்த்தப்பட்டனர்.  உண்மையில் இவர்கள் இருவரும் சிறிலங்காவில் நீதி நிலைநாட்டப்பட்டிருந்தால் தற்போது ஹேக் நீதிமன்றின் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்கள்.

மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் இராணுவப் படைகளின் இரண்டாவது நிலைத் தளபதியாக நியமிக்கப்பட்டதுடன், பீல்ட் மார்சல் நிலைக்குத் தரமுயர்த்தப்பட்ட சரத் பொன்சேகா கடந்த மாதம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுப் பின்னர் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தீவிர யுத்த மீறல்களில் ஈடுபட்ட சிறிலங்கா  இராணுவத்தின் முதனிலைத் தளபதிகளாகச் செயற்பட்ட டயஸ் மற்றும் பொன்சேகா ஆகிய இருவரும் ‘போர்த் தவிர்ப்பு வலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த 300,000 தமிழ்ப் பொதுமக்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களாவர்.

சிறிலங்கா இராணுவத்தின் 57வது பிரிவின் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்ட டயஸ், போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் ஜேர்மனிக்கான சிறிலங்காத் தூதராக நியமிக்கப்பட்டார். இவர் மீதான யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுட்டிக்காட்டிய அனைத்துலக சமூகமானது இவர் மீது போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து இவர் இவரது இராஜதந்திரப் பதவியை இழக்க வேண்டியேற்பட்டது.

இதுமட்டுமல்லாது, இவர் மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் காரணமாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்கள் தமது நாடுகளுக்கான நுழைவிசைவை வழங்க மறுத்தன.  டயஸ் மீது அனைத்துலக சமூகத்தால் யுத்தக் குற்றம் சுமத்தப்பட்ட போதிலும், தீவிர சிங்களவர்கள் மத்தியில் யுத்தக் கதாநாயகனாக இவர் நோக்கப்படுகிறார்.

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மற்றும் இனவாத சிங்களவர்கள் மத்தியில் டயஸ் ஒரு கதாநாயகனாகத் திகழும் அதேவேளையில், போருக்குப் பின்னான காலப்பகுதியில் பொன்சேகா பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

குறிப்பாக இவர் 2010ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட்டார். இதனால் இவரது இராணுவ நிலை, பதக்கங்கள், விருதுகள் போன்றன முன்னாள் அதிபர் ராஜபக்சவின் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டதுடன் இவர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் சிறைவாசம் அனுபவித்தார்.

யுத்தத்தின் இறுதியில் சரணடைந்த புலி உறுப்பினர்களைக் கொலை செய்யுமாறு பாதுகாப்புச் செயலரும் அதிபரின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டிருந்ததாக சரத் பொன்சேகா நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். இதற்காக இவர் மேலும் மூன்று ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. எனினும், சரத் பொன்சேகா அழுத்தத்தின் காரணமாக இக்கூற்றைப் பின்வாங்கியதால் தனது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

தற்போது சரத் பொன்சேகா நாடாளுமன்றில் அங்கம் வகிப்பதுடன், பிராந்திய அபிவிருத்திக்கான அமைச்சராகவும் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். எனினும் இவர் தனது கைகளில் 70,000 வரையான அப்பாவித் தமிழ் மக்களின் இரத்தக்கறையைக் கொண்டுள்ளார் என்பதை அனைத்துலக ஊடகங்களில் ஒருபோதும் கூறமுன்வரவில்லை.

இந்த விடயம் சிறிலங்காவின் புதிய அதிபருக்கும் பொருந்தும். ஏனெனில் இவர் தனது தேர்தல் பரப்புரையின் போது போரின் இறுதிக்கட்டத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சராகச் செயற்பட்டதாக தற்புகழ்ச்சியுடன் தெரிவித்தார். அத்துடன் ராஜபக்சாக்கள், பொன்சேகா, டயஸ் மற்றும் சிறிலங்கா அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் போன்று சிறிசேனவும் போர்க் காலத்தில் கட்டளைகளை வழங்கியதன் மூலம் போர்க் குற்றங்களில் ஈடுபட்டார் என்பதே உண்மை.

இந்நிலையில் அனைத்துலக நீதிபதிகள் அடங்கிய போர்க் குற்ற விசாரணைக் குழுவை அமைப்பதற்கு தடையாக சிறிசேன உள்ளார் என்பது ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல. சில மாதங்களின் முன்னர் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வின் போது அனைத்துலக நீதிபதிகளை போர்க் குற்ற விசாரணைக்கு அனுமதிப்பதாக சிறிசேன தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது இவர் தன்னால் வழங்கப்பட்ட வாக்குறுதியை நிராகரிக்கிறார் என்பதிலிருந்து இவரது நிலைப்பாடு என்ன என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

சிறிலங்காவின் அதிபரின் பெயரில் மாற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர, வேறெதிலும் மாற்றங்கள் ஏற்படவில்லை என்பதே உண்மை. சிறிசேன தற்போது தான் ஓடிஒளிந்து கொள்வதற்கான துளை ஒன்றைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்.

இதைவிட, மேற்குலகின் அதிகாரத்துவ நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் நடுத்தர அதிகாரங்களைக் கொண்ட அவுஸ்திரேலியா போன்றன சிறிலங்காவில் சிறந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அனைத்துலக சமூகத்திற்கு பொய்யுரைத்து வருகின்றன. இந்த நாடுகள் தமது சொந்த பூகோள-அரசியல் நலன்களை அடைந்து கொள்வதற்காகவே இலங்கைத் தீவு தொடர்பாக பொய்ப் பரப்புரை செய்கின்றன என்பது வெட்கம்கெட்ட செயலாகும்.

அமெரிக்கா போன்ற நாடுகள் சிறிலங்கா மற்றும் அதன் பிராந்தியம் மீதான சீனாவின் செல்வாக்கைக் குறைப்பதற்காகவும் அவுஸ்திரேலியாவானது தனது கடற்பரப்பிற்குள் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நுழைவதைத் தடுப்பதற்காகவுமே சிறிலங்கா தொடர்பாக பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

போர்க் குற்றவாளிகளைத் தாம் பாதுகாக்கிறோம் என்பதை இந்த நாடுகள் கவனத்திற் கொள்ளவில்லை. 70 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இனப்படுகொலைக்கு அனைத்துலக சமூகமும் தனது ஆதரவைத் தொடர்ந்தும் வழங்கி வருகிறது என்பதற்கு இது பிறிதொரு எடுத்துக்காட்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *