மேலும்

போர் விதிமுறைகளுக்கு முரணாக பிரபாகரன் கொல்லப்பட்டாரா?- விசாரிக்கப்படும் என்கிறது சிறிலங்கா

ruwan-wijewardeneபோரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரன் உயிருடன் இருந்தாரா, போர் முறைமைக்கு முரணான வகையில் அவர் கொல்லப்பட்டாரா என்பது, விசாரணைகளின் மூலம் கண்டறியப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

“போர்க்குற்றச்சாட்டு தொடர்பாக ஏற்கனவே அனைத்துலக தரப்பினர் அவதானித்து வரும் நிலையில், இப்போது அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ள கருத்துகள் மேலும் சர்ச்சைகளை எழுப்பியுள்ளன.

அரசாங்கம் இந்த விவகாரம் தொடர்பாக ஆராய்ந்து சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாகவும், வெள்ளைக்கொடி விவாகரத்திலும் அனைத்துலக கண்காணிப்பாளர்கள் மூலமாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

அவ்வாறான தேவை இப்போது அரசாங்கத்திற்கு இல்லை.  நாம் உள்ளக விசாரணைகள் மூலமாக இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.அதேபோல உள்ளகப்  பொறிமுறைகள் சரியாக நடைபெறும்.

போரின் இறுதித் தருணங்கள் தொடர்பாக அரசாங்கம் தீவிரமான விசாரணைகளை மேற்கொள்ளும்.

இராணுவம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்றாலும் எந்த சந்தர்ப்பத்திலும் இராணுவத்தை இலக்கு வைக்கும் நோக்கம் எமக்கு கிடையாது.

இறுதிப்போரில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பொதுமக்கள் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. அதேபோல் பொதுமக்கள் இராணுவம் வசம் சரணடைந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உண்மைகளை கண்டறியும் நடவடிக்கைகள் பலமாக முன்னெடுக்கப்படும். சரத் பொன்சேகா பல இரகசிய தகவல்களை முன்வைத்து வரும் நிலையில் அவரிடம் இருந்து உண்மைகளை அறியும் விசாரணையை ஆரம்பித்தல் மிகவும் சாதகமாக இருக்கும்.

இறுதிப்போர் தொடர்பாக உண்மையில் என்ன நடந்தது என்பதை அவர் நன்கு அறிந்தவர்.

மேலும் பிரபாகரன் தொடர்பாக, அவர் தெரிவித்த கருத்துகளும் ஆராயப்பட வேண்டும். அவர் போர் முடிந்த பின்னரும் உயிருடன் இருந்தாரா என்பதை ஆராய வேண்டும்.

போர் விதிமுறைகளுக்கு முரணாக அவர் கொல்லப்பட்டிருந்தால் அவற்றையும் கருத்தில் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை கையாள வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *