மேலும்

எம்மைப் போர்க்குற்றவாளிகளாக்க முயற்சி – புலம்புகிறார் மகிந்த

Mahinda-Rajapaksaபோர் விதிமுறைகளுக்கு முரணாகப் போரிட்டதாக, குற்றம்சாட்டி எம்மைப் போர்க்குற்றவாளிகளாக்கும் முயற்சிகள் தீவிரமாக இடம்பெறுவதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

“என்னை பழிவாங்கவும், எனது குடும்பத்தை தண்டிக்கவும் தற்போதைய அரசாங்கம் தீவிரமாக முயற்சித்து வருகிறது.

செய்யாத குற்றங்களுக்காக நாம்  தண்டனை அனுபவித்து வருகிறோம். எனது புதல்வர் யோசித செய்யாத குற்றத்துக்காக சிறையில் உள்ளார்.

ரகர் வீரர் தாஜுதீன் மரணம் தொடர்பாக மற்றைய புதல்வர் நாமல் ராஜபக்சவை கைதுசெய்ய அரசாங்கம் திட்டம் தீட்டுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

நாம் எவ்வாறு போரை முன்னெடுத்தோம், அதற்கான செலவுகள் என்ற அனைத்தும் சரத் பொன்சேகாவுக்கு நன்றாகவே தெரியும். அவர் அப்போதைய இராணுவத் தளபதி என்ற வகையில் எமக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கினார். அதை நான் மறைக்காமல் கூறவேண்டும்.

ஆனால் அதையும் தாண்டி அவர் தனிப்பட்ட ரீதியில் செய்த தவறுகள் தொடர்பாகவும் எம்மிடம் பதிவுகள் உள்ளன. அந்த காரணிகளை எல்லாம் நாம் ஊடகங்களிடம் முன்வைத்தால் இன்று அவருக்கு இருக்கும் கொஞ்ச மரியாதையும் பறிபோய் விடும்.

அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல் போர் எப்போது முடிவுக்கு வந்தது, பிரபாகரன் கொல்லப்பட்டரா இல்லையா என்ற தகவலும் எனக்குத் தெரியும்.

சரத் பொன்சேகா மட்டுமே எமக்கு தகவல்களை வழங்கவில்லை. இராணுவத்தின் பல வழிகளில் இருந்தும், எமக்கு தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டு கிடைத்துக் கொண்டிருந்தன.

சரத் பொன்சேகா அதிகாரபூர்வமாக செயற்பட்ட ஒரு அதிகாரி மட்டுமேயாவர். அதைவிட அவர் பல இரகசியங்களை அறிந்திருக்கவில்லை.

இப்போதும் கூட, ஐதேகவினர்  தனிப்பட்ட பழிவாங்கல் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகளில் என்னையும் கோத்தாபய ராஜபக்சவையும் பழிவாங்கப் பார்க்கின்றனர்.  அதற்கு சரத் பொன்சேகா உடந்தையாக செயற்படுகிறார்.

தேசியப்பட்டியல் மூலம் ரணில் வாழ்க்கை கொடுத்துள்ளார். அந்த நன்றிக்கடன் இப்போது வெளிப்படுகிறது.

பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னரே நான் போர் முடிவடைந்ததை அறிவித்தேன். அவரது உடலை எமது இராணுவம் உறுதிப்படுத்தியது.

தலையில் துப்பாக்கி ரவைகள் பட்டு தலை சிதைத்த நிலையில் அவரது உடல் கிடப்பதாக புகைப்படங்களுடன் எனக்கு அந்த நேரத்திலேயே இராணுவம் தெரிவித்தது.

இவை நடந்த போது சரத் பொன்சேகா எம்முடன் இருக்கவில்லை. அவ்வாறு இருக்கையில் அவர் கூறும் கதைகளை எவரும் நம்பப்போவதும் இல்லை.

போர்விதிமுறைக்கு முரணாக நாம் போரிட்டோம் என சித்தரித்து எம்மை போர்க்குற்றவாளியாக்கும் முயற்சிகளின் விளைவுகளே இவை.

விடுதலைப்புலிகளுக்கு நாம் பணம் கொடுத்ததாகவும், சுனாமி உதவி நிதி என்ற பெயரில் நாம் புலிகளை பலப்படுத்தியதாகவும் இன்று ஒரு சிலர் குற்றம் சுமத்திவருகின்றனர்.  இது முழுப்பொய்யாகும்.

நாம் புலிகளை பலப்படுத்த நினைத்திருந்தால் பிரபாகரனை கொன்றிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

நாட்டையும் மக்களையும் விடுவிக்கவும் பலமான நாடாக சிறிலங்காவை கட்டியெழுப்பவுமே நாம் போரைத் தைரியமாக எதிர்கொண்டோம்.

எனக்கு முன்னிருந்த தலைவர்களால் முடியாத காரியத்தை நாம் செய்துகாட்டியதே இன்று எவராலும் பொறுத்துக்கொள்ள முடியாத காரியமாக மாறியுள்ளது.

இப்போது இருக்கும் நிலைமையில் என்னை பழிவாங்கும் ஒரே நோக்கத்தில் பிரபாகரனை மீண்டும் உயிருடன் கொண்டு வந்தாலும் ஆச்சரியமில்லை. இன்னும் சில நாட்களில் அந்த செய்தியும் ஊடகங்களில் வெளிவரும். ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *