முடங்கும் நிலையில் சிறிலங்கா விமானப்படையின் சி-130 விமானக் கொள்வனவு
சிறிலங்கா விமானப்படைக்கு இரண்டு சி-130 கே ரக போக்குவரத்து விமானங்களைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை, சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்தி வைக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
20 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இரண்டு சி-130 கே போக்குவரத்து விமானங்களைக் கொள்வனவு செய்ய சிறிலங்கா விமானப்படை திட்டமிட்டிருந்தது. இவற்றில் ஒன்று நீண்ட உடல் அமைப்பையும் மற்றையது வழக்கமான ரகத்தையும் சேர்ந்தது.
இந்த விமானங்கள் தலா 17.5 மில்லியன் ஸ்ரேலிங் பவுணுக்கு சிறிலங்கா விமானப்படைக்கு விற்கப்படவிருந்தன.
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சின் ஊடாக பணியாற்றும் மார்ஷல் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இந்த இரு விமானங்களையும் விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது.
பிரித்தானியாவின் ரோயல் விமானப்படையில் இருந்து இந்த இரண்டு விமானங்களும், கடந்த 2013 ஒக்ரோபரில் ஓய்வெடுத்துக் கொண்டன.
சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் ககன் புலத்சிங்கள தலைமையில், வான் பொறியியில் பிரிவின் பணிப்பாளர் எயர் வைஸ் மார்ஷல் எச்.ஏ.சில்வா, விமானப்படையின் இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியாளர் பிரிவின் பிரதிநிதி விங்கொமாண்டர் பி.என்.பெர்னான்டோ, சி-130 விிமானத்தின் விமானிப் பயிற்றுவிப்பாளர் விங்கொமாண்டர் ஏ.பி.ஜெயமகா ஆகியோர், ஐந்து நாள் பயணமாக கடந்த ஜனவரி மாதம் பிரித்தானியா சென்று இந்த விமானங்களை ஆய்வுக்குட்படுத்தியிருந்தனர்.
இந்த விமானங்களை பிரித்தானிய- சிறிலங்கா அரசாங்கங்களுக்கிடையில் உடன்பாடு செய்து கொள்வனவு செய்ய வேண்டும் என்று சிறிலங்கா விமானப்படைத் தளபதி பரிந்துரைத்துள்ளார்.
அதேவேளை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த விமானங்களை சிறிலங்காவுக்கு மறு ஏற்றுமதி செய்வதானால், அமெரிக்காவின் அனுமதியை பி்ரித்தானியா பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஏற்கனவே சிறிலங்கா விமானப்படை கொள்வனவு செய்திருந்த இரண்டு சி-130 விமானங்களில் ஒன்று மட்டுமே தற்போது சேவையில் இருக்கின்றது.
இந்த நி்லையிலேயே தற்போது, வேல்ஸ்சில் உள்ள ஸ்ராத்தம் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரண்டு சி-130 கே விமானங்களையும் கொள்வனவு செய்யும் முயற்சியில் சிறிலங்கா விமானப்படை இறங்கியிருந்தது.
ஆனால் தற்போது சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், இந்த விமானக் கொள்வனவு இடைநிறுத்தி வைக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.
அவசியமற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் சிறிலங்கா விமானப்படையின் இந்த திட்டம் முடக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.