மேலும்

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் நுழையும் முதல் பீல்ட் மார்ஷல்

field-marshan-sarath-fonseka (1)சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐதேகவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் ஐதேகவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்த்தன காலமானதை அடுத்து, தேசியப் பட்டியல் ஆசனம் வெற்றிடமாகியுள்ளது.

அந்த வெற்றிடத்துக்கே, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்படவுள்ளார். வரும் பெப்ரவரி 09 ஆம் நாள் நாடாளுமன்றம் கூடும் போது, இவர் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஓகஸ்ட் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சிக்கு ஒரு ஆசனம் கூடக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கும் படி சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையிலும், ஐதேகவுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்தும், அவருக்கு தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேகா இந்தப் பதவியை ஏற்றுக் கொண்டால், சிறிலங்கா நாடாளுமன்றத்தில், அங்கம் வகித்த மூத்த இராணுவ அதிகாரியாக இடம்பெறுவார்.

இதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் தரத்தைச் சேர்ந்த சரத் முனசிங்கவே, நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த மூத்த இராணுவ அதிகாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *