அனைத்துலக நீதி கோரும் உண்ணாவிரதப் போராட்டம் -தீப்பந்த போராட்டத்துடன் நிறைவு
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் அனைத்துலக நீதி கோரி சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதிநாள் போராட்டம் இன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணம், செம்மணியில் கடந்த 25ஆம் திகதி ஆரம்பமான இந்தப் போராட்டம் இன்று பிற்பகலுடன் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது.
போராட்டத்தின் இறுதி நாளான இன்று பகல் 1 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்கள், தீப்பந்தங்களை ஏந்தி நீதி கோரி கோசங்களை எழுப்பினர்..
அனைத்துலக சிறுவர் தினத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட சிறுவர்களுக்கு நீதி வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
உள்நாட்டு யுத்தத்தின்போது நடத்தப்பட்ட மனித உரிமைமீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டமை உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் கடந்த மாதம் 25ஆம் திகதி செம்மணியில் ஆரம்பிக்கப்பட்டது.