மேலும்

இரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 04

‘ஒரு விடுதலைப் போராட்டத்தில்  வெற்றிகளும் தோல்விகளும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களை போன்றவை. விடுதலை என்ற இலக்கை அடையும் வரை இவை இரண்டும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். உண்மையான விடுதலைப் போராளிகள் வெற்றிகளை கண்டு மமதையடையவோ தோல்விகளை கண்டு சோர்ந்து போகவோமாட்டார்கள்’

000

விடுதலை அமைப்பை மீள ஒருங்கிணைப்பது தொடர்பாக….

ஒரு விடுதலைப்போராட்டம் மிகப் பெரிய தோல்வியை சந்திக்கின்ற போது அந்த விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கம் எதிர் கொள்கின்ற மிகப்பெரிய நெருக்கடி அதன் கட்டமைப்புகள் சிதைந்து போவதாகும்.

அதிலும் இவ்வாறான நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் தலைமைத்துவ வழிகாட்டல் இல்லாமல் போகும் போது அந்த அமைப்பை மீள ஒருங்கிணைப்பது,தோல்விக்கான காரணங்களை ஆராய்வது,அந்தத் தோல்வியில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி போராட்டத்தை நகர்த்துவது என்பவற்றை யார் செய்வது  என்பதில் பிரச்சினை ஏற்படும். சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம், இரட்டை உளவாளிகளின் பிரச்சினை என்று ஒரே நேரத்தில் பல நெருக்கடிகளை அந்த விடுதலை இயக்கம் சந்திக்கும்.

இது உலகம் பல்வேறு பகுதிகளிலும் தமது மக்களின் விடுதலைக்காக போரிட்ட பல்வேறு விடுதலை இயக்கங்கள் எதிர் கொண்ட பொதுவான பிரச்சினை தான். குறிப்பிடத்தக்க அளவில் ஒவ்வொரு விடுதலை இயக்கங்களும் தமக்கென சில தனித்துவங்களையும் தனியான பிரச்சினைகளையும் கொண்டிருந்தாலும் அமைப்பு ரீதியான நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் சில நடைமுறைகள் இருக்கின்றன. இந்த நடைமுறைகள் பல்வேறு விடுதலை இயக்கங்களில் அனுபவ பாடங்களில் இருந்து பெறப்பட்டவையாகும்.

ஓரு விடுதலை இயக்கம் ஒரு விடுதலைப் போரை நடத்துகின்ற பொழுது அது தளப்பிரதேசம் (களம்) பின்தளப் பிரதேசம் (புலம்) செல்வாக்குப் பிரதேசம் என்ற மூன்று தளங்களில் தனது செயற்பாட்டை கொண்டிருக்கும்.

(தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வடக்கு கிழக்கு தளப்பிரதேசமாகவும், 1987 வரை தமிழகமும் 1990 களில் இருந்து புலம் பெயர்ந்த நாடுகளும் பின்தள பிரதேசங்களாகவும், 1992 க்குப் பின்னர் தமிழகம் செல்வாக்குப் பிரதேசமாகவும் இருந்தது.)

அதேபோல ஒரு விடுதலை இயக்கம் தனக்கான உறுப்பினர்களை கொண்டிருக்கும்  அதேநேரத்தில், தனக்கென செயற்பாட்டாளர்களையும் (தொண்டர்களையும்) பணியாளர்களையும் (ஊதியம் பெறுபவர்கள்) கொண்டிருக்கும். உறுப்பினர்கள் அநேகமாக போராளிகளாகவும் ஒரு சிலர் புரட்சிகர அரசியல் செயற்பாட்டாளர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் அநேகமாக களத்திலேயே இருப்பார்கள். ஒரு சிலர் மட்டும் சில பொறுப்புகளுக்காக  பின் தளம் மற்றும் செல்வாக்கு பிரதேசத்துக்கு அனுப்பப்படுவார்கள். அவர்களுக்கென்று எப்போதும் இயக்கப் பெயரும் அவர்களுக்கான (தகட்டு)இலக்கமும் இருக்கும்.

அடுத்து செயற்பாட்டாளர்கள் என்ற வரையறைக்குள் அடக்கப்படுபவர்கள் இயக்க உறுப்பினர்கள் அல்ல. இவர்கள் இயக்கத்தினுடைய தீவிரமான ஆதரவாளர்கள் என்ற நிலையில் வைத்தே பார்க்கப்படுவார்கள். இயக்கம் இவர்களை தனது வேலைத்திட்டங்களில் பயன்படுத்திக் கொள்ளும். இவர்கள் பெரும்பாலும் தங்களது சொந்த வேலைகளை பார்த்துக் கொண்டே இயக்க செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள். விதி விலக்காக ஒரு சிலர் முழுநேர செயற்பாட்டாளராக செயற்படும் போது இயக்கம் அவருக்கு பயிற்சி கொடுத்து அவரை தமது உறுப்பினராக இணைத்துக்கொள்ளும். இயக்கம் ஒருபோதும்  செயற்பாட்டாளர்களுக்கு இயக்கப்பெயரோ, தகட்டு இலக்கமோ வழங்குவதில்லை. இவர்கள் இயக்கத்தை கட்டுப்படுத்தவோ  இயக்க உறுப்பினர்களுக்கு உத்தரவிடவோ அல்லது அவர்களை  அதிகாரம் செய்யவோ முடியாது. இவர்களுக்கு இயக்கம் ஒரு நிர்வாக பொறுப்பை வழங்கி அந்த நிர்வாகத்தில் பணிபுரியுமாறு சில போராளிகளை அனுப்பிவைத்தால் அவர்களுக்கு இவர்கள் உத்தரவிடலாம். ஆனால் அவர்களை இவர்கள் தண்டிக்க முடியாது. அவர்கள் விட்ட தவறை இயக்கத்துக்கு அறிவிக்க வேண்டும்.

இயக்கம் தனக்கான சில வேலைகளை செய்விப்பதற்காக சம்பளம் வழங்கி பணிக்கமர்த்தப்படுபவர்கள் ‘இயக்கப்பணியாளர்கள்’ என அழைக்கப்படுகின்றனர். இவர்களும் இயக்கத்தின் ஆதரவாளர்கள் தான். ஆனால் இவர்களுக்கும் இயக்கத்தின் மீது அதிகாரம் செலுத்தும் எந்த உரிமையும் இல்லை.

பொதுவாக ஒரு விடுதலை இயக்கம் மிகப் பெரிய தோல்வியை சந்தித்து தனது தளப்பிரதேசங்களை இழக்கின்ற போது அது உடனடியாக தனது நிர்வாகக் கட்டமைப்பை பின்தளப்பிரதேசத்துக்கு மாற்றும். இந்த காலகட்டத்தில் தலைமையின் வழிகாட்டல் இல்லாது போனால் உடனடியாக போரில் உயிர் தப்பிய மூத்த உறுப்பினர்களை உள்ளடக்கிய  இடைக்கால நிர்வாக அமைப்பு ஒன்று உருவாக்கப்படும். இந்த அமைப்பில் தளப்பிரதேசத்தில் இருந்து வந்த இயக்க உறுப்பினர்கள் ஏற்கனவே பின்தள மற்றும் செல்வாக்கு பிரதேச வேலைகளுக்காக அனுப்பப்பட்ட இயக்க உறுப்பினர்கள் அங்கம் வகிப்பார்கள்.

இவர்களில் இருந்து 3 அல்லது 5  பேர் கொண்ட இடைக்கால உயர்மட்ட  செயற்பாட்டு குழு ஒன்று அமைக்கப்படும்.இந்த மூன்று பேருமே இயக்கம் பழைய நிலைக்கு வரும் வரை அதனை வழிநடத்துவார்கள். இவர்களது வழி நடத்தலை ஏற்று இயக்க செயற்பாட்டாளர்கள் பணியாளர்கள் செயற்பட வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் இயக்கத்தின் நெருக்கடியான சூழ்நிலையை பயன்படுத்தி இயக்க உறுப்பினர்கள் அல்லாதவர்கள் இயக்கத்தை வழி நடத்தவும் இயக்க உறுப்பினர்களை கட்டுப்படுத்தவும் அனுமதிக்கப்படுவதில்லை.

பொதுவாக ஒரு அமைப்பின் உறுப்பினரல்லாத ஒருவர் அந்த அமைப்பின் செயற்பாட்டை தீர்மானிக்க முடியாது என்பது இதற்கான பொது விதியாக இருந்தாலும் பெரும்பாலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் செல்வாக்கும் பிரதேசங்களிலும் இருக்கும் ஒரு விடுதலை இயக்கத்தின் செயற்பாட்டு தளத்துக்குள்ளும் ஆதரவு தளத்துக்குள்ளும் எதிரி சுலபமாக ஊடுருவுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதிலும் ஒரு போராட்டம் பெரும் தோல்வியை சந்திக்கும்  போது இது அதிகமாக நடக்கும். அதை எதிர் கொண்ட முறியடிப்பதற்காகவே போராளிகள் இயக்க உறுப்பினர்கள் அல்லாதவர்களையும் புதியவர்களையும் உடனடியாக நிர்வாக அமைப்பில் இணைத்துக் கொள்வதையும் அவர்களுக்கு பொறுப்புக்களை கொடுப்பதையும் நெருக்கடி காலகட்டத்தில் செய்யக் கூடாத ஒரு செயலாக விடுதலை இயக்கங்கள் கருதுகின்றன

1999ம் ஆண்டு பிகேகே எனப்படும் குர்திஷ்தான் விடுதலை இயக்கத்தின் தலைவர் அப்துல்லா ஒச்சலான் கென்யாவில் வைத்து இஸ்ரேலிய உளவு படையான மொசாட்டின் உதவியுடன் துருக்கி கொமாண்டோ படையினரால் கைது செய்யப்பட்ட போதும்,  1992 ம் ஆண்டு பெருவின் சைனிங் பாத் எனப்படும் ஒளிரும் பாதை விடுதலை இயக்கத்தின் தலைவர் அபிமல் குஸ்மான் பெரு அரசபடைகளால் கைது செய்யப்பட்ட போதும்,  அந்த விடுதலை இயக்கங்கள் நாம் இன்று எதிர் கொள்ளும் நெருக்கடிகளை போல பாரிய நெருக்கடிகளை சந்தித்தன.

உடனடியாக இந்த விடுதலை இயக்கங்கள் மேலே குறிப்பிட்டதைப் போன்ற இடைக்கால புரட்சி குழு ஒன்றை அமைத்து இந்த நெருக்கடியில் இருந்து மீண்டன.

இதிலே குர்திஷ்தான் விடுதலைப் போராட்டத்துக்கும் நமக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருக்கின்றன. அவர்களது தற்போதைய நிலைமையில் இருந்து சில பாடங்களை நாங்கள் கற்றுக் கொள்ளலாம்.

தமிழ் மக்களைப் போலவே குர்திஷ் மக்கள் நீண்ட வரலாற்றையும் தங்களுக்கான வரலாற்று தாயகம் என்று சொல்லக் கூடிய மிகப் பெரிய நிலப்பரப்பையும் கொண்டிருந்தவர்கள்.

இந்த நிலப்பரப்பு இன்றைய துருக்கி, ஆர்மேனியா, ஈராக், ஈரான், சிரியா ஆகிய நாடுகளின் கணிசமான பகுதிகளை உள்ளடக்கிய பெரும் நிலப்பரப்பாக இருந்தது. முதலில் துருக்கியின் ஒட்டமான் சாம்ராட்சியம் குர்தியர்களை அடிமைப்படுத்தியது. அதன் வீழ்ச்சிக்குப் பின்னர் அந்த இடத்தை கைப்பற்றிய பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியார்கள் குர்திஷ் இனம் ஒரு பெரும் தேசிய இனமாகவும் அவர்களது தாயக நிலப்பரப்பு ஒரு பெரும் தேசமாகவும் உருவாகாமல் திட்டமிட்டு தடுத்து அவர்களை  துருக்கி, ஆர்மேனியா, ஈராக், ஈரான்,சிரியா ஆகிய நாடுகளுக்குள் ஏனைய பெரும்பான்மை சமூகத்தின் அதிகாரத்தின் கீழ் வாழும் சிறுபான்மையினராக ஆக்கிவிட்டார்கள்.

முதலாம் உலகயுத்தத்தின் பின்னர் துருக்கியில் ஆட்சிக்கு வந்த முஸ்த்தபா கமல் அட்டாதுர்க் என்ற முன்னாள் இராணுவ அதிகாரியின் தலைமையிலான அரசாங்கம் ஆர்மேனிய மக்களை இனப்படுகொலை செய்ததைப் போல குர்திஷ் மக்களையும் மிகக் கொடுமையாக ஒடுக்கியது.

குர்திஷ் மக்களுடைய குர்து மொழி தடை செய்யப்பட்டது. குர்திஷ் மக்கள் துருக்கி அரசின் ஆட்சிக்குட்பட்ட நிலப்பரப்பின் எந்தப் பகுதியையும் தங்களது மரபு வழித்தாயகம் என்று அமைப்பது தேசத்துரோக குற்றமாக பிரகடனப்படுத்தப்பட்டது. குர்திஷ் மக்களின் தாயக கோட்பாட்டை சிதைப்பதற்காக அவர்கள் அவர்களது பாரம்பரிய கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு சுமார் ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் ஈராக்கிய எல்லையிலுள்ள மிகவும் பின் தங்கிய மலைப்பகுதியில் குடியேறுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அங்கும் அவர்கள் தங்களை குர்தியர்கள் என்று அழைக்காமல் மலைநாட்டு துருக்கியர்கள் என்றே அழைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டார்கள். குர்திஷ் மொழி பாடசாலைகளுக்கு தடை விதிக்கப்பட்டதுடன் துருக்கி மொழியிலேயே அவர்களின் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

மறு புறத்திலே ஈராக்கிலும் ஈரானிலும் கூட குர்திஷ் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டார்கள். ஈரானில் வாழ்ந்த குர்தியர்கள் தங்கள் தொழியை இழந்து ஈரானின் பெர்சி மொழியை பேசுபவர்களாக மாற்றப்பட்டு விட்டார்கள்.

100 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்த இந்த ஒடுக்குமுறை மற்றும் இனஓதுக்கல் கொள்கைக்கு எதிராகவும் தங்களது அடையாளத்தையும் சுய நிர்ணய உரிமையையும் நிலைநாட்டுவதற்காகவும் 1960 களில் குர்திஷ் விடுதலை இயக்கங்கள் உருவாக ஆரம்பித்தன. ஆனால் இந்த இயக்கங்களில் மத அடிப்படைவாதம், ஆணாதிக்க சிந்தனை முதலானவை தலை தூக்கியதால் அவற்றால் குர்திஷ் மக்களை ஒற்றுமைப் படுத்தவோ  அவர்களது விடுதலையை வென்றெடுக்கவோ முடியவில்லை.

இந்த நிலையில் 1970 ம் ஆன்டு குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பிகேகே) புரட்சிகர  இயக்கம் உருவாகியது.

இந்த இயக்கம் குர்தியர்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமையுடன்  அவர்களது சமூக விடுதலையையும் வலியுறுத்தியது. குர்திஷ் மக்களுடைய மரபுவழி தாயகத்தை மீட்டு சுதந்திர குர்திய அரசை நிறுவதே தமது குறிக்கோள் என்று பிரகடனப்படுத்தியது. 1980 ல் துருக்கிய இராணுவ அடக்குமுறைக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தையும் கெரில்லா தாக்குதல் முறையையும் அந்த இயக்கம் ஆரம்பித்தது. பல்லாயிரக் கணக்கான இளவயதினர் ஆண்களும் பெண்களும் இந்த இயக்கத்தில் வந்து இணைந்தனர். குர்திஸ் மக்கள் மத்தியில் இந்த இயக்கம் அமோக ஆதரவை பெற்றது. இந்த இயக்கத்தின் தலைவர் அப்துல்லா ஒச்சலான்  குர்திஷ் மக்களால் அதிகம் நேசிக்கப்பட்டார்.

குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் இந்த வளர்ச்சி துருக்கிக்கு அச்சத்தை கொடுத்தது. மக்களின் செல்வாக்குடன் இலட்சிய உறுதிமிக்க புரட்சிப்படையை கொண்டிருந்த இந்த அமைப்பை வெற்றிகொள்வது துருக்கிக்கு முடியாத விடயமாக இருந்தது. இதனால் அது அமெரிக்கா மற்றும் மேற்குலகின் நேட்டோ எனப்படும் வட அத்திலாந்திக் பாதுகாப்பு அமைப்பில் உறுப்பினராக இருப்பதை பயன்படுத்தி பிகேகேயை ஒடுக்குவதற்கு அமெரிக்காவினதும் மேற்குலகினதும் உதவியை  நாடியது. சதாம் ஹுசேனின் ஆட்சிக்காலத்தில் ஈராக்கிய எல்லைக்குள் இருந்த குர்திஸ் போராளிகளின் தளப்பிரதேசங்களை துருக்கியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

‘அகண்ட குர்திஸ்தான் என்ற நாட்டின் உருவாக்கம் தனது நாட்டுக்கும் நலனுக்கும் அச்சுறுத்தலாக அமையும்’ என்று கருதி அப்போதைய ஈராக்கிய அரசுத்தலைவர் சதாம் ஹுசேனை அணுகிய அமெரிக்கா, துருக்கிய  எல்லப்பகுதியில் ஈராக்குக்குள் இருந்த குர்தியர்களின் தளப்பிரதேசங்கள் மீது ஈராக் படைகளைக் கொண்டு கொடூரமான இனஅழிப்பு தாக்குதலை நடத்துவித்தது. அப்போது சதாம் ஹுசேன் அமெரிக்க விசுவாசியாக இருந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று. 1992 ல் அவர் அமெரிக்க விரோதியாக மாறிய பின்பு அவருக்கு எதிரான போர் குற்றங்களில் ஒன்றாக  குர்தியர்களுக்கு எதிராக அவர் நடத்திய இந்தத் தாக்குதல்களை அமெரிக்கா முதன்மை படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து அமெரிக்காவாலும் மேற்குலகாலும்  குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்பட்டது.

இது பிகேகே அமைப்புக்கு நெருக்கடியை கொடுத்தது. அதேநேரம் ஈராக்கில் இடம்பெற்ற அமெரிக்க இராணுவத்தலையீடும் சதாம் ஹுசேனின் வீழ்ச்சியும் துருக்கிய படைகள் தங்கு தடையின்றி ஈராக்கிலுள்ள குர்தியர்களின் தளப்பிரதேசங்களுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த வழிவகுத்தது.

இதனால் முன்னாள் சோவியத் ஒன்றிய ஆதரவு நாடும் தற்போதைய ரஷ்ய ஆதரவு நாடுமான சிரியாவுக்கு பிகேயின் தளப்பிரதேசங்கள் மாற்றப்பட்டன. அப்துல்லா ஒச்சலானும் தனது இருப்பிடத்தை சிரியாவுக்கு மாற்றிக் கொண்டார்.

துருக்கி, அமெரிக்காவின் உதவியுடன் சிரியாவிலுள்ள அப்துல்லா ஒச்சலானை கைது செய்ய முயன்றது. பயங்கரவாதி என்று தங்களால் அடையாளப்படுத்தப்பட்ட ஒச்சலானை சிரியா கைது செய்து துருக்கியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா சிரியாவை நிர்ப்பந்தித்தது. ஆனால் சிரிய அதிபர் ஆசாத் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அமெரிக்காவும் விடாமல் ஈராக்கை போல சிரியா மீதும் படையெடுக்க ஒச்சலான் காரணமாக இருப்பார் என்று மிரட்டியது. ஏற்கனவே அமெரிக்காவாலும் மேற்குலகாலும் தூண்டிவிடப்பட்ட உள்நாட்டு கலவரங்களால் நெருக்கடியை எதிர்கொண்டிருந்த சிரிய அதிபர் ஆசாத் ஒச்சலானை தனது நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டார்.

வேறு வழியின்றி ஒச்சலான் சிரியாவை விட்டு வெளியேறி இத்தாலிக்குச் சென்றார். அங்கிருந்தும் அவர் வெளியேற நிர்பந்திக்கப்பட்டார். இந்தப் பின்ணியில் தான் அவர் கென்யாவில் வைத்து துருக்கிய கொமாண்டோக்களால் கைது செய்யப்பட்டு துருக்கிக்கு கொண்டு வரப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். துருக்கி நீதிமன்றம் முதலில் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பின்னர் அது சிறையை விட்டு வெளியே வரமுடியாத ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அத்துடன் ஐரோப்பிய நீதி மன்றம் பிகேகேயை பயங்கரவாத பட்டியலில் இட்டது தவறென்று தீர்ப்பளித்ததுடன் ஒச்சலானின் மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளது.

ஓச்சலானின் கைது குர்திஷ் மக்களிடையே அதிர்வலைகளை தோற்றுவித்தது. இந்தக் கைதை அடுத்து பிகேகேயின் எஞ்சியிருந்த இராணுவ தளங்கள் மீது துருக்கி தனது இராணுவ தாக்கதல்களை தீவிரப்படுத்தியது.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் பிகேகே இடைக்கால புரட்சிசபை ஒன்றை உருவாக்கிய போராட்டத்தை தொய்வின்றி வழி நடத்தியது. மக்கள் முன்னரை விட அதிகமாக எழுச்சி கொள்ள ஆரம்பித்தனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத துருக்கியின் ரெசெப் தஹீப் எர்கேடன் தலைமையிலான அரசு தந்திரோபாய அடிப்படையிலான புதிய திட்டம் ஒன்றை உருவாக்கி அதை தன்னுடைய ஒத்தோடிகளான குர்திய குழுவொன்றை கொண்டு நடைமுறைப்படுத்தியது.

இந்தக் குழு குர்திஷ்தான் விடுதலைப் பற்றி உணர்ச்சி ததும்ப பேசியது. இது தொடர்பாக ஏராளமான கட்டுரைகளை பல்வேறு புனை பெயர்களில் எழுதியது. குர்திஷ் மக்கள் மத்தியில் தங்களை மிகப் பெரிய தேசிய உணர்வாளர்களாக காட்டிக்கொண்டது. அதன் பின் ஒச்சலான் துருக்கியிடம் பிடிபட்டு சிறையில் இருப்பதை காரணம் காட்டி பிகேகே தளபதிகள் முன்னணி போராளிகள் எல்லாம் துருக்கி அரசுக்கு விலை போனவர்கள் துரோகிகள் பரப்புரை செய்தது. முன்னணி போராளிகள் மற்றும் தளபதிகளின்  இருப்பிடங்களை கண்டுபிடித்து காட்டிக் கொடுக்கும் வேலைகளை தங்களால் திட்டமிட்டு பரப்பப்பட்ட போல உணர்வலைக்கு மயங்கி தங்களுடன் இணையும் புதியவர்களை வைத்து செய்வித்தது.

இதன் விளைவு குர்திஷ் மக்களின் மாபெரும் சத்தியாக இருந்த பி.கே.கே. இன்று மூன்றாக பிரிந்து விட்டது.  இதில் ஒரு குழு  துருக்கி இராணுவத்தின் துணைப்படையாக இயங்கி வருகின்றது. இந்தக் குழுவே தியாகி துரோகி அரசியலையும் அதீத குர்திஷ் தேசியம் பேசும் உணர்ச்சி அரசியலையும் முன்னெடுத்த முன்னைய இரகசியக் குழுவாகும்

ஒச்சலானுக்கு ஆதரவான  பிரிவு, ஈராக் குர்திஸ்தானில், காண்டில் மலைப்பகுதியில் முகாம்களை அமைத்து அங்கிருந்து துருக்கிக்கும் இப்போது ஐஸ்.ஐஸ் அமைப்புக்கு எதிராகவும் போராடிவருகிறது.

இன்னொரு பிரிவு சிரியாவில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் பிரிவினரும் அங்கிருந்த படி, துருக்கி இராணுவத்தின் மீது தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர்.

இதில் ஈராக் பிரிவிற்கு ஒச்சலானின் சகோதரனும், மற்ற பிரிவுக்கு அந்த முன்னணி தளபதி ஒருவரும் தலைமை தாங்குகின்றனர். இந்த இரண்டு குழுக்களும் ஒன்றை மற்றொன்று ‘துரோகக் குழு’ என்று குற்றம் சுமத்தி வருகின்றன. இவற்றைவிட சுயேட்சையாக இயங்கும் இரண்டு சிறு பிரிவுகளும் உள்ளன. இந்தக் குழுக்களுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆயுதம் வழங்கி  ஐஸ்.ஐஸ் அமைப்புக்கு எதிராக போராட வைத்திருக்கின்றன.

– சிவா சின்னப்பொடி
(தொடரும்)

ஒரு கருத்து “இரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 04”

  1. மனோ says:

    உலகச் சமாச்சாரம் எல்லாம் சரி. உள்வீட்டுச் சமாச்சாரம் எப்படி இருக்கு. நிலத்திலும் புலத்திலும் ◌தமிழர் கதை கிழிஞ்சு கந்தலாகிக் கிடக்கிறதே. மீட்சிக்கு வழி இருக்கிறதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *