மேலும்

நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் – சரிகிறதா மைத்திரியின் செல்வாக்கு?

maithriசிறிசேன 12 மாதங்களின் முன்னர் மேற்கொண்ட தனது தேர்தல் பரப்புரையின் போது பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். இவற்றுள் பல இன்னமும் தீர்வு காணப்படாதவையாக உள்ளதால் இது தொடர்பில் தனது ஆதரவாளர்களுக்குப் பொறுப்பளிக்க வேண்டிய நிலையிலுள்ளார்.

இவ்வாறு ASIA TIMES ஊடகத்தில், MUNZA MUSHTAQ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில், ஆதரவாளர்கள் மத்தியில் காணப்பட்ட அவருக்கான ஆதரவு தற்போது குறைவடைந்து வருவது போல் தெரிகிறது.

சிறிசேன 12 மாதங்களின் முன்னர் மேற்கொண்ட தனது தேர்தல் பரப்புரையின் போது பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். இவற்றுள் பல இன்னமும் தீர்வு காணப்படாதவையாக உள்ளதால் இது தொடர்பில் தனது ஆதரவாளர்களுக்குப் பொறுப்பளிக்க வேண்டிய நிலையிலுள்ளார்.

சிறிலங்காவில் அதிகாரத்துவ ஆட்சி நடத்திய மகிந்த ராஜபக்சவை ஆட்சியிலிருந்து நீக்குவதற்காக கடந்த ஆண்டு ஜனவரி 08 அன்று அதிபர் தேர்தல் இடம்பெற்றது. இதன் மூலம் மகிந்தவின் முன்னாள் கூட்டாளியான மைத்திரிபால சிறிசேன நாட்டின் அதிபரானார். ஊழல் மோசடி மற்றும் பாரபட்சம் போன்றவற்றிலிருந்து இந்த நாட்டை மீட்பதுடன், நல்லாட்சியை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என அதிபர் தேர்தல் பரப்புரையில் சிறிசேன வாக்குறுதி வழங்கியிருந்தார்.

இவ்வாறான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிறிசேன தவறியுள்ளார். இவர் அதிபராகப் பொறுப்பேற்று சில வாரங்களின் பின்னர், தனது சகோதரரான குமாரசிங்க சிறிசேனவை, தேசிய தொலைத்தொடர்பாடல்கள் சேவை வழங்குனரான சிறிலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் தலைவராக நியமித்தார். இந்த நியமனம் அதிபர் சிறிசேன தான் வழங்கிய வாக்குறுதிகளை மீறியுள்ளார் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாகும்.

இதேபோன்று சிறிசேன தனது குடும்ப உறுப்பினர்களான மகன், மகள் மற்றும் மருமகன் ஆகியோர் தனது நிர்வாகத்தில் செல்வாக்குச் செலுத்துவதற்கான அனுமதியை வழங்கியுள்ளார். 2015 தேர்தல் பரப்புரையின் போது சிறிசேன தான் வழங்கிய அடிப்படை வாக்குறுதிகளை மீறிச் செயற்பாடுகிறார் என்பதையே இவரது நடவடிக்கைகள் சுட்டிநிற்கின்றன.

குறிப்பாக, சிறிசேன தனது மகனான தகம் சிறிசேன, கடந்த ஆண்டு செப்ரெம்பரில்  நியுயோர்க்கில் இடம்பெற்ற ஐ.நா பொதுச் சபையில் சிறிலங்கா சார்பாகப் பங்கேற்பதற்கு அனுமதித்திருந்தார். அத்துடன் சிறிசேனவின் தேர்தல் மாவட்டமான பொலனறுவையில் பல்வேறு கூட்டங்கள் இவரது மகளின் தலைமையில் இடம்பெறுவதற்கான அனுமதியையும் சிறிலங்கா அதிபர் வழங்கியுள்ளார்.

சிறிசேனவின் மருமகனான திலினா சுறன்ஜித் பெப்ரவரி 2015ல் பாதுகாப்பு அமைச்சின் பொது உறவுகள் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.  இவ்வாறான சில சம்பவங்கள் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் வாழும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சிறிசேன தனது சகோதரரை நாட்டின் மிகப் பெரிய அரசாங்க நிறுவனம் ஒன்றின் தலைவராக நியமித்ததன் மூலமும், தனது மகளை அரசாங்கத்தின் பல்வேறு கூட்டங்களில் பங்கேற்பதற்கு அனுமதித்தன் மூலமும், மகனை சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரபூர்வ வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு தன்னுடன் இணைத்துக் கூட்டிச் சென்றமை மூலமும் இவர் தனது தேர்தல் வாக்குறுதிகளை மீறிவிட்டதாக ‘விளம்பர ஆலோசகரான’ தரங்கா சேனநாயக்க தெரிவித்தார்.

‘ஊழல் மோசடி அரசியல்வாதிகள், கொலைக் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சிறிலங்கா அதிபர் தவறியுள்ளார். கடந்த ஆட்சியில் இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் இந்த ஆட்சியிலும் எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாது வாழ்கின்றனர். ஆகவே மக்கள் சிறிசேன மீது கொண்டுள்ள நம்பிக்கை வீணாடிக்கப்படக் கூடாது’ என சேனநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நம்பி வாக்களித்தது போன்று தற்போதும் தான் மிகவும் எளிமையான ஒரு மனிதனாகவே வாழ்கிறேன் என்பதை சிறிசேன உறுதிப்படுத்த வேண்டிய தேவை  எழுந்துள்ளது எனவும் சேனநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

‘தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முறியடிப்பதற்காக தைரியம் தனக்கு உண்டு என்பதை சிறிசேன உறுதிப்படுத்த வேண்டும். இவர் ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டு நிறைவுற்றுள்ள போதிலும், இவர் தனது மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்வதற்கான காலம் இன்னமும் கடந்துவிடவில்லை. இதற்கான காலம் தற்போதும் காத்திருக்கிறது. ஆகவே சிறிலங்காவின் அதிபர் இத்தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்கிறார் சேனநாயக்க.

சிறிசேனவின் ஒரு ஆண்டு கால ஆட்சி தொடர்பில் திருப்தியடைகிறீர்களா என கொழும்பிலுள்ள பல்தேசிய நிறுவனம் ஒன்றின் நிறைவேற்றுப் பணிப்பாளரான ரெரான் கரீம் என்பவரிடம் வினவிய போது, ‘ஆம் மற்றும் இல்லை’ எனப் பதிலளித்தார். ‘ஊழல் குற்றங்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் சிறிசேனத் தவறியுள்ளார். ஊழல் குற்றங்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் பலர் இன்றும் சிறிலங்காவின் தற்போதைய அமைச்சரவையின் அமைச்சர்களாக சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஊழல் என்பது தற்போதும் சிறிலங்காவில் தலைவிரித்தாடுகிறது. ஆகவே ஊழல் மற்றும் ஊழல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா அதிபர் முன்னெடுக்க வேண்டும்’ என ரெரான் கரீம் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிசேனவின் ஆட்சியில் இடம்பெற்ற நல்ல விடயங்கள் தொடர்பில் கரீம் அதிபருக்கு நன்றி தெரிவிக்கிறார். குறிப்பாக வெள்ளை வான் கடத்தல்கள் சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் குறைவடைந்துள்ளதாகவும், அரச ஆதரவுடன் சிறுபான்மை தமிழ் சமூகத்திற்கு எதிராக இடம்பெறும் இனவாதத் தாக்குதல்கள் முடிவுக்கு வந்துள்ளதாகவும் இவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், உள்நாட்டு பொருளாதாரம் மற்றும் உட்கட்டுமான அபிவிருத்தி போன்றன ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அதிகளவில் காணப்பட்ட போதிலும் தற்போது இது தொடர்பில் தெளிவற்ற கோட்பாடுகள் நிலவுவதாகவும் கரீம் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சவின் ஆட்சியிலிருந்து விடுபட்டமை தொடர்பில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கில் வாழும் மக்கள் நிம்மதி அடைந்துள்ளதாக பருத்தித்துறை அபிவிருத்தி நிறுவகத்தின் நிறுவுனர் கலாநிதி முத்துக்கிருஸ்ணா சர்வானந்தன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் நிலவிய தீவிர இராணுவப் பிரசன்னம் குறைவடைந்தமையே இதற்கான பிரதான காரணமாகும்.

கடந்த ஆண்டு சிறிலங்கா இராணுவத்தின் பிரசன்னம் வடக்கில் குறைவடைந்துள்ளதால் மக்கள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுதல் குறிப்பாக, இராணுவப் புலனாய்வாளர்களால் தமிழ் சமூகத்தவர் கண்காணிக்கப்படுதல் தற்போது கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக கலாநிதி சர்வானந்தன் கூறுகிறார்.

‘மக்கள் தமது அரசியற் கருத்துக்கள், அரசியல் அவாக்கள் போன்றவற்றை வெளியிடுவதற்கான சுதந்திரத்தை ஜனவரி 08,2015 இன் பின்னர் தற்போது அதிகம் கொண்டுள்ளனர். இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டிருந்த தமிழ் மக்களின் நிலங்கள் விடுவிக்கப்படுதல், அரசியற் கைதிகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விடுவிக்கப்படல் மற்றும் 2006ல் தன்னைக் கொலை செய்ய வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரை சிறிலங்கா அதிபர் மன்னித்து விடுவித்தமை போன்றன தற்போதைய ஆட்சியின் நல்ல சமிக்கைகளாகக் காணப்படுகின்றன’ என கலாநிதி சர்வானந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளையில், கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் நிறுவனமான வெறைற் ஆய்வு நிறுவனத்தால் சிறிசேனவின் ஆட்சியின் முதல் ஆண்டு நிறைவு தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் ‘பெண்களுக்கான புதியதோர் சிறிலங்கா’ உருவாக்கப்படும் என சிறிசேனவால் வாக்களிக்கப்பட்ட போதும் தற்போது இது மறக்கப்பட்ட வாக்குறுதியாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறிசேன கடந்த ஓராண்டு ஆட்சியின் போது கவனிக்கத் தவறிய விடயங்கள் தொடர்பாக manthri.lk என்கின்ற உள்நாட்டு இணையத்தளம் ஒன்று சில முக்கிய குறிப்புக்களை வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கண்காணித்து வரும் இந்த இணையத்தளமானது நன்னடத்தைக் கோட்பாடுகளை உருவாக்குவதில் சிறிலங்கா அதிபர் தவறிழைத்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

நாடாளுமன்றின் நிலையான கட்டளைகளைத் திருத்தம் செய்தல், தேசிய கணக்காய்வுச் சட்டத்தை அறிமுகப்படுத்துதல் போன்றன தொடர்பான வாக்குறுதிகளையும் சிறிசேன நிறைவேற்றத் தவறியுள்ளதாக இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறிலங்காவின் அமைச்சரவை அமைச்சர்களை 25 ஆகக் கட்டுப்படுத்துதல், ஊழல் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கான சிறப்பு ஆணைக்குழுக்களை நியமித்தல், புதிய தேர்தல் முறைமையை உருவாக்குதல் மற்றும் தகவல் உரிமைச் சட்டத்தை அமுலாக்கல் போன்ற விடயங்களையும் சிறிசேன கவனிக்கத் தவறியுள்ளதாக உள்ளுர் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

நிறைவேற்று அதிபர் முறைமையை ஒழிப்பதை உறுதிப்படுத்தும் 19வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதில் சிறிசேன நகர்வுகளை முன்னெடுத்துள்ளமையானது இவரது ஆட்சிக்குப் பலம் சேர்க்கும் விடயமாகும்

அரசியல் சீர்திருத்த சபை, சுயாதீன ஆணைக்குழுக்கள் போன்றவற்றை சிறிசேன வெற்றிகரமாக அமைத்துள்ளார். அத்துடன் இவர் தேசிய போதைத் தடுப்பு கோட்பாடு மற்றும் அரசதுறை ஊழியர்களுக்கான கொடுப்பனவை அதிகரித்தல் போன்றவற்றிலும் சாதகமான மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *