மேலும்

ஒற்றையாட்சி அரசியலமைப்பே உருவாக்கப்படும் – என்கிறார் ரணில்

ranil-japanநாட்டைப் பிளவுபடுத்தவோ, ஒற்றையாட்சிக்கு முரணான அரசியலமைப்பை உருவாக்கவோ மாட்டோம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

அலரி மாளிகையில் இருந்து நேற்று வெளியிட்ட சிறப்பு அறிக்கை ஒன்றிலேயே சிறிலங்கா பிரதமர் இந்த உறுதிஅமொழியை வழங்கியுள்ளார்.

“நாட்டின் அதியுச்ச அதிகாரங்களின் பிரதான உரிமையாளர்கள் பொது மக்களாவர்.  மக்களின் உரிமைகளுக்காகவே அரசியலமைப்பு தயாரிக்கப்படுகிறது.

உலகில் எந்தவொரு நாட்டிலும் முன்னெடுக்கப்படாத வகையில், சமூக வலைத்தளகளின் ஊடாக மக்கள் தமது கருத்துக்களை முன்வைக்க முடியும்.

இதனூடாக அரசியலமைப்பின் தயாரிக்கும் போது இளைஞர்களின் பங்களிப்பினை பெற்றுக்கொள்ளவும் திட்டமிட்டுள்ளேன். இந்த நாட்டை பொறுப்பேற்க உள்ளவர்கள் தற்போதைய இளைஞர்களாகும். அவர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்.

புதிய அரசியலமைப்பினை தயாரிக்கும் போது நாட்டை பிளவுபடுத்த முனைய போவதில்லை. ஒற்றையாட்சிக்கு உட்பட்டே அரசியலமைப்பைத் தயாரிப்போம்.  நான் ஒரு இலங்கையராகும்.

இந்த நாட்டில் வாழும் அனைத்து இனத்தவர்களையும் ஒன்றிணைத்து தேசத்தை ஐக்கியப்படுத்துவற்கு எனக்கு அனைவரும் இடமளிக்க வேண்டும். நான் நாட்டை பிளவுப்படுத்துவற்கு ஒருபோதும் விடமாட்டேன்.

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக சர்வாதிகாரம் மேலோங்க செய்யப்பட்டது. ஆனால் நாம் அடுத்த முப்பது வருடங்களுக்கு நாட்டை நல்லதொரு நிலைமைக்கு கொண்டு வரவே முனைகின்றோம்.

இந்த சந்தர்ப்பத்தில் வீணான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம்.  எமது வேலைத்திட்டத்திற்கு அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வெறுமனே குறுகிய சிந்தனைகளுக்கு வீதியிலிறங்கி போராடுபவர்களை அரசாங்கம் கண்டுக் கொள்ளாது.

21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றால் போல் அரசியலமைப்பு உருவாக்க திட்டமிட்டுள்ளோம். ஆகவே புதிய அரசியலமைப்பிற்கு ஆதரவாக மக்கள் தங்களுடைய கருத்துக்களை மின்னஞ்சல் , தொலைநகல், முகநூல்களினூடாக முன்வைக்க முடியும்.

தற்போதைக்கு வயோதிப நிலையிலுள்ளவர்களின் கருத்துக்களை வினவுவதற்காகவே வீடு வீடாக சென்று கருத்துக்களை கோருவதற்கு விசேட குழு  நிறுவப்பட்டுள்ளது. எனவே புதிய அரசியலமைப்பிற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *