மேலும்

கிரித்தல இராணுவ முகாமில் இருந்த முக்கிய புலனாய்வு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன

sri-lanka-armyகிரித்தல இராணுவ முகாமில் உள்ள முக்கியமான இராணுவப் புலனாய்வு ஆவணங்கள் இராணுவக் காவல்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த கிரித்தல இராணுவ புலனாய்வு முகாம், சிறிலங்கா இராணுவத் தளபதியின் உத்தரவின் பேரில் நேற்றுமுன்தினம் காலையில் சீல் வைத்து மூடப்பட்டது.

அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் அகற்றப்பட்டு, மீன்னேரியாவில் இருந்து சென்ற சிறிலங்கா இராணுவ காவல்துறையினர் முகாமின் பாதுகாப்பை பொறுப்பேற்றுள்ளனர்.

அத்துடன், 2009ஆம் ஆண்டு தொடக்கம், 2012ஆம் ஆண்டு வரை கிரித்தல இராணுவ முகாமில் பணியாற்றிய அனைத்து இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினரிடமும், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளன.

அதேவேளை, கிரித்தல இராணுவ முகாமில் இருந்த முக்கியமான புலனாய்வு ஆவணங்களையும் சிறிலங்கா இராணுவ காவல்துறை கைப்பற்றியுள்ளது.

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் மூன்றாவது பற்றாலியன் தங்கியிருந்த இந்த இராணுவ முகாம், கருணா குழுவைச் சேர்ந்தவர்களை வைத்து பல்வேறு குற்றச்செயல்களை மேற்கொள்வதற்கான தளமாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *