மேலும்

புதிய அரசியலமைப்பில் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும்- சம்பந்தன் நம்பிக்கை

R.sampanthanபிரிக்கப்படாத – ஒன்றுபட்ட இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பின் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு உறுதியான தீர்வை காண முடியும் என்ற நம்பிக்கை  உள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில், நேற்று அரசியலமைப்பு சபையாக நாடாளுமன்றத்தை மாற்றுவது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

“நாடு இன்று பாரிய நெருக்கடிகளையும் பின்னடைவுகளையும் சந்தித்துள்ளதற்கு மூல காரணம், நாட்டு மக்களின் கருத்துக்களையும் இணக்கப்பாடுகளையும் பெற்றுக் கொள்ளாது, தமக்கு தேவையான விதத்தில் தன்னிச்சையாக ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்புக்களே ஆகும்.

இதனை மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பும் கட்டாயமும் இன்று ஏற்பட்டுள்ளது.  தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை, அனைத்துத் தரப்பினரதும் இணக்கப்பாட்டுடனும், கருத்துக்களைப் பெற்றுக் கொண்டும் பயன்படுத்த வேண்டும்.

நாட்டு மக்களின் விருப்புடனும், புதிய அரசியல் கலாசாரத்தையும் தேசிய பிரச்சினைக்கு உறுதியான தீர்வையும் தரும் வகையில் அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்.

எந்தவொரு விடயத்தையும் சரியான நேரத்தில் முறையாக மேற்கொள்ள வேண்டும். அதுவே வெற்றிகரமானதாக அமையும்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்காக எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையில் இதுவரையில் மூன்று அரசியலமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

முதலாவதாக உருவாக்கப்பட்ட சோல்பரி பிரபுவின் அரசியலமைப்பில் சிறுபான்மை இன மக்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

அதன் பின்னர் 1972 இல் ஏற்படுத்தப்பட்ட குடியரசு அரசியலமைப்பில் சிறுபான்மை இனத்தவரின் பாதுகாப்பு முழுமையாக நீக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சியில் 1978 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு பேரினவாதத்தை உள்ளீர்த்ததாக ஏற்படுத்தப்பட்டிருந்தது.

நாடாளுமன்றத்தில் அன்றிருந்த பெரும்பான்மை அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் கருத்துக்களைக் கேட்டறியாமல் மக்களின் இணக்கப்பாடின்றி சர்வாதிகாரத்துடன் தமக்குத் தேவையான விதத்தில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டது.

இவ்வாறு அரசியலமைப்புக்களை ஏற்படுத்தியவர்கள் நாட்டு மக்களினதும் தேசிய நலன்களிலும் அக்கறை கொள்ளவில்லை.  இதன் காரணமாகவே நாடு சுதந்திரம் அடைந்தும் கடந்த பல பத்தாண்டுகளாக பாரதூரமான நெருக்கடிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

போர் நாட்டை பல ஆண்டுகளுக்குப் பின் தள்ளிவிட்டது. தமிழ் மக்கள் பாரிய நெருக்கடிகளையும் துன்பங்களையும் சந்தித்தார்கள்.

இன்று எவரும் தனி நாடு கேட்கவில்லை. தனித் தமிழீழ கோரிக்கையும் இன்று இல்லை. போர் முடிவடைந்ததோடு தனி நாட்டுக் கோரிக்கை கைவிடப்பட்டுள்ளது.

கடந்த உள்ளூராட்சி சபை தேர்தல்கள், மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற, தேர்தல்களின் போது எமக்கு வாக்களித்து ஜனநாயக அரசியலமைப்பை தமிழ்மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

பிரிக்கப்படாத – ஒன்றுபட்ட – இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பின் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு உறுதியான தீர்வை காண முடியும் என்ற நம்பிக்கை எமக்கு  உள்ளது.

புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். பொறுப்புக் கூறும் அரசு அமைய வேண்டும்.

இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. நாட்டு மக்களின் நலன் கருதியும் அதன் அடிப்படையில் நமது பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

அழிவுகளிலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்க வேண்டும். பண்டா- செல்வா, டட்லி -செல்வா, இலங்கை- இந்தியா என பல உடன்பபாடுகள் பேரினவாதிகளால் நிராகரிக்கப்பட்டன.

இதன் காரணமாகவே நாடு பாரிய நெருக்கடிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் ஒரு தேசியத் தலைவர் தான். அவரும் புதிய அரசியலமைப்புக்காக தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் அனைத்து மக்களின்  அங்கீகாரத்துடன் இந்தப் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

நாட்டு மக்களின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும். அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து ஒரே இலங்கை உருவாக்கப்பட வேண்டும்.

நான் ஒரு இலங்கையன் என்றும் இது எனது நாடு என்றும் பெருமையாக கூறும் நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும்.

தனிப்பட்ட ரீதியிலான கருத்து முரண்பாடுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு நாட்டில் தேசிய நல்லிணக்கமும் அமைதியும் சமாதானமும் ஏற்படுத்தப்பட வேண்டும்” என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *