மேலும்

வரலாற்றில் இன்று: தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள்

Tamil_conference_memorialயாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளான, 1974 ஜனவரி 10 அன்று, மாநாட்டில் கலந்து கொண்ட 11 தமிழர்கள் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு மற்றும் நடவடிக்கைகளால் கொல்லப்பட்ட நாள் இன்று.

சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டினால் மின்கம்பிகள் அறுந்து மக்கள் மத்தியில் விழுந்ததாலும், ஆயிரக்கணக்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனத் திரண்டிருந்த மக்கள் மத்தியில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியதாலும், அல்லோலகல்லோலப்பட்டு ஓடிய மக்கள் பல்வேறு விபத்துகளில் சிக்கியதாலும், 11 உயிர்கள் பலியெடுக்கப்பட்டன.

ஈழத்தமிழரின் வரலாற்றில் ஆயுதப்போராட்டத்துக்கான உந்துதலைத் தீவிரப்படுத்திய இந்தப் படுகொலைகள் நடந்து இன்றுடன் 42 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்டவரும், அதில் இடம்பெற்ற படுகொலைகளையடுத்து, ஆயுதப் போராட்டத்தின் மீது திரும்பியவருமான, ‘புதினப்பலகை’ நிறுவக ஆசிரியர் கவிஞர் கி.பி.அரவிந்தன், அவர்கள் பொன்.சிவகுமாரன் தொடர்பாக எழுதிய “அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்“ பதிவில் இந்தச் சம்பவம் குறித்து விபரித்துள்ளார். அந்தப் பதிவின் சில பகுதிகளை காலத்தின் தேவை கருதி மீள் பிரசுரம் செய்கிறோம்.

“நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டிற்கான தயாரிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.(மாநாட்டை கொழும்பில்தான் நடத்த வேண்டும் என்ற அரசாங்கத்தின் நெருக்குதல்களை மீறி அமைப்பாளர்கள் யாழ்பாணத்தில் நடத்த முடிவெடுத்திருந்தனர்) ஆனால் எங்களைப் போன்ற இளம் சமூக ஆர்வலர்கள் ஒதுக்கப்பட்டவர்களாகவே கணிக்கப்பட்டிருந்தோம். இது எங்களுக்குச் சினத்தை மூட்டியது.

சிவகுமாரன் தலைமையில் யாழ்ப்பாண பிரதான வீதியில் அமைந்திருந்த நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டின் செயலகத்திற்குச் சென்றோம். மாநாட்டுப் பொறுப்பாளர்களைச் சந்தித்து நாங்களும் பங்களிக்கும் வகையில் செயல் திட்டத்தை வகுக்கும்படி கோரினோம். முதலில் அவர்கள் மறுத்தார்கள். அப்படியானால் எங்கள் பங்களிப்பு இல்லாமல் மாநாடு நடைபெற முடியாது என சிவகுமாரன் எச்சரித்தான்.

அதன் பின் தொண்டர் அமைப்பில் எங்களையும் இணைப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. சிவகுமாரன் பொறுப்பாளர்களில் ஒருவனாக அறிவிக்கப்பட்டான். நானும் வேறு பல நண்பர்களும் தொண்டாராகப் பணியேற்றோம். எங்கள் பணிகள் சுமுகமாகவே நடைபெற்றன. ஆனால் இருபாலைச் சந்தியில் இருந்து புறப்பட்ட இறுதிநாள் காண்பிய ஊர்திகள் பங்கேற்ற ஊர்வலத்தில் பண்டாரவன்னியன் பற்றிய காண்பிய ஊர்தி கலந்து கொள்வதற்கு மாநாட்டு அமைப்பாளர் அனுமதி மறுத்திருந்தனர். அரச நெருக்கடியை சமாளிக்க அமைப்பாளர்கள் எண்ணியிருக்க கூடும்.

சிவகுமாரன் தலைமையிலான தொண்டர்களாகிய நாங்கள் ஊர்வலத்தை ஒழுங்குபடுத்துபவர்களாகப் பணியாற்றிக் கொண்டிருந்தோம். இந்தத் தகவல் எங்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதும் ஊர்வலம் நகராதபடி தெருவை மறித்தபடி நாங்கள் மறியல் செய்தோம். மாநாட்டு அமைப்பாளர்கள் எத்தனையோ விளக்கங்கள் அளித்து கெஞ்சினர். ஆனால் சிவகுமாரன் எதற்கும் மசியவுமில்லை விட்டுக்கொடுக்கவும் இல்லை. கடைசியாக பண்டாரவன்னியன் காண்பிய ஊர்தியுடன் ஊர்வலம் நடைபெற்றது.

1974 ஐனtவரி 10 இறுதிநாள் நிகழ்வாக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மாநாட்டுப் பேராளர்கள் உரையாற்றும் பொதுக்கூட்டம் ஒழுங்கு படுத்தப்பட்டிருநது. இந்த மாநாடு திட்டமிடப்பட்டபோது இத்தனை எழுச்சியாக மக்கள் ஆதரவு இதற்குக் கிடைக்கும் என்று அமைப்பாளர்கள் எதிர்பாத்திருக்கவில்லை. ஆதலால் சில நூற்றுக்கணக்கானவர் கலந்து கொள்ளக் கூடிய வீரசிங்கம் மண்டபத்தைப் பொதுக் கூட்டத்திற்கு ஒழுங்கு படுத்தியிருந்தனர்.

ஆனால் மாநாடு நடைபெறுவது தொடர்பாக இலங்கை அரசு மேற்கொண்ட எதிர் நடவடிக்கைகள் தமிழ் பேசும் மக்களிடையே எழுச்சியைத் தோற்றுவித்துவிட்டது. ஆதலால் யாரும் எதிர்பாராத வகையில் இறுதிநாள் நிகழ்ச்சிக்கு பல்லாயிரக்கணக்கணக்கில் மக்கள் வீரசிங்கம் மண்டபத்தை முற்றுகையிடத் தொடங்கி விட்டனர். மண்டப ஒழுங்கைக் கவனித்துக் கொண்டிருந்த தொணடர்களாகிய எங்களுக்கு நிலமையின் தீவிரம் தெரியத் தொடங்கி விட்டது. உடனடியாக சிவகுமாரன் எங்களை அழைத்து மாற்று வழிகளை யோசிக்கும்படி கோரினான்.

அப்போதுதான் நாங்கள் கூட்டத்தை எல்லாப் பொதுமக்களும் பார்க்கவும் கேட்கவும் வசதியாக மண்டபத்திற்கு வெளியே நடத்தக் கோருவதென்று தீர்மானித்தோம். எங்கள் அழுத்தம் காரணமாக அமைப்பாளர்கள் வெளியே கூட்டம் நடாத்தச் சம்மதித்தனர். நாங்கள் வெளியே கட்டப்பட்டிருந்த சிகரத்தற்குக் கீழே வாங்குகளை அடுக்கி தற்காலிக மேடை அமைத்தோம்.வீரசிங்க மண்டபக் கட்டடிடத்தின் சிறு முற்றம் அதற்கும் எதிரே கோட்டைச் சுவரில் இருந்து சரிவாக அமைந்த புல்வெளி. இதனைப் பிரித்தபடி தார்ச்சாலை. நாங்கள் மேடைக்கு அருகே இருந்தோம். தார்ச்சாலை புல்வெளி எங்கும் மக்கள் தலைகளே தெரிந்தன.

திருச்சி போராசிரியர் நயினார் முகமது பேசத் தொடங்கினார். நாங்கள் பேச்சை இரசிக்க தொடங்கியிருந்தோம். அப்போதுதான் அந்த நாமெல்லாரும் அறிந்த துயரம் நிகழ்ந்தது.

மேடையின் இடது பக்கத்தே அதாவது புல்லுக்குளம் பக்கத்தே சலசலப்பு ஏற்பட்டது. பொலிசார் அமர்ந்திருந்த மக்களை கலைக்க முயற்சித்தித்து் கொண்டிருந்தனர். சலசலப்பு உடனேயே அல்லோல கல்லோலமாக மாறத்தொடங்கியது. மக்கள் நெருக்கியடித்தபடி நகரத் தொடங்கினர். மேடையில் இருந்தவர்கள் மக்களை அமைதியாக இருக்கும்படியும் பொலிசாரை விலகிச் செல்லும்படியும் வேண்டுகோள் விடுத்தனர். அப்போது துப்பாக்கி வேட்டுச்சத்தம் கேட்டது. மக்கள் மிரண்டு ஓடத்தொடங்கினர். அவ்வேளையில்தான் அது நடந்தது.

தொண்டர்கள் என்ற நிலையில் மேடையின் அருகே இருந்தோம் என்பதால் எல்லாவற்றையும் எங்களால் தெளிவாகவே பார்க்க முடிந்தது. அந்த மேடை அமைக்கப்பட்டிருந்த சிறு முற்றத்தையும் தார்த்தெருவையும் பிரித்த மறிப்புக் கம்பியை தாண்டுவதற்காக ஒருவர் தொட்டபோதே எங்களைப் பார்த்து அலறியபடி வீழந்தார்.

பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டினால் அறுந்து விழுந்த மின்சார கம்பியில் இருந்து மின் ஒழுக்கு அந்த மறிப்பு கம்பியிலும் பரவியிருப்பதை அப்போதுதான் நாங்கள் உணர்ந்தோம். ஆதலால் அதனைத் தொடவேண்டாம் என்று நாங்கள் கத்தித் தடுத்துக் கொண்டிருந்த போதும் அதைத் தொட்டவர்கள் அலறியபடி செத்து வீழ்ந்தார்கள்.

எல்லாம் அடங்கிய இறுதி நேரம் வரையில் நானும் சிவகுமாரனும் அங்கிருந்தோம். இதற்குப் பழிக்குப் பழி வாங்குவதென்று நாங்கள் இருவரும் சபதம் செய்து கொண்டோம்.

காலையில் சந்திப்பதற்கான இடத்தையும் தீர்மானித்துக் கொண்டோம். ஆனால் விடிவதற்கு முன்பாகவே நல்லூர் பாராளுமன்ற உறுப்பினர் வீட்டிற்குக் காவலாக நின்ற பொலிசார் மீது சிவகுமாரன் வெடிகுண்டை வீசி விட்டான். பொலிசார் காயமடைந்தார்கள்.

சிவகுமாரன் தேடப்படுபனாக மாறிவிட்டான். இது அவனது குண இயல்பை விளக்க போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.” – கி.பி.அரவிந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *