மேலும்

இரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம் : 02

‘ஒரு விடுதலை இயக்கம் சுலோக அரசியல் நடத்தும் வாக்குச் சீட்டு அரசியல் கட்சியை போன்றதல்ல. அதன் உறுப்பினர்களான போராளிகள் தேர்தல் காலங்களில் கிளர்ந்தெழுந்து ‘வாழ்க’ ‘வீழ்க’ கோசம் போட்டு வாக்குச் சேகரிக்கும் தொண்டர்களல்ல.

அவர்கள் தாங்கள் கொண்ட இலட்சியத்துக்காக தொடர்ச்சியாக தங்களை ஒறுத்து தங்களை வருத்தி உயிரைக்கொடுத்து உதிரத்தை கொடுத்து உடல் அவயங்களை கொடுத்து வரலாற்றை படைத்தவர்கள். நாங்கள் பணம் திரட்டித் தருகிறோம் நீங்கள் போராடுங்கள் என்று சொல்வதற்கு அவர்கள் ஒன்றும் கூலிப்படைகள் அல்ல.”

00000

போராளிகளின் துயரங்களை புரிந்துகொள்வது பற்றி…..

ஒரு விடுதலைப் போராட்டம் ஒரு மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் போது விடுதலைக்கு போராடிய இனம் அல்லது சமூகம் சந்திக்கின்ற மிகப் பெரிய ஆபத்து, மக்களையும் போராளிகளையும் பிரிப்பதற்கு அனைத்து தளங்களிலும் எதிரி மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களாகும்.

இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது எந்த மக்களுக்காக அந்தப் போராளிகள் போராடினார்களோ அந்த மக்களைக் கொண்டே அவர்களை வெறுக்கவைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளைப் பற்றியதாகும்.

எந்த மக்கள் அவர்களை வீரர்கள் இனத்தின் -சமூகத்தின் விடிவெள்ளிகள் என்று போற்றிக் கொண்டாடினார்களோ, அதே மக்களைக் கொண்டே அவர்களை துரோகிகள், கொலைகாரர்கள், பயங்கரவாதிகள் என்று வசைபாடி வெறுக்கச் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் சூழ்ச்சித் திட்டங்களை பற்றியதாகும்.;

ஓரு போராட்டத்தில் போராளிகளுக்கும் மக்களுக்குமான உறவென்பது ஒரு பெரிய குளத்தில் இருக்கும் தண்ணீருக்கும் அதில் வாழும் மீன்களுக்குமான உறவைப் போன்றது.

மீனை ஒழிப்பதற்கு தண்ணீரை விட்டு அதை பிரிக்க வேண்டும். தூண்டில் போட்டும் வலை வீசியும் மீன்களை பிடித்து தரையில் போடுவதன் மூலம் தன்ணீரை விட்டு அவற்றை பிரித்துக் கொல்லலாம். ஆனால் ஒரு மாபெரும் குளத்தில் உள்ள அனைத்து மீன்களையும் இந்த முறையில் பிடிக்க முடியாது.

பெரிய மீன்களை பிடித்தாலும் அந்த குளத்தில் இருக்கும் சிறிய மீன்களும் மீன் குஞ்சுகளும் வலையிலும் தூண்டிலும் அகப்படாமல் தப்பித்துக் கொள்ளும்; பின்னர் அவை வளர்ந்து பெரிய மீன்களாகிவிடும். இது ஒரு தொடர்கதையாக  நடந்து கொண்டே இருக்கும்.

அதேபோல மீன்களை ஒழிப்பதற்கு ஒரு மாபெரும் குளத்தை ஒரேயடியாக வற்ற வைக்க முடியாது. ஓரு குறிப்பிட்ட மட்டத்துக்கு இறைக்க இறைக்க தண்ணீர் ஊறிக்கெண்டே இருக்கும். தண்ணீர் ஊற ஊற மீன்களும் மீன் குஞ்சுகளும் அதில் வாழ்ந்து கொண்டே இருக்கும். ஆனால் அந்த குளத்து நீரில் தேவையான அளவு நஞ்சை கலந்து விட்டால் பெரிய மீன், சின்ன மீன், குஞ்சு குருமன் என்று அனைத்தும் அழிந்துவிடும்.

அதே போலத்தான் ஓரு விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்படுகின்ற போது மக்களையும் போராளிகளையும் பிரிப்பதற்கும், உயிர்தப்பிய போராளிகள் மக்கள் மத்தியில் இருந்து புதிய போராளிகளை உருவாக்காமல் இருப்பதற்கும், எதிரி தன்னால் ஆக்கிரமிக்கப்பட்ட போராடிய தரப்பின் தாயகத்தில் நேரடியாக தனது படையினர் மூலமாக, மக்களை அச்சுறுத்தியும் அதற்கு வெளியே உள்ள பின்தளம் மற்றும் செல்வாக்கு பிரதேசங்களில் வாழும் மக்களுடைய கருத்தியல் தளத்திலே கனகச்சிதாமாக நச்சுக்கருத்துக்களை விதைப்பான்.

இந்தக் கருத்துக்கள் போராளிகளை கொச்சைப்படுத்தி சிறுமைப்படுத்தி மக்களுக்கும் அவர்களுக்கும் இடையிலான பிணைப்பை உடைக்கும் வேலைத் திட்டத்தை கொண்டதாக இருக்கும். இந்தத் திட்டம் இரண்டு தளங்களில் நடைபெறும்.

முதலாவது- ஏற்கனவே போராட்டத்தின்  எதிர்தரப்பு என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட ‘அரச ஒத்தோடிகள்” மூலமாக ‘போராட்ட வழிமுறை தவறானது, போராட்டத்தை வழிநடத்திய தலைமை தவறானது, போராளிகள் தவறானவர்கள்- அவரை கொன்றார்கள், இவரை கொன்றார்கள், அவர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்கும், இவர் இருந்திருந்தால் அப்படி நடந்திருக்கும், சிறுவர்களை படையில் இணைந்து பலி கொடுத்து விட்டார்கள், மக்களுடைய பேரவலத்தும் இழப்புகளுக்கும் எல்லாம் இவர்கள் தான் காரணம், இவர்கள் பாசிஸ்டுகள்- மக்கள் விரோதிகள், அரசாங்கமும் அரசபடைகளும் நல்லவர்கள்- வல்லவர்கள்,  மக்களுக்கு தீங்கே இழைக்காதவர்கள்;” என்ற மாதிரி இவர்களது பிரச்சாரம் நடத்தப்படும்.

இது விடுதலைப் போராட்டம் நடந்த காலத்தில் நடந்த ஒன்று தான், என்றாலும் பின் போர் சூழலில் இது தீவிரப்படுத்தப்படும்

இரண்டாவது- முகமூடி அணிந்த புதிய ஒத்தோடிகள் மூலமாக இந்த கருத்தியல் நச்சுக்கலப்பு நடக்கும்.

இந்த புதிய ஒத்தோடிகள் போராட்டத்தை குறை சொல்லமாட்டார்கள். போராட்ட அமைப்பை குறை சொல்லமாட்டார்கள். போராட்டத்துக்கு தலைமை தாங்கிய தலைமையை குறை சொல்லமாட்டார்கள். ஆனால் அரச கட்டுப்பாட்டுக்குள் இருந்து தப்பிவந்த, இறுதிப் போரில் உயிர்தப்பிய போராளிகள் எல்லோரும் துரோகிகள், தவறானவர்கள், இவர்கள் போர் களத்திலேயே மடிந்திருக்க வேண்டும் என்று போராளிகளை இலக்கு வைத்து சேறடிப்பு பரப்புரை நடத்துவர்கள்.

இவர்களது இந்தப் பரப்புரையை அறிவுபூர்வமாக அணுகி கட்டுடைத்தால், அது போராட்டத்தையும் போராடிய அமைப்பையும்; அதன் தலைமையை கொச்சைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் பரப்புரை என்பதையும், மக்களுக்கு போராளிகள் என்றால் நேர்மையற்றவர்கள் தாங்கள் நினைத்ததை போல இவர்கள் விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள் அல்ல, இவர்கள் எல்லாம் சுயநலவாதிகள் திருடர்கள் என்ற எண்ணத்தை உருவாக்கி, அவர்களை சலிப்படைய வைத்து போராளிகள் என்ற சொல்லே வெறுப்புக்குரிய அவமானத்துக்குரிய சொல் என்று அவர்கள் நினைக்கும் படி செய்ய வேண்டும் என்பதையும் நோக்கமாகக் கொண்டது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

போராளிகள் அவதார புருசர்களாக வானத்தில் இருந்து குதித்து வருவதில்லை. அவர்கள் மக்களில் இருந்துதான் உருவாகிறார்கள். மக்களுக்கு எதிரியால் இழைக்கப்படும் அநீதிகள் அல்லது ஒடுக்குமுறைகள் தான் சமானிய மனிதர்களை போராடத் தூண்டுகிறது. ஒரு விடுதலை அமைப்பும் அதன் தலைமையும் தான் அவர்களை போராளிகளாக ஒருங்கிணைத்து உருவாக்குகிறது.

பிள்ளைகளுடைய உருவாக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் பெற்றோர் எப்படிப் பொறுப்பானவர்களோ அப்படியே போராளிகளது உருவாக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் ஆளுமைக்கும் அவர்களை உருவாக்கிய அமைப்பும் அதன் தலைமையும் தான் பொறுப்பாகும்;.

இந்த இடத்திலே ‘போர்க்களத்தில் உயிர்தப்பிய  போராளிகள் எல்லாம் தவறானவர்கள் என்றால், அரச கட்டுப்பாட்டு பகுதிக்கூடாக புலம்பெயர்ந்த போராளிகள் எல்லாம் துரோகிகள் என்றால், அதாவது போராளிகளில் பெரும்பாலானவர்கள் துரோகிகள் என்றால், அவர்கள் போர்க்களத்தில் மடிந்திருக்க வேண்டுமல்லவா? ஏன் உயிர்தப்பி வந்தார்கள்” என்றால், அவர்களை உருவாக்கிய விடுதலை அமைப்பும் அதன் தலைமையும் அல்லவா தவறென்றாகி விடும். இந்தக் கருத்தை  மறைமுகமாக மக்களின் மனங்களிலே விதைப்பது தான் இந்த புதிய ஒத்தோடிகளின் நோக்கமாகும்;

இதைத்தான் பழைய ஒத்தோடிகள் ‘போராளிகளின் தலைவர் ஒரு பாசிஸ்ட். அவரால் உருவாக்கப்பட்ட அமைப்பு ஒரு பாசிச அமைப்பு, அதன் உறுப்பினர்கள் எல்லோரும் பாசிஸ்ட்டுகள், அவர்கள் விடுதலைப் போராளிகள் அல்ல, அவர்கள் மக்கள் விரோதிகள்” என்று திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார்கள்.

இந்த விடயத்தை உணர்வுபூர்வமாக அல்லாமல் அறிவுபூர்வமாக சிந்தித்து  ஒப்பிட்டு பார்த்தால் இந்த இரண்டு தரப்பினருக்கும் இடையில் உள்ள ஒற்றுமை புரியும்.

பழைய ஒத்தோடிகள் புலம்பெயர்ந்த நாடுகளின் காவல்துறைக்கு கடந்த காலங்களில் செய்த முறைப்பாடுகளையும், இப்போது இந்த புதிய ஒத்தோடிகள் செய்த- செய்து வரும் முறைபாடுகளையும்  ஒப்பிட்டுப் பார்த்தால் இதற்கு பின்னால் இருக்கும் நோக்கத்தில் ஆழ அகலம் நன்கு புரியும்.

இதேநிலை அதாவது மக்களை விட்டு போராளிகளைப் பிரிக்கும் தந்திரோபாயம் எமது விடுதலைப் போராட்டத்தில் மட்டும் தான் நடந்தது, நடந்து வருகிறது என்று நினைத்துவிடக் கூடாது. இந்தியாவின் நக்சல் பாரி போராட்டம், பிலிப்பைன்ஸ் செம்படைகளின் போராட்டம், பெருவில் நடந்த இடதுசாரி புரட்சிகர அமைப்பின் ஒளிரும் பாதை போராட்டம், கிழக்கு தீமோர் விடுதலைப் போராட்டம், தென்சூடான் விடுதலைப் போராட்டம், பலஸ்தீன விடுதலைப் போராட்டம் என்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் இது காலங்காலமாக நடந்திருக்கிறது. இன்றும் நடந்து வருகிறது.

உதாரணமாக 1967இல் பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் காசா மற்றும் மேற்கு கரையில் இருந்த பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தளப்பிரதேசங்களை இஸ்ரேலும், லெபனானில் இருந்த பின்தளப் பிரதேசங்களை லெபனானும் கைப்பற்றி விட, பலஸ்தீன விடுதலை இயக்கம் மிகப்பெரிய தோல்வியையும் பின்னடைவையும் சந்தித்தது. அதன் முக்கிய தளபதிகள் மற்றும் ஏராளமான போராளிகள் எல்லாம் கொல்லப்பட எஞ்சியிருந்தோர் சிரியா, ஈராக் மற்றும் மேற்குலகிற்கு புலம்பெயர்ந்தார்கள்.

அந்தக் காலகட்டத்தில் பலஸ்தீன விடுதலைப் போராட்டம் பலஸ்தீன தேசியம், பலஸ்தீன மக்களின் விடுதலை என்ற இலக்கில் தான்  பயணித்துக் கொண்டிருந்தது. மதம் அந்த விடுதலைப் போராட்டத்தில் குறுக்கிடவில்லை. பிறப்பால் கிறிஸ்தவரும் இடதுசாரி தலைவருமான ஜோர்ஜ் ஹபாஷ் (பலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்) பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்தார். பலஸ்தீன விடுதலை இயக்கம், அரபாத்தின் அல்பத்தா, பலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணி மற்றும் பலஸ்தீன ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் என்று பல்வேறு அமைப்புகளின் கூட்டமைப்பாக இருந்தது.

இந்தத் தோல்விக்கு பின்னர் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் புதிய ஒத்தோடிகளை களம் இறக்கி போராளிகள் மீதும் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய தளபதிகள் மீதும், தலைவர்கள் மீதும் மார்க்க (இஸ்லாம்) விரோதிகள், இஸ்லாமிய ஒழுக்க விதிகளை போராளிகள் கடைப்பிடிக்கவில்லை என்றெல்லாம் வகைதொகையின்றி அவதூறு மற்றும் சேறடிப்பு பிரச்சாரங்களை மேற்கொண்ணடது. அதுவும் ‘உண்மையான பலஸ்தீன விடுதலைக்காக” என்று கூறிக்கொண்டு தான் இந்தப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

விளைவு- பல உண்மையான போராளிகள், இஸ்லாமிய விரோதிகள் -துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்டார்கள். பலர் கொலை செய்யப்பட்டார்கள். பலஸ்தீன விடுதலைக்காக ஒன்றுதிரண்டு நின்ற மக்கள் சலிப்படைந்து சிதைந்து போனார்கள். அல்லது ஒதுங்கிப் போனார்கள்.

இஸ்ரேல் தனது திட்டப்படி பலஸ்தீனியர்களுடைய தாயக நிலங்களை ஆக்கிரமித்து யூதக் குடியேற்றங்களை உருவாக்கியது. பலஸ்தீன விடுதலைப் போராட்டம் இஸ்லாமிய மத குடுவைக்குள் அடைக்கப்பட்டு அந்த மதத்தின் சன்னி, சியா பிரிவு  முரண்பாடுகளுக்குள் சிக்கி இன்று வரை மக்களின் உண்மையான விடுதலை என்ற இலக்கை அடையாமல் திக்கித் திணறிக் கொண்டிருக்கிறது.

இது நாங்கள் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு பாடமாகும்.

இந்த ஆபத்தான மிகமிக நெருக்கடியான சூழ் நிலையை போராளிகள் எப்படி எதிர்கொள்வது மற்றும் அதை எப்படி கையாள்வது என்பது மிகவும் சிக்கலான ஒரு விடயமாகும்.

ஏனென்றால் பழைய ஒத்தோடிகள் வெளிப்படையானவர்கள். போராட்ட அமைப்பு, அதன் தலைமை மற்றும் போராளிகள், அவர்களின் போராட்ட வடிவங்கள், தங்களது அரச சார்பு நிலைப்பாடு இவற்றை சொல்வதற்கு அவர்கள் முகமூடி அணிந்து வருவதில்லை. தங்களது பேச்சு, எழுத்து, சந்திப்பு என்று எல்லா தளங்களிலும் தாங்கள் யார் என்பதை அவர்கள் நேர்மையாக வெளிக்காட்டியே வந்திருக்கிறார்கள். அவர்களை ஆதரிப்பவர்களின் தொகை என்பது சிறியது, மட்டுப்படுத்தப்பட்டது.

ஆனால் இந்தப் புதிய ஒத்தோடிகள் மறைமுகமானவர்கள். மக்கள் முன்னால் வந்து திட்டமிட்டு நடிப்பவர்கள். போராட்டம் சரியானது, தலைமை சரியானது, போராளிகள் தான் சரியில்லை என்று இவர்கள் மக்கள் மத்தியில் செல்லும் போது மக்கள் குழம்பிப் போவார்கள்.

ஏற்கனவே போராட்டத்தை வைத்து தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட போர் பிரபுக்களான இவர்கள் மக்களுக்கு அறிமுகமானவர்கள். இவர்கள் சொல்வதை உணர்வு நிலையில் இருந்து சிந்திக்கும் மக்கள் உடனே நம்பிவிடுவார்கள். ஆனால் மக்களின் இந்த உணர்வு நிலை அறிவு பூர்வமாக சிந்திக்கும் நிலையாக மாறும் போது இவர்களின் முகமூடிகள் கழன்று இவர்கள் அம்பலப்பட்டு போவார்கள்.

அதனால் உண்மையான விடுதலையை நேசிக்கும் சக்திகள் குறிப்பாக போராளிகள் இவர்களை கணக்கிலேயே எடுக்காமல் கடந்து செல்லவேண்டும். இவர்கள் என்னதான் அவதூறாக பேசிலும் எழுதினாலும் பொய்யும் புரட்டையும் சொல்லியும் எழுதியும் போராளிகளை  களங்கப்படுத்தினாலும் அவர்கள் மௌனமாக அவற்றை கணக்கில் எடுக்காமல் கடந்து செல்ல வேண்டும்.

போராளிகளுடைய மௌனமும் அவர்கள் இவர்களை  ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்ற செய்தியும் தான் இவர்களுடைய தோல்வியாகும். மாறாக இவர்களுடைய பரப்புரைக்கு உடனே போராளிகள் எதிர்பரப்புரை செய்ய முற்பாட்டால் அல்லது அவர்களை எச்சரிக்க அல்லது அவர்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டால் அதுவே அவர்களுக்கு கிடைத்த வெற்றியாகவும் போராளிகளுக்கு கிடைத்த தோல்வியாகவும் இருக்கும்.

இந்த புதிய ஒத்தோடிகளுடைய  முழு நோக்கமுமே போராளிகளை ஆத்திரப்பட வைத்து, நிதானமிழக்க வைத்து வன்முறையில் ஈடுபட வைப்பதாகும்.

பின்னர் மக்கள் மத்தியில் இதை காரணம் காட்டி போராட்டத்துக்கான கட்டமைப்புக்களை இவர்கள் சிதைக்கிறார்கள். போராட்டத்துக்கான வளங்களை பாழ்படுத்துகிறார்கள் என்று பரப்புரை செய்து தங்களை நியாயவான்களாகவும் போராளிகளை துரோகிகளாகவும் காட்டி மக்களிடம் இருந்து அவர்களை பிரித்து எதிரி அவர்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதாமாக செய்து முடிப்பார்கள்.

மறுபுறத்திலே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் போராளிகளால் மேற்கொள்ளப்படும் ஒரு சிறு வன்முறையை கூட இவர்கள் கொலை முயற்சி, ஆட்கடத்தல், பணப்பறிப்பு முயற்சி என்று புலம்பெயர் நாட்டு அரசாங்கங்களுக்கு முறைப்பாடு செய்து, அதுவும் தங்களை புலம்பெயர் நாட்டு ஜனநாயக செயற்பாட்டாளர்களாகவும் நாட்டிலிருந்து வந்த இயக்கப் போராளிகளை வன்முறையாளர்களாகவும் ஜனநாயக விரோதிகளாகவும் காட்டி ஏற்கனவே போராட்டத்தின் மீதும் போராட்ட அமைப்பின் மீதும் சுமத்தப்பட்டுள்ள பயங்கரவாத முத்திரையை இன்னும் வலுப்படுத்தும் எதிரியின் திட்டத்தை நிறைவேற்றுவார்கள்.

இந்த இடத்திலே இதை படிப்பவர்களுக்கு இந்த புதிய ஒத்தோடிகள்  சொல்வதைப் போல சிறீலங்கா அரசால் அனுப்பப்பட்ட போராளிகள் போராட்டத்தையும் போராட்ட அமைப்பையும் பயங்கரவாதிகளாக காட்டுவதற்கு  ஏன் இவற்றை திட்டமிட்டு செய்யக் கூடாது என்று சந்தேகம் வரலாம்.

இந்த சந்தேகத்தை இரண்டு விதங்களில் தீர்க்கலாம்.

முதலாவது ஒரு போராளி என்பவன் தன்னுடைய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் கொடுமைகளையும் கண்டு மனம் கொதித்து அவற்றை நிறுத்துவதற்கு அதற்கு தீர்வுகாணப் புறப்பட்டவன். அவனது நெருக்கடி நிறைந்த நீண்ட போராட்ட வாழ்க்கை அவனுக்கு எதிரி யார், நண்பன் யார் என்பதை ஆழமாகவே அவனது மனதில் பதிய வைக்கும். தன்னுடைய     சொந்த மக்களை தன் கண்முன்னாலேயே வகை தொகையின்றி கொன்று குவிக்கும் துடைத்தழிக்கும் எதிரியை நண்பனாக ஏற்றுக் கொள்ளவும் அவனுக்காக வேலை செய்யவும் உண்மையான போராளியின் மனம் ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது.

எந்த எதிரிக்கு எதிராக ஒரு போராளி தீரத்துடன் போரிட்டானோ, அந்த எதிரியிடம் மண்டியிட்டு கைதியாகும் நிலை ஒரு போராளிக்கு ஏற்பட்டால்  அதைவிட உச்சபட்ச துன்பமும் கொடுமையும் அவனுக்கு வேறு இருக்கமுடியாது.

எதிரியின் அடிகளும் உதைகளும் வதைகளும் இன்னும் அவனை பக்குவப்படுத்தி இன்னும் உத்வேகத்துடன் போராடத்தூண்டுமே தவிர கோழையாக எதிரியின் இரண்டாம் படையாக அவனை மாற்றாது. ஒரு சிலர் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம். அதுவும் மிக சொற்பமானவர்களாகத்தான் இருப்பார்கள்.

இன்றைக்கு புலம்பெயர்ந்து வந்திருக்கக் கூடிய போராளிகள் தானுண்டு தன்குடும்பம் உண்டு என்று இருக்காது  முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து மீண்டெழுவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பதற்கும் செயற்படுவதற்கும் இது தான் அடிப்படையாகும்.

அடுத்து உண்மையில் சிறீலங்கா அரசால் அனுப்பப்பட்ட ஒருவன் அல்லது ஒரு குழுவினர் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக தொடர்ந்து வைத்திருக்க வன்முறையில் ஈடுபட்டால் அவர்களை ‘தனிநபர்கள் தனிப்பட்ட வன்முறைக் குழுவினர்” என்றுதானே காவல்துறையில் முறைப்பாடு செய்ய வேண்டும். ஆனால் ஆயுதம் தூக்கிய போராளிகள், நாட்டில் இருந்து வந்தவர்கள், பணப்பறிப்பு, ஆட்கடத்தல், கொலை முயற்சி என்பவற்றில் ஈடுபடுகிறார்கள் என்றல்லவா- அதுவும் சிறீலங்கா அரசுக்கு சாதகமான விதத்தில் அல்லவா முறைப்பாடுகள் செய்யப்படுகின்றன.

இதுவே இவர்கள் புதிய ஒத்தோடிகள் எப்பதற்கு வலுவான ஆதாரம் அல்லவா?

– சிவா சின்னப்பொடி

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *