மேலும்

உடன்பாடுகளை நடைமுறைப்படுத்தியிருந்தால் பிரபாகரன் உருவாகியிருக்கமாட்டார் – மைத்திரி

maithriடட்லி  – செல்வா, பண்டா- செல்வா உடன்பாடுகளை நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தால், வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற ஒருவர், உருவாகியிருக்கமாட்டார் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு மாற்றத்தை மேற்கொள்வதற்காக சிறிலங்கா நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், சிறப்புரை ஆற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“நாட்டு மக்களின் விருப்பு வெறுப்புகள் உள்வாங்கப்பட்ட மற்றும் காலத்துக்கு பொருந்தக் கூடியவாறான அரசமைப்பு முறை இருக்க வேண்டும் என்பது எனது கருத்து.

துரதிஸ்டவசமாக நாடு பல வாய்ப்புகளை தவறவிட்டிருக்கிறது. டட்லி சேனநாயக்க – செல்வநாயகம், பண்டாரநாயக்க- செல்வநாயகம் உடன்பாடுகளை நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தால், வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற ஒருவர், உருவாகியிருக்கமாட்டார்

1958, 1971,1983 வன்முறைகளில் இருந்து இருந்து பாடம் கற்றோம். 2004இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் கூட நாட்டை அபிவிருத்தி செய்யும் நல்லதொரு வாய்ப்பை வழங்கியது. இவ்வாறு பல வாய்ப்புகளை நாடு இழந்திருக்கிறது.

தெற்கிலுள்ள மக்கள் சமஸ்டி என்ற சொல்லைப் பார்த்து அஞ்சுகின்றனர். வடக்கிலுள்ளவர்கள் அதேபோன்று ஒற்றையாட்சி என்ற சொல்லுக்கு அஞ்சுகின்றனர். இதனைத் தீர்க்க வேண்டும்.

அரசியலமைப்பை வரைவதற்கு அரசாங்கத்திடம் தகுதிவாய்ந்த, ஆற்றல் வாய்ந்தவர்கள் இருக்கின்றனர். எனவே அதனை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறை இருந்தததனால் தான் போரை முடிவுக்கு கொண்டுவர முடிந்ததாகவும், ஆகவே நிறைவேற்று அதிகார அதிபர் முறையை ஒழிக்கக் கூடாது என்றும் சிலர் கூறுகிறார்கள்.

அவ்வாறு நிறைவேற்று அதிகார அதிபர் முறை இருந்தால்தான் போர் முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்றால், எதிர்காலத்தில் மீண்டும் போர் ஒன்று ஏற்பட வேண்டிய தேவை இருக்கிறதா?

மேலும் ஒரு போர் ஒன்று ஏற்படாதிருப்பதற்கு நாட்டுக்குத் தேவையான நடவடிக்கைகளையே நாங்கள் செய்ய வேண்டும்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட உள்ளது குறித்து வெவ்வேறான பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

புதிய அரசியலமைப்பு உருவாக்குவதனால் பெளத்த மதத்துக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மகா சங்கத்தினர் என்னிடம் கேட்டனர். ஏன் நாங்கள் கலக்கமடைய வேண்டும்? எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படப் போவதில்லை.

எங்களிடம் அறிவு, திறமை, கடந்தகால அனுபவங்கள் நிறையவே இருக்கின்றன. இவற்றை கொண்டு நாட்டை கட்டியெழுப்புவதற்காகவும், நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்துமே செயல்பட வேண்டும்.

வெளிநாட்டு சக்திகளின் அழுத்தங்கள் காரணமாகவே புதிய அரசியலமைப்பு முறை உருவாக்கப்பட இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எனக்கோ பிரதமருக்கு எந்த வெளிநாடுகளும் அழுத்தங்களைப் பிரயோகிக்கவில்லை.

26 ஆண்டு கால யுத்தத்தில் வடக்கு இளைஞர்கள் போலவே தெற்கிலும் எவ்வளவோ இளைஞர்கள் உயிரிழந்தார்கள்.

வடக்கிலும் தெற்கிலும் உள்ளவர்களை ஒன்றிணைக்கும் முறையே எமக்குத் தேவை.

அனைத்து மக்களும் அனைத்து மதத்தினரும் ஐக்கியத்துடன் வாழ்வதற்குரிய நாட்டைக்கட்டியெழுப்ப வேண்டும் ” என்று அவர் குறிப்பிட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *