மேலும்

இரண்டாம் முள்ளிவாய்க்கால்

இந்தத் தொடர் எவரையும் எந்த அமைப்பையும்  நியாயப்படுத்துவதற்கோ எவர் மீதும் எந்த அமைப்பின் மீதும் தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டுவதற்கோ எழுதப்படுவதல்ல. இது முள்ளிவாய்க்காலின் பின்னரான பின்போர் சூழலில் நடந்துவரும் பிழைப்பவாத அரசியலை  கட்டுடைப்பதை நோக்கமாகக் கொண்டது.

இந்த தொடரை நடுநிலை என்ற போலியான பொய்யான கருத்தியில் வெளிப்பாட்டு முறையில் நின்று எழுதவில்லை.நடுநிலை என்று ஒன்று இந்த உலகத்தில் இருக்க முடியாது என்று உறுதியாக நம்புவன் நான்.

ஓரு கருத்தின் கருத்தியல் பெறுமதியை தான் வாழும் சமூகத் தளத்தில் அதிலும் எப்போதும் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படும் பரந்துபட்ட மக்கள் தளத்தில் இருந்து பார்க்கவேண்டும், அந்த சமூகத்தின்-மக்களின் குரலை அந்த கருத்து அந்த எழுத்து பிரதிபலிக்க வேண்டும் என்கின்ற சமூக பிரதிபலிப்பு முறையை பின்பற்றுபவன் நான்.

எனது இந்தத் தொடர் முழுவதையும் அந்த முறையிலேயே அதாவது பௌத்த சிங்கள பேரினவாத ஒடுக்குமுறைக்குள்ளான எமது மக்களின் தளத்தில் இருந்தே எழுதுகிறேன்.

இந்த தொடரை காய்தல், உவர்த்தல் இன்றி படிப்பவர்களை, அறிதல் – தெளிதல் – வினையாற்றல் என்ற மூன்று செயற்பாட்டு தளத்துக்கு அது கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

ஈழத்தமிழர்களாகிய நாம் முதலில் வாழ்வதற்காக போராடுவோம்…

பின்னர் போராடுவதற்காக வாழ்வோம்….

கடந்த கால தவறுகளை திருத்துவதற்காக ஆக்கபூர்வமாக விமர்சிப்போம்..

எதிர்காலத்தில் தவறுகள் நிகழாமல் தடுப்பதற்காக உண்மையான சுயவிமர்சனத்தை முன்வைப்போம்.

நன்றி

சிவா சின்னப்பொடி

 முரண்பாடுகளை புரிந்து கொள்வது பற்றி…

 ‘தியாகியும் எதிரியும் துரோகியும் ஒருபோதும் வானத்தில் இருந்து அவதாரம் எடுத்து குதித்து வருவதில்லை. அதேபோல யாரும்  பிறக்கும் போதும் இந்த அடையாளாங்களுடன் பிறப்பதில்லை’

0000

ஒரு விடுதலைப்போராட்டம் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கின்ற பொழுது போராடிய தரப்புக்கு அடுத்த கட்டமாக இரண்டு தெரிவுகள் தான் இருக்கும்.

ஒன்று சரணாகதி அரசியல்; மற்றது சமரச அரசியல்

மக்களின் விடுதலைக்காக உண்மையாக போராடிய எந்தவொரு விடுதலை இயக்கமும் ஒரு போதும் சரணாகதி அரசியலை ஏற்றுக்கொள்வதில்லை.

பிழைப்பவாத மற்றும் சந்தர்ப்பவாத அமைப்புகளாக மாறிப் போய்விட்ட விடுதலை இயக்கங்கள் தான் மக்களுக்காக மக்களின் நலனுக்காக என்று ஆயிரம் விளக்கங்களை கூறிக்கொண்டு எதிரியிடம் சரணடைந்து போராட்டத்தையும் அதற்காக உயிர் கொடுத்த போராளிகளின் உயிர்தியாகத்தையும் இரத்தம் சிந்திய போராளிகளின் அர்ப்பணிப்பையும் காட்டிக்கொடுத்து பதவிகளையும் சலுகைகளையும் பெற்றுக் கொள்ளும்.

இவ்வாறான ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் உண்மையாக மக்களின் விடுதலைக்காக போராடிய விடுதலை இயக்கங்கள் விடுதலைப் போராட்டத்தையும் போராட்ட அமைப்பையும் தற்காத்து கொள்வதற்காக சமரச அரசியலை தேர்தெடுக்கும்.

சமரச அரசியல் என்கிற போது எதிரியிடம் சமரசம் செய்வதல்ல.அது எதிரியின்; எதிரியுடன் சமரசம் செய்து கொள்வதாகும்..இதற்கு உதாரணமாக 1988-1999 களில் இந்திய அமைதிப்படையின் யுத்த முன்னெடுப்பின் போது விடுதலைப் புலிகள் பிரேமதாசாவுடன் சமரசம் செய்து கொண்டதை குறிப்பிடலாம்.இந்த சமரச அரசியலின்  போது விடுதiலை இயக்கங்கள் தங்கள் போராளிகளையும் போராட்டத்துக்கான வளங்களையும் ஓய்வு நிலையில் வைத்துக் கொண்டு தங்களது ஆதரவு சக்திகளை களம் இறக்கவேண்டும்.இது கூட எதிரியை அவனது வழியில் சென்றுபலவீனப்படுத்தும் யுத்த தந்திரவகையை சேர்ந்தாகும்.

மக்களின் விடுதலை என்ற இலக்கில் உறுதியாக நிற்கும் எந்த வொரு விடுதலை இயக்கமும் விடுதலைப்போராட்டம் மிகப்பெரிய தோல்வியை அழிவை சந்தித்த காலகட்டத்தில் எதிர்பரசியலை முதன்மைப்படுத்துவதில்லை. இப்படி முதன்மைப்படுத்துவது  தற்கொலைக் கொப்பானது என்பது அந்த இயக்கங்களின் கொள்கை வகுப்பாளர்களுக்குத் தெரியும். இப்படி பலவீனமான நிலையில் எதிர்பரசியலை முன்னெடுக்கும்  போது எதிரி எஞ்சியுள்ள போராட்ட சக்திகளையும் வழங்களையும் இனங்கண்டு துடைத்து அழித்துவிடுவான்.

இதை சுலபமாக புரிந்து கொள்ளும்படி சொன்னால் ஒரு ஐம்பது இராணுத்தினர் எந்தேரமும் சுடவதற்கு தயாரான நிலையில் நிற்கும்   போது ஒரு இரண்டு போராளிகள் ஒரு ஒரு வில்லுக்(சிறு)கத்தியுடன் சென்று ‘உங்களை கொல்லுவோம் வெட்டுவோம் குத்துவோம்’ என்று வாயச் சவடால் விட்டால் அவர்களை மட்டுமல்ல அவர்கள் தங்கியிருந்த வீடு கிராமும் அங்கிருந்த ஆட்கள் என்று துடைத்தழித்துவிடுவார்கள்.அவர்களை தடுத்து நிறுத்தும் சக்தி யாருக்கும் இருக்காது.

ஆனால் நமக்கு முள்ளிவாய்க்காலில் நடந்ததைப் போல, ஓரு பேரவலம் நிகழ்ந்த சூழ்நிலையில்  அதன் பாதிப்பிலிருந்து மக்கள் மீழுவதற்கு முன்பே எதிரி தனது உளவுத்துறையை வைத்து தீவிரமான எதிர்ப்பரசியலை முன்னெடுப்பான்.

இந்த எதிர்பரசியல் தளத்தில் களமிறக்கப்படும் உளவாளிகளும் அவர்களது முகவர்களும் அதிதீவிரமான போராட்டக் கருத்துக்களை மக்கள் முன் வைப்பார்கள். அனல் பறக்கும் வீர வசனங்களும் கொள்கை விளக்கங்களும் மக்களே வியந்து போகும் அளவுக்கு அவர்கள் முன் வைக்கப்படும்.புதிய திட்டங்கள் புதிய செயற்பாடுகள் என்று எல்லாவற்றையும் விரைந்து உடனடியாக செய்ய வேண்டும் என்று வேகம் காட்டப்படும்.

இந்தப் பரபரப்பு வேகம் கொள்கை விளக்கங்களுக்கு ஊடாக கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஏற்கனவே விடுதலைச் செயற்பாட்டில் இருந்தவர்களைப்பற்றியும் போராளிகளைப் பற்றியும்  பொய்யான வதந்திகளை பரப்புவதும் சேறடிப்பதும் நடக்கும்.எந்தவித ஆதாரமும் இல்லாமல் பொய்கள் உண்மைபோல பரப்பப்படும். ஆக்கபூர்வமான விமர்சனங்களை வைப்பதாக சொல்லிக்கொண்டு காட்டிக்கொடுப்புகள் நடக்கும்.இதற்கென ஊடகங்கள் விலைக்கு வாங்கப்படும்.போலியான இணையத்தளங்கள் இணையப் பத்திரிகைகள் உருவாக்கப்படும்.இந்தப் போலிகள் தாங்கள் தான் நூற்றுக்கு நூறு விதம் உண்மையானவர்கள் என்று திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருப்பார்கள்.

மக்களுக்கு யாரை நம்புவது என்று குழப்பம் ஏற்படும். உண்மையான போராட்ட சக்திகளுக்கு இதனால் ஆத்திரம் ஏற்படும்.

எதிரியின் நோக்கம் மக்களை குழப்பி போராட்டத்தளத்தில் இருந்து அவர்களை அந்நியப்பட வைப்பது,மறைந்திருக்கும் உண்மையான போராளிகளை வெளியே வரவைப்பது. அவர்களை சீண்டுவதன் மூலம் ஆத்திரப்பட வைத்து வன்முறையில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளுவது

அப்படி அவர்கள் ஆத்திரப்பட்டு இவர்கள் மீது கைவைக்கச் செய்யும்  அல்லது இவர்களை எச்சரிக்கும் நிலையை திட்டமிட்டு உருவாக்கி பின்னர் அதை அந்ததந்த நாடுகளிலுள்ள காவல்துறைக்கு எங்களிடம் பணம் கேட்டு மிரட்டினார்கள்.எங்களது ஜனநாயக செற்பாட்டை குழப்புகிறார்கள், எங்களை கொலை செய்யப் போவதாக மிரட்டுகிறார்கள் என்று புகார் கொடுப்பது..இந்த புகார்களை பதிவு செய்யும் காவல்துறையினரை விடுதலை இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்பதற்கான ஆதாரமாக இவற்றை சேர்த்துக் கொள்ள செய்வதாகும்.

ஓரு விடுதலைப் போராட்டம் தோல்வியை தழுவியபின் என்ன நடக்குமோ அத்தனை விடயங்களும் நமது போராட்ட தளத்திலே முள்ளிவாய்க்காலின் பின்னர் இங்கே புலத்திலே நடந்தன-இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த இடத்திலே நமது போராட்ட சூழ்நிலையிலே இங்குள்ள சிலர் குற்றம்சாட்டுவதைப் போல தடுப்பிலிருந்த போராளிகளை சிறீலங்கா அரசு விலைக்கு வாங்கி இங்கு குழப்பங்களை ஏற்படுத்த இங்கு அனுப்பி வைத்திருக்கலாம் தானே அவர்களை எப்படி நம்புவது என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம்.

இதற்கான  தெளிவை  போராளி என்பவர்கள் யார் என்ற கேள்விக்கான பதிலில் இருந்து பெறலாம் என்று நினைக்கிறேன்.

போராளிகள் பொழுது போக்குக்காக ஆயுதம் தூக்கியவர்கள் அல்ல.தாங்கள் தூக்கிய ஆயுதத்தால் தங்களுக்கு பட்டம் கிடைக்கும் பதவி கிடைக்கும் அல்லது தங்களது  குடும்பங்களுக்கு பொன்னும் பொருளும் கிடைக்கும் அல்லது தாங்கள் புலம் பெயர்ந்து வந்தால் அகதி அந்தஸ்த்து கிடைக்கும் என்று எண்ணி களம் சென்றவர்கள் அல்ல அவர்கள். விடுதலை ஒன்றையே நேசித்து அதற்காக இளமையின் ஆசாபாசங்களை துறந்து கல்வியை துறந்து பெற்றொர் உற்றோரின் அரவணப்பை துறந்து இரத்தம் சிந்தி சாவின் விளிம்புக்கு சென்று வந்தவர்கள் அவர்கள்.இது அனைத்து இயக்க போராளிகளுக்கும் பொருந்தும்.

ஓரு உண்மையான  போராளி எப்போதும் போர் குணத்தோடு தொடர்ந்து செயற்படுவான், அது முடியில்லை என்றால் ஒதுங்கிப் போவானே தவிர போராட்டத்துக்கு துரோகம் செய்யமாட்டான். அதற்கு அவனது மனச்சாட்சி இடங்கொடுக்காது.விதி விலக்காக சிலர் இருக்கலாம். ஒரு போராட்டத்தில் அவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களாகவே இருப்பார்கள்.

அதேபோல உண்மையான  போராளிகள் யாரையும் துரோகிகள் என்று சொல்லமாட்டார்கள் . யாரையும் காட்டிக்கொடுக்கமாட்டார்கள்

சக போராளி தன்னை அடித்தால் கூட அதை புலம் பெயர்ந்த நாட்டு காவல்துறைக்கு திரித்துச் சொல்லி தாங்கள் சார்ந்த விடுதலை இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அடையாளப்படுத்த  இடமளிக்கமாட்டார்கள். ஊடகங்களில் பொய்யையும் புரட்டையும் எழுதி மக்களை குழப்பி பேராட்ட தளத்தில் இருந்து ஒதுங்கும் படி செய்ய மாட்டார்கள். இயக்கத்தினுடைய எந்த வொரு ஆவணங்களையும் சொத்துக்களையும்  தங்களது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தமாட்டார்கள் இயக்க பொறுப்பாளர்களின் மின்னஞ்சல்களை உடைத்து   தகவல்களை திருடி இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தவர்களை பகிரங்கப்படுத்தமாட்டார்கள்.இவையெல்லாம் ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் அவர்கள் எடுத்த சத்திய பிரமாணத்துக்கு எதிரானது என்று அவர்களுக்குத் தெரியும்.

இவற்றையெல்லாம் யார் செய்யவில்லையோ அவர்களே உண்மையான போராளிகள் என்றும் மற்றவர்களை போராளிகளின் முகமுடியணிந்த ‘பேராளிகள்'(பேரை பயன்படுத்துபவர்கள்) என்றும் நாம் சுலபமாக இனங்கண்டு கொள்ளலாம்.

இது எதோ நமது விடுதலைப் போராட்டத்தில் மட்டும் தான் இவ்வாறு நடந்தது- நடக்கிறது என்று நாங்கள் எண்ணிவிடக்கூடாது.கொலம்பியா பிலிப்பைன்ஸ் மேற்கு சஹாரா, கிழக்கு தீமோர், பலஸ்தீனம் என்றும் பல்வேறு நாடுகளில் நடந்த விடுதலைப் போராட்டங்கள் அவர்களது எதிரிகளால் நசுக்கப்பட்ட காலங்களில் இந்த எதிர்ப்பரசியல் அணுகு முறைதான் கையாளப்பட்டது. அந்த விடுதலைப் போராட்ட தளங்களிலே குழப்பங்களும் பிளவுகளும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு கோலாச்சி மக்களை சலிப்படைய வைத்தன. நிறைய போராளிகள் காட்டிக் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்கள் அல்லது கொலை செய்யப்பட்டார்கள்.ஏராளமான போராளிகள் அவர்கள் புலம் பெயர்ந்து மறைந்திருந்த நாடுகளில் இருந்து நாடுகடத்தப்பட்டார்கள்.

இந்த நெருக்கடியை  அந்த விடுதலை இயக்கங்கள் எவ்வாறு கையாண்டன. எப்படி அதிலிருந்து மீண்டன என்பதற்கு நிறைய முன் உதாரணங்கள் இருக்கின்றன.நான் அவற்றில் இருந்த அரசியலை மட்டும் தான் எடுத்துக்கொள்கிறேன்.

முதலாவது இந்த எதிர்ப்பரசியலை முன்னிடுப்பவர்கள் எவ்வளவு ஆத்திரமூட்டினாலும் நிதானத்தை இழக்கமால் அமைதியாக இருப்பது.

மக்களோடு மக்களாக இருந்து(அது ஒரு சிறிய தொகையாக இருந்தாலும்) சொல்லிலும் செயலிலும் நடத்தையிலும் நேர்மையையும் ஒழுகக்தையும் வெளிப்படுத்துவது.எதிரியினுடைய முழு நோக்கமும் போராளிகளை பொது மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தி அவர்களை வெறுக்க வைப்பது. ஆதன் மூலம் இந்தப் போராட்டமே எங்களுக்கு தேவை இல்லை என்ற முடிவுக்கு அவர்களை வரவைப்பது.இதற்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் இடமளிக்கக் கூடாது. இதை முறியடிப்பதற்கு போராளிகள் எப்போதும் பொது மக்களை நோக்கிச் செல்ல வெண்டும்.அவர்களிலேயே தங்கியிருக்க வேண்டும் .அவர்கள் வெறுத்தாலும் ஏசினாலும் பணிவேடு அவற்றை எதிர் கொள்ள வேண்டும்.

பொது மக்கள் மத்தியில் இருக்கின்ற சந்தேகங்கள் என்ன என்பதை கண்டறிந்து அவற்றை தீர்த்துவைப்பதற்கான வேலை திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய விடயங்களுக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.

முதலில் பொது மக்களில் மாவீரர் குடும்பங்கள் போராளி குடும்பங்கள் போரில் அதிகளவு இழப்புக்களை சந்தித்த குடும்பங்கள் போராட்டத்துக்கு பெரும் பங்களிப்புச் செய்த குடும்பங்களை முதலில் தேர்ந்தெடுத்து அவர்களை சந்தித்து அவர்கள் மனதில் விதைக்கப்பட்ட சந்தேகங்களை போக்க வேண்டும்.எதையும் அவர்களுக்கு மறைக்கக் கூடாது.மக்களின் மனங்களை வெல்வது தான் ஒரு போராட்டம் தோற்றுப் போன காலத்தில் எதிரி முன்னெடுக்கும் எதிர்பரசிலை முறியடிப்பதற்கான முதல் படியாகும்.

எதிரியால் முன்னெடுக்கப்படும் எதிர்பரசியலில் பண பலம் ஆள்பலம் அடியாட்கள் பலம் ஊடகபலம் என்று அனைத்தும் எதிரியால் ஒழுங்கமைக்கப்பட்டு களமிறக்கப்படும்.

இதைக்கண்டு சோர்ந்து போகவோ நம்பிக்கை இழக்கவோ கூடாது.இலட்சிய உறுதியும் நேர்மையும் ; அடுத்த கட்டத்தை நோக்கிய சரியான வேலைத் திட்டமும் இருந்தால் போராளிகளால் எந்த தடையையும் தகர்த்தெறிந்து முன்னேற முடியும்.

– சிவா சின்னப்பொடி

ஒரு கருத்து “இரண்டாம் முள்ளிவாய்க்கால்”

  1. Gopi says:

    நல்ல பதிவு. நன்றி! என்றென்றும் தேவையானது; நல்வழி காட்டுவது; உறுதி தருவது; தொடரட்டும் நற்பணி! வாழ்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *