மேலும்

புதிய கூட்டணியை உருவாக்க மகிந்த ஆதரவு அணி முயற்சி – உடைக்க முனைகிறார் மைத்திரி?

colombo-upfa-nomination (1)ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகள், புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்குவது தொடர்பாக கலந்துரையாடி வருவதாக, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணில் இணைந்து கொள்ள குறைந்தது ஐந்து அரசியல் கட்சிகள் இணங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதிக்கம் மைத்திரிபால சிறிசேனவிடம் சென்றுள்ள நிலையில், கூட்டணியில் இடம்பெற்றுள்ள மகிந்த ராஜபக்ச ஆதரவுக் கட்சிகள் இந்தப் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.

அடுத்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளதால், அதற்குள் புதிய கூட்டணியை உருவாக்க இந்தக் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தலைவர்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

இதில் விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்த்தன, திஸ்ஸ விதாரண, டி.யூகுணசேகர, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

எனினும், பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதயகம்மன் பிலவுக்கு இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.  அவரது கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அதிகாரபூர்வமாக இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, சிறிலங்கா அதிபருடனான சந்திப்புகளை இதுவரையில் தவிர்த்து வந்த விமல் வீரவன்ச இன்று நடந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *