மேலும்

சிறிலங்காவில் தமிழர்கள் மீதான சித்திரவதைகள் தொடர்கின்றன – பிரித்தானிய அமைப்பு குற்றச்சாட்டு

freedom-from-tortureசிறிலங்காவில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்னரும் சிறுபான்மை தமிழர்கள் மீதான சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவத்தின் சித்திரவதைகள் முக்கியமான பிரச்சினையாக இன்னமும் தொடர்வதாக பிரித்தானியாவைத் தளமாக கொண்ட அனைத்துலக மனித உரிமை அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

அடித்து துன்புறுத்தல், எரிகாயங்களை ஏற்படுத்துதல், பாலியல் துஸ்பிரயோகம் செய்தல் போன்ற சித்திரவதைகள் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படுவதாக, சித்திரவதைகளில் இருந்து தப்பியோருக்கு மருத்துவ உதவிகளை வழங்கி வரும், இந்த பிரித்தானிய அமைப்பு தெரிவித்துள்ளது.

சித்திரவதையில் இருந்து விடுதலை என்ற இந்த அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், மருத்துவ ஆதாரங்களின் படி சிறிலங்காவில் சித்தரவதைகளில் இருந்து உயிர் தப்பிய 148 பேரில், 94 வீதமானோர் தமிழர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இவர்கள், 2009ஆம் ஆண்டுக்கும், 2013ஆம் ஆண்டுக்கும் இடையில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

மணல் அல்லது சீமெந்து நிரம்பிய குழாய்களால் தாக்கப்படுதல், துப்பாக்கிப் பிடிகளால் தாக்கப்படுதல் போன்ற பொதுவான சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் இவர்களில் 80 வீதமானோர், வெண்சுருட்டு அல்லது ஏனைய சூடாக்கப்பட்ட உலோகத்தினால் சுடப்பட்டு எரிகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். 71 வீதமானோர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

சிலர் நீரில் மூழ்கடிக்கப்பட்டும், எரியும் மிளகாய் சுவாலையில் அமுக்கப்பட்டும், பெற்றோல் ஊற்றப்பட்டும் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவில் 2009 மே மாதம் உள்நாட்டுப் போர் முடிந்த போதிலும்,  அங்கு சித்திரவதைகள் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்று சித்திரவதையில் இருந்து விடுதலை அமைப்பின் கொள்கை மற்றும் ஆலோசனை பணிப்பாளர் சோன்யா சீயட்ஸ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னரும் கூட சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *