மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இது கடைசி வாய்ப்பு – யதீந்திரா

Jathindra (2)தமிழ்த் தேசிய அரசியல் சூழல், நாடாளுமன்றத் தேர்தலின் அனைத்துலக முக்கியத்துவம், கூட்டமைப்பின் அரசியல் போக்கு, திருகோணமலை மாவட்டத்தின் அரசியல் நிலவரம் போன்றன குறித்த ‘புதினப்பலகை’யின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் அரசியல் ஆய்வாளரும், திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளருமான ஆ.யதீந்திரா.

கேள்வி – இப்போதைய அரசியல் சூழலில், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் வலுவான சக்தியாக இடம்பெற வேண்டும்?

பதில் – இன்றைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுதான் எங்களிடம் இருக்கிற ஒப்பீட்டடிப்படையில் பெரிய, ஜனநாயக பலமுள்ள அரசியல் அமைப்பு. இவ்வாறானதொரு சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் ரீதியில் பலவீனப்படுத்துவது சரியான ஒன்றாக இருக்காது என்றே கருதுகிறேன்.

ஆனால் ஜனநாயக அரசியலில் எவரும் தங்களின் கருத்துக்களை மக்கள் முன்வைக்க முடியும். மக்கள் தீர்மானிக்கட்டும் தங்களுக்கு யார் தேவையென்று.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் எத்தகைய விமர்சனங்களை ஒருவர் முன்வைத்தாலும் அவர்களால் ஒரு விடயத்துடன் முரண்பட முடியாது அதாவது, விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்த வெற்றி மமதையில் திளைத்திருந்த மகிந்த ராஜபக்சவுடன், எந்தவொரு விடயத்தையும் பேசக்கூடிய சந்தர்ப்பம் கூட்டமைப்பிற்கு கிடைத்திருக்கவில்லை. அது தற்போதுதான் கிடைத்திருக்கிறது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் என்று சொல்லப்படும் விடயம் உண்மையில் இன்னும் முற்றுப்பெறவில்லை. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலின் பின்னர்தான் அந்த மாற்றம் முற்றுப்பெறும். இதில் என்னமாதிரியான விடயங்கள் நிகழலாம் என்று தற்போதைக்கு எழுந்தமானமாக கூறிவிடமுடியாது. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னால் இருந்த அமெரிக்கா தலைமையிலான சக்திகள், மகிந்தவின் மீள் எழுச்சியை அவ்வளவு சுலபமாக அனுமதித்துவிடப் போவதில்லை.jathi

இவ்வாறானதொரு சூழலில்தான் இந்த தேர்தலை தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ளனர். என்னைப் பொறுத்தவரையில் இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான இறுதி சந்தர்ப்பம். நான் பங்குகொண்ட சில கூட்டங்களில் கூறிய விடயத்தையே இங்கும் குறிப்பிடுகின்றேன். ஏன் தமிழ் மக்கள் ஒரு இறுதி சந்தர்ப்பத்தை கூட்டமைப்பிற்கு வழங்கக் கூடாது?

என்னைப் பொறுத்தவரையில் இன்னும் ஜந்து வருடங்களிற்கு பின்னரும் இதேபோன்ற சொற்களுடன் கூட்டமைப்பால் தமிழ் மக்களை எதிர்கொள்ள முடியாது. இதுவே கூட்டமைப்புக்கான இறுதி சந்தர்ப்பம். இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் கூட்டமைப்புடன் நிற்பதே சரியானது.

வலுவான சக்தி என்னும் வரையறை குறிப்பிட்ட சூழ்நிலையை கருத்தில் கொண்டு மதிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும். பிரபாகரன் இராணுவ ரீதியிலும், அரசியல் ரீதியிலும் மிகவும் பலமாக இருக்கின்ற காலத்தில்தான் கூட்டமைப்பை உருவாக்கினார். அதுவரை அவரது துரோகி பட்டியலில் இருந்த தலைவர்கள் அனைவரையும் ஓரணிப்படுத்தி தங்களின் குரலாக மாற்றினார். இதனை கூட்டமைப்பில் இருக்கின்ற எந்தவொரு தலைவராலும் பகிரங்கமாக மறுக்க முடியுமா?

சம்பந்தன் ஐயா கூட தன்னுடைய நாடாளுமன்ற உரையில் (ஆங்கிலத்தில்) விடுதலைப் புலிகளின் போட்டுத் தள்ளும் பட்டியிலில் தான் இருந்ததாக குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் அப்படிப்பட்ட ஐயாவையே பின்னர் பிரபாகரன் தனது அரசியல் காய்நகர்த்தலுக்குள் உள்வாங்கிக் கொண்டார்.

நான் கிளிநொச்சியில் சில அரசியல் கலந்துரையாடல்களின் பங்குகொண்ட சந்தர்ப்பங்களில் அங்கிருந்த சில மூத்த போராளிகள், ஐயாவை “ஆள் பெறுமதியானவர்  தான்”, என்று சொல்லியதை கேட்டிருக்கிறேன். ஏன் பிரபாகரன் மிகவும் பலம் குன்றியிருந்தவர்களை அரவணைத்துச் செல்ல வேண்டும்?

பிரபாகரனிடம் அன்றிருந்த பலத்திற்கு இவர்களை கருத்தில் கொண்டிருக்க வேண்டிய எந்தவொரு தேவையும் அவருக்கு இருந்திருக்கவில்லை. ஆனால் தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் வர வேண்டும், அப்படி நிகழ்ந்தால்தான், நாம்  அனைத்துலக த்தின் முன்னிலையில் ஓரு குரலில், ஒரு நிலைப்பாட்டில் ஓங்கிப் பேச முடியும். பல்வேறு குரல்கள் இருக்கின்ற போது, அது நமது அரசியல் நிலைப்பாட்டை ஆணித்தரமாக முன்வைப்பதற்கு தடையாக அமையும்.

மாற்று கருத்துக்கள் இருக்கலாம். அது ஒரு ஜனநாயக அம்சம். அப்படி மாற்றுக் கருத்துக்கள் இருக்கின்ற போதிலும், தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என்று வரும்போது, எங்களுக்குள் இருக்கின்ற பேதங்களை மறந்து அல்லது துறந்து நாங்கள் ஓரணியாக நிற்க வேண்டிய தேவையுண்டு. ஏனெனில் மக்களின் நலனை விட வேறு ஒன்றும் பெரிதல்ல என்பதே எனது நிலைப்பாடு. அத்தகையதொரு நிலைப்பாட்டின் அடிப்படையில்தான் கூட்டமைப்பு இன்றைய சூழலில் வலுவானதொரு அரசியல் சக்தியாக அமைய வேண்டுமென்று கூறுகின்றேன். அதனை வலியுறுத்தி தேர்தலிலும் போட்டியிடுகின்றேன்.

கேள்வி – இலங்கையின் மீதான அனைத்துலக அழுத்தங்கள் தொடர்பிலும் அதன் மூலோபாய முக்கியத்துவம் (Strategic  Importance) தொடர்பிலும் நீங்கள் தொடர்ச்சியாக பேசி வந்திருக்கின்றீர்கள். ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இடம்பெறும் நாடாளுமன்ற தேர்தல் என்னும் வகையில் இந்த தேர்தலை ஒரு  அனைத்துலக  முக்கியத்துவத்துவம் வாய்ந்த தேர்தலாக கருத முடியுமா? இது தொடர்பில் உங்களுடைய பார்வை எத்தகையது?

பதில் – சில தினங்களுக்கு முன்னர், அமெரிக்காவின் முன்ளைநாள் தேசிய புலனாய்வு பணிப்பாளர் டெனிசன் பிளேயர் அமெரிக்கா, ஆசியாவில் இடம்பெறும் இரண்டு தேர்தல்களை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக குறிப்பிட்டிருந்தார். அதில் ஒன்று நாங்கள் எதிர்கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் மற்றையது எதிர்வரும் நொவம்பர் மாதம் கிழக்காசிய நாடான மியன்மாரில் இடம்பெறவுள்ள தேர்தல்.

அமெரிக்காவின் புலனாய்வு அதிகாரி ஒருவரே இவ்வாறு வெளிப்படையாக குறிப்பிடுவதிலிருந்து இந்தத் தேர்தல் எந்தளவு  அனைத்துலக  முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். ஆனால்  அனைத்துலக  முக்கியத்துவம் என்பது சில பலம்பொருந்திய நாடுகளின் நலன் சார்ந்தது என்பதையும் நாங்கள் மறந்துவிடக் கூடாது.

இன்று இலங்கையின் மீது அழுத்தங்களை பிரயோகித்து வரும் அமெரிக்கா, விடுதலைப் புலிகளை பூண்டோடு அழிக்கும் மகிந்தவின் யுத்தத்தில் முக்கிய பங்காற்றியிருந்தது. இதனை நான் ஏதோ எழுந்தமானமாக சொல்லவில்லை. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியே இதனை நாசூக்காக கூறிச் சென்றிருக்கிறார்.

மகிந்த ராஜபக்ச அரசு விடுதலைப் புலிகளோடு எவ்வாறு சண்டையிட்டது என்பதில் அமெரிக்காவிற்கு உடன்பாடின்மைகள் இருந்தாலும் கொலைகார பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பும் அதனால் விதைக்கப்பட்ட அச்சமும் பூண்டோடு அழிக்கப்பட வேண்டுமென்பதில் தாங்கள் தெளிவான விளக்கத்தை கொண்டிருந்தாகவும் ஜோன் கெரி குறிப்பிட்டிருந்தார்.

Jathindra (1)

லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் ஆற்றிய உரையிலேயே அவர் இதனை குறிப்பிட்டிருந்தார். இதன் பொருள் என்ன? இதிலுள்ள கவலைக்குரிய விடயம் என்னவென்றால் கடந்த முப்பது வருடங்களாக இந்த மக்களுக்காக மரணித்துப் போனவர்களை வெறும் கொலைகார பயங்கரவாத குழுவினர் என்று ஒரு அமெரிக்கர் சொன்னபோது, அதனை மறுத்து பேசுவதற்கு வடக்கு கிழக்கில் ஒரு தலைவர் இருந்திருக்கவில்லை.

மேடைகளில் என்னுடைய தலைவர் பிரபாகரன், எங்களுடைய தம்பிமார் என்றெல்லாம் கூறித்திரியும் எவரும் வாய் திறக்கவில்லை. நான் மேடைகளில் போலியாக அப்படி பேசுவதில்லை. ஆனால் கெரியின் கருத்தை மறுத்து நான் எழுதியிருக்கிறேன். அது தவறான கருத்து என்றும் வாதிட்டிருக்கிறேன்.

இந்த தேர்தலை பொறுத்தவரையில் இது மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்ட பின்னர் இடம்பெறுகின்ற தேர்தல், அந்த வகையில் இது அமெரிக்காவினால் உன்னிப்பாக நோக்கப்படுகிறது. மகிந்த ராஜபக்சவை அகற்றியதில் அமெரிக்காவிற்கு பெரிய பங்கிருப்பதாகவே கூறப்படுகிறது. ஆட்சி மாற்றம் நிகழ்ந்த முறையை அவதானித்தால் ஒரு பலம்பொருந்திய நாட்டின் திருவிளையடல் இன்றி அது சாத்தியப்பட்டிருக்கவும் முடியாது.

ஆனால் எதிர்பார்த்தது போன்று சிங்கள மக்களை ராஜபக்சவிடமிருந்து அன்னியப்படுத்த முடியவில்லை. இவ்வாறானதொரு சூழலில்தான் இந்த நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறுகின்றது. இந்த தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சி தலைமையிலான அணியினரை பலப்படுத்துவதே அமெரிக்காவின் நோக்கம். அந்த வகையில்தான் இடம்பெறவுள்ள தேர்தல் ஒரு  அனைத்துலக  முக்கியத்துவத்தை பெறுகிறது.

மகிந்த ராஜபக்ச மீண்டும் பலமடைந்தால் ஆசியா நோக்கிய அமெரிக்க மூலோபாய நகர்வுகளுக்கு இலங்கை அரசு ஒரு தடைக்கல்லாகவே இருக்கும். கடந்த ஒன்பது வருடகால ஆட்சியின் போது மகிந்த சீனாவின் மூலோபாய நகர்வுகளுக்கு ஆதரவான ஒருவராகவே இருந்தார்.

இது அமெரிக்காவின் ஆசிய மையக் கொள்கையுடன் (Pivot of Asia) நேரடியாக மோதியது. மேலும் இது, அமெரிக்க – இந்திய கூட்டு நலன்கள் மீதான நேரடிச் சவாலாகவும் மாறியது. இவ்வாறானதொரு சூழலில்தான் மகிந்த ராஜபக்ச வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். ஆனால் மகிந்த இன்னும் முழுமையாக அனுப்பப்படவில்லை.

நடைபெறவுள்ள நடாளுமன்ற தேர்தலின் பின்னர் அதற்கான வாய்ப்பு உருவாகலாம் என்பதே தற்போதைய கணிப்பு. ஆனால் இதற்காக நாங்கள் எதிர்வரும் 18ம் திகதி வரையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அமெரிக்கா ஒரு விடயத்தை இலக்கு வைக்குமானால் தான் எதிர்பார்க்கும் இறுதி விளைவு வரையில் அதனை கைவிடாது.

ஆனால் நாங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். அனைத்துலக  முக்கியத்துவம் என்பது அவர்களின் நலன் சார்ந்ததேயன்றி எங்களுடைய நலன் சார்ந்த ஒன்றல்ல. ஏனெனில் அமெரிக்காவின் நலன்கள் வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் எங்களுடைய விவகாரம் தூக்கி வீசப்பட்டு விடலாம். எனவே இந்;த விடயங்களை துல்லியமாக பரிசீலித்து, கிடைகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் பயன்படுத்திக் கொள்ளும் அரசியல் திறன் குறித்தே நாங்கள் சிந்திக்க வேண்டும்.

உணர்ச்சிவசமான பேச்சுக்கள், உசுப்பியேற்றும் வாதங்கள் இனி தமிழ் மக்களை காப்பற்றப் போவதில்லை ஏனெனில் எங்களுடைய அரசியல் இப்போது எங்களுடைய அரசியல் மட்டுமல்ல அது பலம்பொருந்திய சக்திகளின் அரசியலாகவும் இருக்கிறது.

கேள்வி- திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான வெற்றி வாய்ப்பு எந்தளவில் உள்ளது?

பதில் – திருகோணமலையை பொறுத்தவரையில் கூட்டமைப்பின் மக்கள் ஆதரவு தளத்தை சிதைக்கும் அல்லது சிதறடிக்கும் ஆற்றல் கொண்ட வலுவானதொரு தமிழ் அரசியல் கட்சியில்லை. அந்த வகையில் திருகோணமலையில் கூட்டமைப்பின் வெற்றியென்பது உறுதியான ஒன்று. அதில் இரண்டாம் கருத்திற்கு இடமில்லை. ஒரு ஆசனம் நிச்சயம் இது இரண்டாகுமா என்பது மக்களின் வாக்களிப்பில்தான் தங்கியிருக்கிறது.

கேள்வி – திருகோணமலையில் இரண்டு அல்லது அதற்கும் அதிகமான ஆசனங்களைப் பெறுவது சாத்தியமா? அதற்காக கூட்டமைப்பு கையாளும் உத்திகள், தமிழ் பேசும் மக்களின் கடமை என்ன?

பதில் – இரண்டு ஆசனங்களை வெல்ல வேண்டுமென்னும் ஆர்வம் எங்களிடம் உண்டு ஆனால் எங்களின் ஆர்வம் மக்களின் ஆர்வமாக மாறினால்தான் அது சாத்தியப்படும். சும்மா மேடைகளில் உரத்து பேசுவதன் மூலம் அது சாத்தியப்பட்டுவிடப் போவதில்லை. 2004ல் கூட்டமைப்பு திருகோணமலையில் இரண்டு ஆசனங்களை வெற்றிகொண்டது. ஆனால் 2010இல் 33,000 வாக்குளை பெற்று ஒரு ஆசனத்தையே கூட்டமைப்பால் வெற்றிகொள்ள முடிந்தது.

உண்மையில் 2004இல் கூட்டமைப்பு 65,000 வாக்குகளை பெற்று இரண்டு ஆசனங்களை வெற்றிகொண்ட போது, கூட்டமைப்பின் பின்னால் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்தனர். இந்த உண்மையை மறைப்பது மிகவும் அசிங்கமான அரசியலாகும்.

என்னைப் பொறுத்தவரையில் உண்மைகளை மக்கள் முன்வைப்பதற்கு நாங்கள் தயங்கக் கூடாது. அது ஒரு நல்ல அரசியல்வாதிக்கான முதலாவது தகுதியாகும். தேர்தல் காலத்தில் தாங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் சொந்த மக்களுக்கே பொய்களை சொல்லும் ஒருவர் எப்படி மக்களுக்கு நேர்மையாக இருப்பார்? மக்கள் தங்களது பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது அவர்கள் எந்தளவிற்கு உண்மை பேசுகின்றனர். அவர்கள் எந்தளவிற்கு சாத்தியமான விடயங்களை கூறுகின்றனர், செய்ய இயலுமான விடயங்களை கூறுகின்றனர் என்பதை உன்னிப்பாக அவதானித்து வாக்களிக்க வேண்டும்.

Jathindra (2)திருகோணமலை தேர்தல் களத்தை பொறுத்தவரையில் மக்களின் முன்னாலுள்ள கடமை முடிந்தவரை முழுமையாக வாக்களிப்பதுதான். அது ஒன்றின் மூலமாக மட்டுமே நாங்கள் எதிர்பார்க்கும் இரண்டு ஆசனங்களை பெறமுடியும். மக்களும் திருகோணமலைக்கு இரண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவை என்பதை உணர வேண்டும். வேட்பாளர்கள் மட்டும் உணர்வதால், அது நடந்துவிடப் போவதில்லை. இந்தத் தேர்தலை பொறுத்தவரையில் முஸ்லிம் காங்கிரஸ் ஜக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதால், எங்களால் இலகுவாக இரண்டு ஆசனங்களை வெற்றிபெற முடியாது.

அப்படி வெற்றிபெற வேண்டுமானால், குறைந்தது 90 வீதமான தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும். அதுவும் சரியாக வாக்களிக்க வேண்டும். கடந்த கிழக்கு மாகாணசபை தேர்தலின் போது, திருகோணமலையில் கூட்டமைப்பிற்கு கிடைக்க வேண்டிய 8,000 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. எல்லைப்புற கிராமங்களில் வாழ்கின்ற மக்களுக்கு வாக்களிப்பு குறிப்பாக, விருப்பு வாக்குகளை அளிப்பது தொடர்பில் போதிய விழிப்புணர்வில்லை. அதனை குறுகிய காலத்தில் ஏற்படுத்த முடியுமா என்பதும் ஒரு கேள்விக்குறியே!

எவ்வாறெனினும் நாங்கள் இம்முறை இரண்டு ஆசனங்களை வெற்றிகொள்ள வேண்டுமென்றே முயற்சித்து வருகிறோம்.

கேள்வி –  மூதூர் முஸ்லிம்கள் கூட்டமைப்புக்கு ஆதரவளிக்க முன் வந்துள்ள பின்னணி, அதனால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் மற்றும் ஏனைய பகுதி முஸ்லிம்களுடனான உறவுகளில் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் என்னவாக இருக்கலாம்?

பதில் – முஸ்லிம் காங்கிரஸ் ஜக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுகின்ற நிலையில், அங்கு இடம் கிடைக்காதவர்கள் சிலர் கூட்டமைப்பிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருக்கின்றனர். இதுதான் சில தினங்களாக பேசப்படும் கூட்டமைப்பு – முஸ்லிம் உறவு. அவர்கள் கூறுவது போன்று பெருந்தொகையான முஸ்லிம்கள் கூட்டமைப்பிற்கு வாக்களித்தால் அது இரண்டாவது ஆசனத்தை வெற்றிகொள்வதில் தாக்கம் செலுத்தலாம்.

ஆனால் முஸ்லிம் மக்கள் அந்தளவிற்கு பெருந்தொகையாக வாக்களிப்பார்கள் என்பதில் எனக்கு பெரிய நம்பிக்கையில்லை. ஏனெனில் முஸ்லிம் மக்கள், முஸ்லிம் காங்கிரஸ் அல்லது பிரதான கட்சிகளுடன் இணைந்திருக்கின்ற முஸ்லிம் கட்சிகளை விட்டுவிட்டு கூட்டமைப்புடன் கைகோர்ப்பதால் அவர்களுக்கு கிடைக்கவுள்ள நன்மை என்ன? இப்படியொரு கேள்வியிலிருந்து தான் அவர்கள் தங்களின் முடிவை பரிசீலிப்பர். எனினும் இதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஒரு கருத்து “தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இது கடைசி வாய்ப்பு – யதீந்திரா”

  1. மனோ says:

    மிக நேர்மையான பதில்கள் மூலம் திரு.யதீந்ரா தம்மை ஒரு சிறந்த ஆய்வாளராகவும் மனிதராகவும் வெளிப்படுத்தியுள்ளார். அவரது வெற்றி அவசியம் என்பதை நன்றியோடு பதிவு செய்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *