தாஜுதீன் கொலையில் தனது மகனுக்குத் தொடர்பில்லையாம் – மகிந்த ராஜபக்ச கூறுகிறார்
சிறிலங்காவின் ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மரணத்துடன் தனது மகனுக்குத் தொடர்பிருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோசித ராஜபக்ச தொடர்புபட்ட மும்முனைக் காதல் விவகாரத்தினாலேயே, வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதுகுறித்து கொழும்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மகிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
“தாஜுதீன் மரணம் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படுவதை வரவேற்கிறேன். ஏனென்றால், எமது பெயரை இதிலிருந்து விடுவித்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
ஆனால் இந்த விசாரணையை வைத்து அரசாங்கம் அரசியல் ஆதாயம் தேட முனைகிறது.
அவர்கள் ஆறு மாதங்களாக ஆட்சியில் இருந்தனர். அவர்கள் அதனைச் செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. இந்த வழக்கில் என்னை மாட்டி விடுவதற்காக இதுவரை காத்திருந்தனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் எமது கட்சி ஆட்சியமைத்தால், தாஜுதீன் கொலை தொடர்பாக விசாரணை நடத்தப்படும். உண்மை வெளிவருவதற்காக விசாரணை நடத்தப்பட வேண்டும்.” என்று தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் 117 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி கொள்ளும் என்று கூறிய மகிந்த ராஜபக்சவிடம், உங்களுக்குப் பிரதமர் பதவி தரமுடியாது என்று அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளரே என்று செய்தியாளர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.
அதற்கு மகிந்த ராஜபக்ச, ஓகஸ்ட் 18ஆம் நாளுக்குப் பின்னர் அதுபற்றி பொறுத்திருந்து பார்க்கலாம் என்று பதிலளித்தார்.