தேசிய மனித உரிமைகள் பரிசோதனைப் பொறிமுறை – ஐ.நாவுக்கு சிறிலங்கா விளக்கம்
ஐ.நா அமைதிப்படையில் இணைத்துக் கொள்ளப்படும் சிறிலங்கா படையினரை ஆய்வுக்குட்படுத்தும், தேசிய மனித உரிமைகள் பரிசோதனைப் பொறிமுறை குறித்து ஐ.நாவுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் விளக்கமளித்துள்ளார்.
ஐ.நா பொதுச்சபையின் 81வது கூட்டத்தொடரில் பங்கேற்க நியூயோர்க் சென்றுள்ள அவர், அமைதி நடவடிக்கைகளுக்கான ஐ.நாவின் பிரதிப் பொதுச்செயலாளர் ஜீன்-பியர் லாக்ரோயிக்ஸ் ஐ (Jean-Pierre Lacroix) சந்தித்து பேசியுள்ளார்.
இதன்போதே அவர் இந்த விடயம் குறித்து தெளிவுபடுத்தியதாக எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “அமைதி நடவடிக்கைகளுக்கான ஐ.நாவின் பிரதிப் பொதுச்செயலாளர் ஜீன்-பியர் லாக்ரோயிக்ஸ் உடன் ஒரு பயனுள்ள கலந்துரையாடல் நடைபெற்றது.
ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கை அமைப்பிற்கு நீண்டகாலமாகப் பங்களித்து வரும் சிறிலங்கா உலகளாவிய அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதையும் நிலைநிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட அனைத்துலக அமைதி காக்கும் முயற்சிகளுக்குத் தனது நீடித்த அர்ப்பணிப்பையும் ஆக்கப்பூர்வமான ஆதரவையும் மீண்டும் உறுதிப்படுத்தியது.
மேலும், தேசிய மனித உரிமைகள் பரிசோதனைப் பொறிமுறையின் (NHRSM) முன்னேற்றம் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது“ என்றும் விஜித ஹேரத் அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

