22வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு உடனடியாகவே நடைமுறைக்கு வந்தது
அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நேற்றும் இன்றும் நடந்த இரண்டுநாள் விவாதங்களை அடுத்து, இன்று மாலை 7 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது, 158 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 63 பேர் எதிராகவும் வாக்களித்தனர். எவரும் வாக்களிப்பதில் இருந்து விலகியிருக்கவில்லை.
இதன் மூலம், 22வது திருத்தச் சட்டமூலம் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இந்த திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதுடன் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, அதனைச் சான்றுப்படுத்திக் கையொப்பமிட்டதை தொடர்ந்து உடனடியாகவே அது நடைமுறைக்கு வந்துள்ளது.
அதேவேளை, நீதிமன்றங்கள் (திருத்தச்) சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு, எவ்விதத் திருத்தங்களும் இன்றி நாடாளுமன்றத்தில் இன்று மாலை சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக மொத்தம் 158 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்த அதேவேளை, 62 பேர் எதிராக வாக்களித்தனர்; எவரும் வாக்களிப்பதில் இருந்து விலகி இருக்கவில்லை.
இதற்கிணங்க, சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
