மேலும்

ஈரானியக் கப்பல்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடவில்லை

சிறிலங்காவின் கடல் எல்லைக்கு அருகே நங்கூரமிட்டுள்ள ஈரான் கொடி ஏற்றப்பட்ட  கப்பல்களை சிறிலங்கா அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக, சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் சமிந்த வலகுலுகே தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா கடற்படையும், விமானப்படையும் அந்தக் கப்பல்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அந்தக் கப்பல்கள் சிறிலங்காவின் இறையாண்மைக்குட்பட்ட பிராந்திய நீர்ப்பரப்பிற்கு வெளியே நிற்கின்ற நிலையில்,  அரசாங்கம் அவற்றுக்குப் பொறுப்பேற்கவோ அல்லது துறைமுக வசதிகளையோ பிற உதவிகளையோ வழங்கவோ இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடல்சார் கண்காணிப்பு சேவையான டாங்கர் ட்ராக்கர்ஸ் படி, சுமார் 13 ஈரான் கொடி ஏற்றப்பட்ட கப்பல்கள் உட்பட, 20 ஈரானிய எரிபொருள் தாங்கி கப்பல்கள்  தற்போது சிறிலங்காவின் கடற்கரையில் குவிந்துள்ளன.

மேலும் பல கப்பல்கள், அனைத்துலகத் தடைகளைத் தவிர்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் “நிழல் கப்பற்படை”யின் ஒரு பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய துறைமுகங்களைப் பாதிக்கும் தொடர்ச்சியான அமெரிக்க கடற்படை முற்றுகையின் காரணமாக, கப்பல்கள் வெறுமையாக இருப்பதாகவும், ஈரானிய துறைமுகங்களுக்குத் திரும்ப முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக, மார்ச் மாதம் சிறிலங்கா கடற்கரையிலிருந்து சுமார் 19 கடல் மைல் தொலைவில் ஐஆர்ஐஎஸ் டேனா கப்பல் மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடல்சார் பாதுகாப்பு குறித்த கவலைகளுக்கு மத்தியில், இந்தக் கப்பல்களின் இருப்பு அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில்,  நாட்டின் பிராந்திய நீர்ப்பரப்பிற்கு அப்பால் செயல்படும் வெளிநாட்டுக் கப்பல்கள், அனைத்துலக கடல்சார் சட்டத்தின்படி அனைத்துலக கடல் வழித்தடங்களில் பயணிக்க உரிமை பெற்றுள்ளன என்று சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர்தெரிவித்துள்ளார்.

“குறித்த கப்பல்கள் 12 கடல் மைல் பிராந்திய எல்லைக்கு அப்பாலும், சிறிலங்காவுக்கு வரையறுக்கப்பட்ட அதிகார வரம்பு உள்ள பகுதிகளிலும் இருக்கின்றன.

தனித்துவ  பொருளாதார வலயத்திலும் ஆழ்கடலிலும் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் ஐக்கிய நாடுகள் கடல் சட்ட பிரகடனத்தின்  58 மற்றும் 87 ஆம் சரத்துகளில் கூறப்பட்டுள்ளது.

இந்த விதிகளின் கீழ், பிராந்திய நீர்ப்பரப்பிற்கு வெளியே சட்டப்பூர்வமாக இயங்கும் கப்பல்கள் பொதுவாக அந்தந்தக் கொடி நாடுகளின் அதிகார வரம்பிற்கு உட்பட்டே இருக்கும்.

கப்பல்களைத் தன்னிச்சையாக நிறுத்தவோ அல்லது தடுக்கவோ சட்டப்பூர்வமான அடிப்படை எதுவும் இல்லாதபோதிலும், சிறிலங்கா கடற்படையானது, ரோந்துப் படகுகளைப் பயன்படுத்தி நாட்டின் கடல் வலயங்கள் முழுவதும் 24 மணி நேர கடல்சார் கள விழிப்புணர்வையும் கண்காணிப்பையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

சிறிலங்காவின் அதிகாரங்கள், சுங்கம், நிதி, குடிவரவு மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகள் உள்ளிட்ட குறிப்பிட்ட விடயங்களுக்கும், சட்டவிரோத கப்பல்-கப்பல் பரிமாற்றங்கள் போன்ற சில சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன.

கப்பல்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையோ அல்லது ஒழுங்குமுறை மீறலோ இதுவரை கண்டறியப்படவில்லை அல்லது அறிவிக்கப்படவில்லை.

ஐ.நா. தடைகளை மீறாமலோ அல்லது சிறிலங்காவின் அதிகார வரம்பிற்குள் ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கை நடைபெறாமலோ இருக்கும் பட்சத்தில், கப்பல்களுக்கு எதிராக தலையிடுவதற்கு தற்போது எந்தவொரு சட்டப்பூர்வ தேவையோ அல்லது அடிப்படையோ இல்லை என்றும் சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *