மேலும்

அமெரிக்க- சிறிலங்கா விமானப்படைகளின் கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பம்

சிறிலங்கா மற்றும் அமெரிக்க விமானப்படைகள் இணைந்து நடத்தும் ‘அட்லஸ் ஏஞ்சல் II – 2026’ என்ற கூட்டுப் பயிற்சி  நாளை ஆரம்பமாகி,  செப்டம்பர் 4 ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டுப் பயிற்சி, பேரிடர் மீட்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும், நிபுணத்துவப் பரிமாற்றத்தையும் மையமாகக் கொண்டுள்ளது.

இந்தப் பயிற்சியில், 275 சிறிலங்கா விமானப்படையினர்  69 அமெரிக்க படையினர் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த 3 பங்கேற்பாளர்கள் உட்பட மொத்தம் 347 பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.

வெளிநாட்டுப் பங்கேற்பாளர்களில் பிரித்தானியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

2024-ல் நடைபெற்ற தொடக்கக் கூட்டுப் பயிற்சியைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது.

முதலாவது கட்ட பயிற்சி, சி-130 விமானிகளைப் பரிமாறிக் கொள்வது மற்றும் பராமரிப்பது, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தது.

இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து, தேடுதல் மற்றும் மீட்பு  மற்றும் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளில்  பயன்படுத்துவதற்காக, பீச்கிராப்ட் கிங் ஏர் 360ER விமானம் ஒன்று 2024ஆம் ஆண்டு  அமெரிக்காவினால் சிறிலங்கா விமானப்படைக்கு கொடையாக வழங்கப்பட்டது.

நாளை தொடங்கும் கூட்டுப் பயிற்சி கட்டுநாயக்கவில் உள்ள சிறிலங்கா விமானப்படைத் தளத்திலும், கண்டி உள்ளிட்ட  இடங்களிலும் நடத்தப்படும்.

இதில் சி-130 விமானப் பராமரிப்பு மற்றும் கயிறுச் சுமை செயல்பாடுகள், நகர்ப்புறத் தேடல் மற்றும் மீட்பு,  மருத்துவ உதவி, நிலச்சரிவு உதவி, கட்டுமானப் பொறியியல், சம்பவக் கட்டளை அமைப்புகள் , மத்திய தொடருந்துஅவசரகால உதவி மற்றும் நிகழ்த்து கலைகள் போன்ற செயல்பாடுகள் அடங்கும் என சிறிலங்கா விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார்.

“இந்தப் பயிற்சி, ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்தவும், தொழில்முறை நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ளவும், பேரிடர்கள் மற்றும் பிற அவசரநிலைகளுக்குப் பங்கேற்கும் பணியாளர்கள் திறம்பட பதிலளிக்கும் திறனை மேம்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது,என்றும் அந்த பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருங்கிணைப்பு மற்றும் அவசரகால பதில் திறன்களை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட வகுப்பறை அமர்வுகள், செய்முறைப் பயிற்சி, உருவகப்படுத்துதல்கள் மற்றும் களப் பயிற்சிகள் ஆகியவை இந்தப் பயிற்சியில் அடங்கும்.

இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக, கண்டியில் உருவகப்படுத்தப்பட்ட பேரிடர்-பதில் சூழ்நிலைகளின் போது, ​​பெல் 212 மற்றும் பெல் 412 ரக   உலங்குவானூர்திகள் தேடல் மற்றும் மீட்பு, பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றுதல் மற்றும் இழுவை இயந்திரச் செயல்பாடுகளுக்கு உதவும் பயிற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *