பலாலி விமான நிலைய விரிவாக்கம் குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை
பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்குத் தேவையான நிலத்தின் அளவு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் வான்வழிப் போக்குவரத்து சேவைகள் பணிப்பாளரும், அதன் பேச்சாளருமானதிலின ஸ்ரீ வர்ணசிங்க, இதனைத் தெரிவித்துள்ளார்.
பலாலி விமான நிலையத்தை நிச்சயமாக, விரிவாக்கம் செய்தே ஆக வேண்டும்.
அங்கு தற்போது விமானங்களுக்குத் தேவையான அடிப்படை அணுகுசாலைகளும் வசதிகளும் மட்டுமே உள்ளன.
இதற்கு மேல் எந்தவொரு விரிவாக்கத்திற்கும் நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கும்.
இருப்பினும், விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் நிறுவனம் இன்னும் எந்த விரிவாக்கத்தையும் தொழில்நுட்ப ரீதியாகக் குறிப்பிடவில்லை.
எனவே, தேவைப்படும் நிலத்தின் அளவு இன்னும் தெளிவாக இல்லை.
அவர்கள் விரிவாக்கம் செய்யப் போகிறார்களா இல்லையா என்பதை இன்னும் குறிப்பிடவில்லை. அது அனைத்தும் விரிவாக்கத்தின் தன்மையைப் பொறுத்தது.
நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு முன்னர், அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலம் முதலில் முறையாக எல்லை குறிக்கப்பட்டு அளவிடப்பட வேண்டும்.
எந்தவொரு கையகப்படுத்துதலும் அரசாங்கத் தரநிலைகளின்படி மேற்கொள்ளப்படும். அதற்கேற்ப இழப்பீடு வழங்கப்படும்.
சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபைக்கு சொந்தமான நிலத்திற்குப் பணம் செலுத்தப்பட்டு, அனைத்து இழப்பீடுகளும் மற்றும் அதுபோன்ற அனைத்து விடயங்களும் செய்யப்பட்டு, சரிசெய்யப்பட்டு விட்டன. இது நீண்ட காலமாக நடந்து வருகிறது.
எஞ்சியுள்ள நிலம் பாதுகாப்பு அமைச்சுக்குச் சொந்தமானது. எனக்குக் கிடைத்த தகவலின்படி, பாதுகாப்பு அமைச்சிடம் சில தனியார் நிலங்கள் உள்ளன. அவை போரின் போதோ அல்லது வேறு சமயத்திலோ கையகப்படுத்தப்பட்டவை.
அந்த நிலத்திற்கு அவர்கள் ஏதேனும் பணம் செலுத்தியுள்ளார்களா என்பது எனக்குத் தெரியாது,” என்று கூறினார்.
அதேவேளை பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர், பிரிகேடியர் பிராங்ளின் ஜோசப், பலாலி விமான நிலையத்தை விரிவுபடுத்துவது குறித்துப் பேச்சுக்கள் உள்ளன, ஆனால் அந்தச் சொத்துக்கள் தொடர்பாக என்ன முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது தனக்குத் தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரிவு உள்ளது, அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும், என்றும் அவர் கூறியுள்ளார்.
