குருவிட்ட சிறையில் துப்பாக்கிச் சூடு – வன்முறையில் 2 பேர் பலி, 12 பேர் காயம்
இரத்தினபுரி- குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு கைதிகள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 12 பேர் காயமடைந்ததாகவும் குருவிட்ட காவல்துறையினர் தெரிவித்தனர்.
இன்று காலை சிறைக்குள் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த கைதிகளில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சிறிலங்கா காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர சிறை அதிகாரிகள் முதலில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை பயன்படுத்தினர்.
பின்னர், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர, துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட குறைந்தபட்ச பலத்தைப் பயன்படுத்த அதிகாரிகள் நிர்பந்திக்கப்பட்டதாக சிறிலங்கா நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் இரண்டு கைதிகள் கொல்லப்பட்டனர், மேலும் குறைந்தது 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோதல்களை அடுத்து சிறிலங்கா காவல்துறை , சிறப்பு அதிரடிப் படை மற்றும் இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.




