மேலும்

சிறிலங்கா பொறுப்புக்கூறலை உறுதி செய்ய புதிய வலுவான நடவடிக்கை அவசியம்

அனைத்துலக சட்டத்தின் படி, சிறிலங்கா பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு புதுப்பிக்கப்பட்ட வலுவான நடவடிக்கை அவசியம் என்று, அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு, அனைத்துலக மன்னிப்புச்சபையின் எக்ஸ் தளத்தில் இடப்பட்டுள்ள  பதிவில் இவ்வாறுகூறப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற ஆயுதமோதல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

அந்த மோதலில் உயிர் பிழைத்தவர்களும், அவர்களது குடும்பத்தினரும் ஒவ்வொரு ஆண்டும் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடி போரின்போதும், இறுதிக்கட்டப் போரிலும் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதுடன், தாம் அனுபவித்த துயரங்களுக்கு சாட்சியாக நிற்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் ஊடாக ஆவணப்படுத்தப்பட்டதன் பிரகாரம், மோதலின்போது இடம்பெற்ற அனைத்துலக மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பில், – உண்மை, நீதி மற்றும் இழப்பீடு என்பன உறுதி செய்யப்பட வேண்டியதன் உடனடித் தேவையை இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுறுத்துகிறது.

உள்நாட்டுப் பொறிமுறையின் ஊடாகப் பக்கச்சார்பற்றதும், நம்பகரமானதுமான விசாரணைகள் இடம்பெறுவதை உறுதி செய்வதாக சிறிலங்கா உள்நாட்டிலும், அனைத்துலக ரீதியிலும் பலமுறை வாக்குறுதியளித்த போதிலும், தற்போதைய அரசாங்கம் உள்ளடங்கலாக அடுத்தடுத்து ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் அந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டன.

நாட்டில் ஆழமாக வேரூன்றியிருக்கும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கானது நீதி, நல்லிணக்கம் மற்றும் நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்கான வாய்ப்புக்களை சீர்குலைப்பதுடன் மாத்திரமன்றி, அனைத்துலக சட்டத்தின் பிரகாரம் சிறிலங்கா பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு புதுப்பிக்கப்பட்ட வலுவான நடவடிக்கை அவசியம் என்பதையும் காண்பிக்கின்றது.

மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் தமிழ்ச் சமூகங்களுடனான கலந்துரையாடலின் போது, நீண்டகாலப் பிரச்சினைகளுக்கான தீர்வு மற்றும் கடந்தகால மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் என்பன நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே அரசாங்கத்துடன் அர்த்தமுள்ள ஒத்துழைப்பைக் கட்டியெழுப்ப முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *