மகிந்த, நாமலுக்கு எதிராக கட்டாயப்படுத்தி வாக்குமூலம் – கபில சந்திரசேன குத்துக்கரணம்
சிறிலங்கன் எயர்லைன்ஸ் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவிடம், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, அச்சுறுத்தலின் பேரில் வாக்குமூலம் பெற்றதாக, அவரது சட்டவாளர்கள் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் சத்தியக் கடதாசியை தாக்கல் செய்துள்ளனர்.
2026 மார்ச் 18ஆம் நாளிடப்பட்ட அந்த சத்தியக்கடதாசியின்படி, 2016 எயர்பஸ் விமானக் கொள்வனவு பரிவர்த்தனை தொடர்பான வாக்குமூலத்தில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் சந்தேக நபரின் மனைவி ஆகியோரின் பெயர்களைச் சேர்க்குமாறு தான் அச்சுறுத்தப்பட்டதாக கபில சந்திரசேன கூறியுள்ளார்.
முன்னதாக, எயர்பஸ் ஒப்பந்தத்தின் போது, இலஞ்சமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் 60 மில்லியன் ரூபா பணத்தை, அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் கொடுத்ததாக, கபில சந்திரசேன முந்தைய ஆணைக்குழு வாக்குமூலத்தில் தெரிவித்திருந்ததாக கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
மேலும், 60 மில்லியன் ரூபா முன்னாள் அதிபருக்கு மூன்று தவணைகளாகவும், ரூ. முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜெயரத்னவுக்கு 20 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
எனினும் சத்தியக்கடதாசியில், கபில சந்திரசேன, தனது வாக்குமூலத்தின் எந்தப் பகுதியிலாவது முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவைக் குறிப்பிடுவதாகவோ, அல்லது சிறிலங்கன் எயர்லைன்சில் எயர்பஸ் மாற்று செயல்முறையில் அவர்கள் செல்வாக்கு செலுத்தியதாகவோ, அல்லது முறையற்ற உதவியை வழங்கியதாகவோ, அல்லது பணம் பெற்றதாகவோ, அல்லது தனது மனைவிக்கு இதில் ஏதேனும் தொடர்பு இருந்ததாகவோ குறிப்பிடப்பட்டிருந்தால், அத்தகைய கூற்றுகள் தன்னால் தானாக முன்வந்து கூறப்படவில்லை என்று கூறியுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தால் விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் மற்றும் மிரட்டலைப் பயன்படுத்தி, தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்த அதிகாரியால் இந்தக் கூற்றுகள் பெறப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
2026 மார்ச் 12 அன்று ஆணைக்குழுவின் விசாரணையின் போது, பணிப்பாளர் நாயகம் உட்பட ஆணைக்குழு அதிகாரிகளால் பலமுறை பதிவு அறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டு, அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாக்கப்பட்டதாகவும் கபில சந்திரசேன குற்றம் சாட்டியுள்ளார்.
அதிகாரிகள் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சூழலை உருவாக்கி, முக்கிய பிரமுகர்கள் மற்றும் தனது மனைவி குறித்த, தானாக முன்வந்து வழங்காத வாக்குமூலங்களை அளிக்குமாறு தன்னைக் கட்டாயப்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
முன்னாள் அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அல்லது தனது மனைவியின் செல்வாக்கு அல்லது முறையற்ற ஈடுபாடு குறித்து தனது முந்தைய வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தவை அனைத்தும் கட்டாயத்தின் பேரிலேயே அளிக்கப்பட்டவை என்றும், தனது சுயவிருப்பத்தின் பேரில் அல்ல என்றும் சந்திரசேன மேலும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த அச்சுறுத்தல், சந்திரசேனவை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும், தனது தனிப்பட்ட பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ளச் செய்ததாகவும், மேலும் அவர் வேறுவிதமாக வெளியிடாத தகவல்களை வழங்குமாறு அவரைக் கட்டாயப்படுத்தியதாகவும் அந்த சத்தியக்கடதாசியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
