எரிபொருளை களஞ்சியப்படுத்த போதிய வசதியில்லை
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் எரிபொருள் சேமிப்புத் திறனை மேம்படுத்த எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்ள முந்தைய அரசாங்கங்கள் வலுவான அடித்தளத்தை அமைத்திருந்தால், சிறிலங்கா இன்று எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டிருக்காது
போதுமான எரிபொருள் கையிருப்பை சேமித்து வைப்பதற்கான களஞ்சிய வசதிகள் எங்களிடம் இல்லை.
திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் புதுப்பிக்கப்படவில்லை.
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை முன்னறிந்து, அத்தகைய சூழ்நிலைக்குத் தயாராவதற்காக, நாங்கள் ஆட்சிக்கு வந்த உடனேயே, பல்வகை எரிபொருள் குழாய் அமைப்பதற்கும், திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்வதற்கும், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம்.
திறைசேரி நிதியைக் கொண்டு திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை புனரமைப்புச் செய்யும் பணிகளை அரசாங்கம் ஏற்கனவே தொடங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.
