சிறிலங்கா நடுநிலை, அணிசேரா கொள்கையையே பின்பற்றுகிறது
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், சிறிலங்கா நடுநிலை மற்றும் அணிசேரா கொள்கைளை பின்பற்றி வருவதாக, பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு ஒரு முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா கடற்படை, ஈரானிய கப்பலை மனிதாபிமான ரீதியில் மீட்டதாகவும், இந்த நடவடிக்கை முற்றிலும் உயிர்களைக் காப்பாற்றுவதற்காகவே நடத்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.
மீட்கப்பட்ட ஈரானிய பணியாளர்களுக்கு அரசாங்கம் ஒரு மாத நுழைவிசைவை வழங்கியது, அனைத்துலக சட்டங்களின்படி மருத்துவ பராமரிப்பு மற்றும் மனிதாபிமான ஆதரவை வழங்கியது என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல்கள் தொடர்பாக சாத்தியமான பரந்த சதித்திட்டங்கள் குறித்த புதிய விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.
விசாரணைகள் நியாயமாகவும் வெளிப்படையாகவும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சந்தேக நபர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்படும் வரை நிரபராதிகள் என்று கருதப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
