மேலும்

போர் முடியும் வரை ஈரானிய கப்பல், மாலுமிகளை சிறிலங்கா விடுவிக்காது

அமெரிக்க நீர்மூழ்கியின் தாக்குதலில் ஐஆர்ஐஎஸ் டேனா மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறிலங்கா  மற்றும் ஈரானிய இராஜதந்திரிகள் முறையான கலந்துரையாடல்களைத் தொடங்கியுள்ளன.

ஹேக் உடன்பாடுகள் மற்றும் நடுநிலைமையை பேணும் அனைத்துலக கடல்சார் சட்டங்களை சிறிலங்கா  பின்பற்றுவதால், ஈரானிய மாலுமிகளை திருப்பி அனுப்பும் செயல்முறை நீண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காணாமல் போயுள்ள ஈரானிய கப்பல் பணியாளர்களைக் கண்டுபிடிக்க சிறிலங்கா கடற்படை காலிக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில், தொடர்ந்து தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் மேற்கொண்டு வருகிறது.

இரண்டு கடற்படை கப்பல்கள் தற்போது இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன, மேலும் பல தயார் நிலையில் உள்ளன என்று , சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மீட்கப்பட்ட 84 உடல்களைத் தவிர, நேற்று பிற்பகல் வரை,  மேலதிக உடல்கள் எதுவும் மீட்கப்படவில்லை என்றும், எந்தவொரு வெளிநாட்டுப் படைகளின் ஈடுபாடும் இல்லாமல் சிறிலங்கா கடற்படை மட்டுமே தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, பூர்வாங்க நடவடிக்கைகளின் பின்னர், ஐஅர்ஐஎஸ் புஷேர் கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படும்.

இந்தக் கப்பல்   குழுவினர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்ட பின்னர், அவர்கள் போரில் ஈடுபடாதவர்களாகக் கருதப்படுவார்கள் என்றும், மோதலில் சிறிலங்கா நடுநிலைமையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

அனைத்துலக சட்டத்தின் கீழ், போர்க்கப்பல் ஒன்றை பெறும் ஒரு நடுநிலை நாடு, மோதல் முடியும் வரை அவர்கள் மீண்டும் போர்க்கப்பலில் ஈடுபடுவதைத் தடுக்க, அதன் மாலுமிகளை  தடுத்து வைக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *