சிறிலங்கா அமைதியாக இருக்கக் கூடாது- ஈரானிய தூதுவர்
அனைத்துலக சட்ட மீறல்கள் குறித்து சிறிலங்கா அமைதியாக இருக்கக் கூடாது என சிறிலங்காவுக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஸ் (Alireza Delkhosh) தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அணிசேரா வெளியுறவுக் கொள்கையைக் கொண்ட சிறிலங்கா தற்போதைய சூழ்நிலையில், என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர்,
சிறிலங்கா ஒரு நடுநிலையான நாடு. ஆனால் அனைத்துலக சட்ட மீறல் குறித்து சிறிலங்கா அமைதியாக இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல.
நடுநிலைமை என்பது இந்த நாடு போரில் ஈடுபட்ட ஒரு தரப்பினருடன் இணைந்து செயல்படக்கூடாது என்பதாகும்.
ஆனால் அடிப்படை அனைத்துலக விதிமுறைகள் மீறப்படுவதைக் காணும்போது, இந்த நாடு அமைதியாக இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல.
காசாவில் குழந்தைகளைக் கொல்வது போல,ஈரானில் குழந்தைகளைக் கொல்வதை சிறிலங்கா ஏற்றுக்கொள்கிறதா என்பதை சிறிலங்கா அரசாங்கம் தெளிவாகக் கூறும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
காசாவில் படுகொலைகள் விடயத்தில் அமைதியாக இருக்க வேண்டும் என்று சொல்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதா?
இந்த நாடு காசாவில் படுகொலையைக் காணும்போது அது அமைதியாக இருக்க வேண்டுமா?
அமைதியாக இருப்பதற்கும் நடுநிலை நாடுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
நடுநிலைமை என்பது, இந்த நாடு அமைதியாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
