தமிழ்த் தேசிய பேரவையுடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு
தமிழ்த் தேசிய பேரவையின் பிரதிநிதிகளுக்கும், அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் நடந்த இந்தச் சந்திப்பில், தமிழ்த் தேசிய பேரவையின் சார்பில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், நடராஜா காண்டீபன் ஆகியோரும், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பு தொடர்பான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி சங்,
பல்வேறு கட்சிகளுடனான எமது ஈடுபாட்டின் ஒரு பகுதியாக, அவர்களின் முன்னுரிமைகள் பற்றி அறிந்து கொள்வதற்காக தமிழ்த் தேசிய பேரவையின் பிரதிநிதிகளுடன் ஒரு சிறந்த சந்திப்பு இடம்பெற்றது.
பிராந்திய உறுதித்தன்மையை ஆதரிப்பதற்கும், இரு நாடுகளுக்கும் செழிப்பை முன்னேற்றுவதற்கும் நாம் ஒன்றிணைந்து செயற்படும்போது, அமெரிக்க-சிறிலங்கா கூட்டாண்மை வலுவடையும்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

