சிறிலங்கா பிரதமருக்கு ஐரோப்பாவில் இருந்து கொலை மிரட்டல்
சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு, மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர்,
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் மின்னஞ்சல் பிரதமர் செயலகத்தக்கு வந்துள்ளது.
பிரதமர் செயலகத்தின் மேலதிக செயலர் ஒருவர் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார்.
மின்னஞ்சல் தொடர்பாக கூகுளிடம் அறிக்கை கோரிப் பெற்றுள்ளோம். அதன்படி, அந்த மின்னஞ்சலின் ஐபி முகவரி நெதர்லாந்து மற்றும் ஜெர்மனியில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு அறிக்கை கிடைத்த பின்னர், நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைப்போம்.
அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது குறித்து, 2024ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், அமைச்சின் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
சஜித் பிரேமதாசவை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்த பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த லொக்கு பட்டியின் கூட்டாளி ஒருவர் ஏற்பாடு செய்து வருவதாக அந்த முறைப்பாட்டில் கூறப்பட்டது.
அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்ட போது, முறைப்பாடு செய்தவர் கூறிய தகவல்கள் தவறானவை என்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
