சிறிலங்கா படையினரை நினைவு கூரும் நிகழ்வில் ராஜபக்சவினர் மட்டும்
போரில் உயிரிழந்த சிறிலங்கா படையினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் ராஜபக்சவினர் மட்டும் பங்கேற்றுள்ளனர்.
சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு அருகே உள்ள தேசிய போர்வீரர்கள் நினைவுச் சின்னத்தில் இன்று காலை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இதில் முன்னாள் அதிபர்கள் பங்கேற்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்த நிகழ்வில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர்களான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏனைய முன்னாள் அதிபர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, தாம் யாரையும் கைப்பற்றுவதற்காக போரை நடத்தவில்லை என்றும், நாட்டில் அமைதியை ஏற்படுத்தவே போர் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
“சமாதானத்திற்காகவே நாம் போர் செய்தோம். யாரையும் பிடிப்பதற்காக அல்ல. நாட்டைப் பாதுகாப்பதற்காகவே போர் செய்தோம்?
எதிர்காலத்தில் இவை மீண்டும் நடைபெறுமா- இல்லையா? என்பதைச் சொல்ல முடியாது.
அது வரும் அரசாங்கங்களைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும்.
போர் என்பது துயரச் சம்பவம். எங்கள் இராணுவம் வெற்றி பெற்றது. போரில் ஒரு தரப்பு வெற்றி பெற வேண்டும் தானே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
