இந்தியாவை அகற்ற கோட்டா-மொரகொட சூத்திரத்தைப் பயன்படுத்தும் அனுர
இந்தியாவின் நடுநிலையாளர் வகிபாகத்தை நீக்கச் செய்கின்ற கோட்டா- மொரகொட’ சூத்திரத்தை அனுரவும் பயன்படுத்துகின்றார் என்று சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரி கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.
2024இல் நடைபெற்ற அதிபர் தேர்தல், அதன் பின்னரான நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் வடக்கு, கிழக்கில் தமிழ்க் கட்சிகளுக்கு முன்னெப்போதும் இல்லாதவாறான பின்னடைவுகள் ஏற்பட்டிருந்தன.
கடந்த மே 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான, தேசிய மக்கள் சக்தியை வடக்கு, கிழக்கு மக்கள் தூக்கி எறியச் செய்து, தமிழ்க் கட்சிகள் வாக்கு வங்கி ரீதியாகவும் மக்களின் ஆதரவுத் தளத்திலும் மீள் எழுச்சி அடைந்திருக்கின்றன.
மிகக்குறுகிய காலத்தில் தமிழ்க் கட்சிகளின் மீள் எழுச்சியானது ஜனநாயகத் தளத்தில் அரியதொரு சாதனையாகும்.
இந்தச் சாதனையை நிகழ்த்துவதில் சுமந்திரன், சாணக்கியன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சித்தார்த்தன், டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பல நீண்டகால அனுபவமிக்க தமிழ்த் தலைவர்களின் பங்களிப்பு காத்திரமானது.
தேர்தலுக்கு முன்னதாக, சிறிலங்கா-இந்திய கூட்டு உரையாடலில் (அனுர-மோடி சந்திப்பு) அதிகாரப்பகிர்வுக்கான கோரிக்கை மறைந்து போயுள்ளதை, தமிழ்த் தலைவர்கள் நிச்சயமாக அவதானித்திருப்பார்கள்.
சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்கு, அமைவாக புதுடில்லியால் அந்த விடயம் முன்னிலைப்படுத்தப்படவில்லை.
மறுபுறத்தில், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியலமைப்பு சீர்திருத்த தீர்வினை முன்வைப்பதற்கு பதிலாக, போலியான மார்க்சிய வாதத்தினை மீளப் புதுப்பிக்கும் நடவடிக்கைகளையே முன்னெடுத்துள்ளார்.
அனைவருக்கும் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளே இருக்கின்றன என்ற சிந்தனையையும், தோல்வியடைந்த தென்னிலங்கை அரசியல்வாதிகளின் பேரினவாதப் போக்கில் தேசியப் பிரச்சினையே இல்லையென்ற சிந்தனையையும், அனுர தலைமையிலான அரசாங்கம் வெளிப்படுத்துகின்றது.
அதிகாரப்பகிர்வின் ஆரம்பமாக இருக்கின்ற மாகாண சபைத் தேர்தலுக்கான காலக்கெடுவை அறிவிக்காமல், அதனை நடத்துவதற்கு சட்டத்தில் காணப்படுகின்ற பிரச்சினையை தீர்ப்பதற்காக, சுமந்திரன் முன்மொழிந்த தனிநபர் பிரேரணையை முன்னகர்த்துவதற்கு பதிலாக, காலம் தாழ்த்துகின்ற செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன.
இது, மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு காணப்படுகின்ற ஈடுபாடற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது.
அந்தவகையில், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் வழியிலேயே, அனுரகுமாரவும் பயணிக்கின்றமை தெளிவாக புலனாகின்றது.
அதுமட்டுமன்றி இந்தியாவுக்கு மூலோபய இடங்களை வழங்குவதன் ஊடாக, அதிகாரப்பகிர்வு, தேசியப் பிரச்சினை விடயங்களில் அந்தநாடு கொண்டிருந்த நடுநிலையாளர் வகிபாகத்தை நீக்கச் செய்கின்ற கோட்டாபய-மொரகொட’ சூத்திரத்தினை அனுரவும் பயன்படுத்துகின்றார்.
இவ்வாறான நிலையில், வட, கிழக்கில் எழுச்சி அடைந்துள்ள தமிழ்க் கட்சிகள் உடனடியாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான கோரிக்கைகளையும், அழுத்தங்களையும் கொடுக்க வேண்டும்.
அதற்கு தென்கின் ஆதரவினையும் அவர்களால் பெற்றுக்கொள்ள முடியும்.
அவ்வாறில்லாமல், அனுரகுமாரவின் புதிய அரசியலமைப்புச் சூழ்ச்சிக்குள்ளோ, ஒற்றையாட்சியை நீக்கும் பழைமைவாத கோசத்துக்குள்ளோ சிக்கிக்கொண்டால், அவர்களுக்குள் பிளவுகள் ஏற்படும்.
அந்தப் பிளவுகள் தமிழ்த் தலைவர்கள் தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக் கொள்கின்ற பின்னடைவாகவே இருக்கும்.
அதுமட்டுமன்றி, அவர்களின் மீள் எழுச்சி வீணாகப் போவதோடு, அதிகாரப்பகிர்வுக்கான நீண்டகால முயற்சிகளும் வீணடிக்கப்பட்டு, அரசியல் ரீதியான முடக்க நிலைமையை அனுர அரசாங்கம் ஏற்படுத்தி விடும் ஆபத்தான சூழலே உள்ளது” என்றும் கலாநிதி தயான் ஜயத்திலக தெரிவித்துள்ளார்.